Latest News :

’உடன்பால்’ திரைப்பட விமர்சனம்

522eaa253bc8bc43c230f07ad1eadbd2.jpg

Casting : Linga, Vivek Prasanna, Abarnathi, Gayathri, Charli, Thanam, Dheena, Mayil Sami

Directed By : Karthik Seenivasan

Music By : Sakthi Balaji

Produced By : D Company - KV Durai

 

சென்னையில் சொந்த வீடு வைத்திருக்கும் சார்லி, அந்த வீட்டில் மகன் லிங்கா, மருமகள் அபர்ணதி மற்றும் பேரக்குழந்தையோடு வசித்து வருகிறார். லிங்காவுக்கு தொழில் சரியாக போகாததால் கடன் பிரச்சனை. அதனால், வீட்டை விற்று பிரச்சனையை சமாளிக்க முடிவு செய்பவர், அதற்காக தங்கை காயத்ரியை ஊரில் இருந்து வர வைக்கிறார். அனைவரும் சேர்ந்து வீட்டை விற்றுவிடலாம் என்று சார்லியிடம் சொல்ல, அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.

 

இதற்கிடையே, வணிக வளாகத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு சார்லி சென்று விடுகிறார். திடீரென்று அந்த வளாகம் இடிந்து விழுந்துவிட்டதாக செய்தி வெளியாவதோடு, அதில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தருவதாக அரசு அறிவிக்கிறது. தனது அப்பாவும் அந்த விபத்தில் இறந்து விட்டதாக நினைக்கும் லிங்கா, காயத்ரி ஆகியோர் 20 லட்சம் ரூபாய் கிடைக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்க, அதன் பிறகு எதிர்பாரத சில சம்பவங்கள் நடக்கிறது, அவை என்ன என்பதை நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையோடு இயல்பாக சொல்வது தான் ‘உடன்பால்’.

 

அப்பாவின் தொழிலை சரியாக கவனிக்காமல், கஷ்ட்டப்படும் லிங்கா, தனது அப்பாவையே குறை சொல்லும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். வீட்டை விற்பனை செய்து கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யும் அவர், அது நடக்காது என்று தெரிந்தவுடன் கோபப்படுவது, சில இடங்களில் அப்பாவை நினைத்து கலங்குவது என்று நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

 

லிங்காவின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணதியின் நடிப்பு அருமை. அண்ணன், தங்கையின் பங்கு பிரிக்கும் சண்டையை பார்த்து அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் அமர்க்களம்.

 

லிங்காவின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கணவர் விவேக் பிரசன்னாவை கண்களினால் மிரட்டும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

 

காயத்ரியின் கணவராக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். தனக்கு வசனம் இல்லை என்றாலும், அந்த இடத்தில் மற்ற கதாபாத்திரங்கள் பேசுவதற்கு கமெண்ட் கொடுத்து காட்சிகளை ஜாலியாக நகர்த்தி செல்கிறார்.

 

சார்லி தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். சார்லியின் இளைய மகனாக நடித்திருக்கும் தீனா, அக்காவாக நடித்திருக்கும் தனம், சிறுவன் தர்ஷித் சந்தோஷ், சிறுமி மன்யாஸ்ரீ என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அளவாக நடித்து கவர்கிறார்கள்.

 

ஒரே இடத்தில் கதை நகர்ந்தாலும் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் வெவ்வேறு கோணங்கள் காட்சிகளை ரசிக்க வைக்கிறது. நடுத்தர குடும்ப வாழ்க்கை மற்றும் அவர்களின் வீட்டை மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார்.

 

சக்தி பாலாஜியின் இசை கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் வசனம் ஆகியவை தான் படத்தின் பலம் என்பதை உணர்ந்து அளவான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் ஜி.மதன், கலை இயக்குநர் எம்.எஸ்.பி.மாதவன் ஆகியோரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

ஏ.ஆர்.ராகவேந்திரன் மற்றும் கார்த்திக் ஸ்ரீனிவாசனின் கதை தவறான கண்ணோட்டத்தில் இருந்தாலும், அதை காமெடியாக சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் ஸ்ரீனிவாசன், மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பணத்திற்கு சில மனிதர்கள் செய்யும் பாவச் செயலை படம் முழுவதும் காமெடியாக சொன்னாலும், இறுதியில் லிங்காவின் மகன் மூலம் தலையில் கொட்டியிருக்கிறார்.

 

ஒரே வீட்டில் படம் நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படத்தை நகர்த்தி செல்கிறது.

 

மொத்தத்தில், ‘உடன்பால்’ கலகலப்பான முறையில் கருத்து சொல்லியிருக்கும் படம்.

 

ரேட்டிங் 3.5/5

 

குறிப்பு : ‘உடன்பால்’ திரைப்படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Recent Gallery