Casting : Aishwarya Rajesh, Naren, Manikandan, Abishek
Directed By : Kinslin
Music By : Ghibran
Produced By : 18 Reels - SP Chowthari
முன்னாள் எம்.எல்.ஏ-வை கொலை செய்ய செல்லும் கூலிப்படை கும்பல், ஐஸ்வர்யா ராஜேஷின் காரில் பயணிக்கிறார்கள். அவர்கள் யார்? என்று தெரியாமல் அவர்களுடன் பயணிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களைப் பற்றி தெரிந்துக்கொண்டவுடன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கும் போலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் உதவி கேட்கிறது. போலீஸ் துரத்துவதை தெரிந்துக்கொள்ளும் கூலிப்படையினர், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்தே தப்பிக்க முடிவு செய்ய, இறுதியில் அவர்களிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா? இல்லையா? என்பதை எதிர்பார்க்காத சஸ்பென்ஸோடு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘டிரைவர் ஜமுனா’.
ஜமுனா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கார் ஓட்டுநர் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். கூலிப்படையிடம் சிக்கிக்கொண்ட பிறகு அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை அனைத்து காட்சிகளும் நிரூபிக்கின்றன. படம் முழுவதும் கார் ஓட்டினாலும் கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் விஸ்வரூபம் அமர்க்களம்.
முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கு ஆடுகளம் நரேன், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியானவராக அறிமுமாகி, அடுத்தடுத்த காட்சிகளில் தான் யார்? என்பதை வெளிக்காட்டும் போது நடிப்பில் அசத்துகிறார்.
நரேனின் மகனாக நடித்திருக்கும் மணிகண்டன், ஐஸ்வர்யாவின் தம்பியாக நடித்திருக்கும் அபிஷேக், கூலிப்படை கும்பலை சேர்ந்த போதை ஆசாமி, மற்றும் கோபக்கார ஆசாமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
கதையில் இடம்பெறும் இடங்களில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய், புறநகர் சென்னையை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, கார் பயண காட்சிகளையும், அதில் பயணிக்கும் கதாபாத்திரங்களை மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார்.
ஜிபரானின் பின்னணி இசை திரைக்கதையோடு இணைந்து பயணிக்கிறது. சாலைகளின் அமைதியை ரசிகர்கள் உணரக்கூடிய விதத்தில் அளவான பின்னணி இசையைக்கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராமர், படத்தை வேகமாக நகர்த்துவதற்காக காட்சிகளை மிக சுறுக்கமாக வெட்டியிருக்கிறார்.
முழுக்க முழுக்க கார் பயணத்தை மையப்படுத்தி கதை எழுதியிருக்கும் இயக்குநர் கிங்ஸ்லி, திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக வேகமாக நகர்த்தி செல்வதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
வெறும் கார் பயணம் தான் படமா? என்ற கேள்வி நம் மனதில் எழும் போது எதிர்பார்க்காத திருப்புமுனை கதையில் வர, அதை தொடர்ந்து வரும் காட்சிகள் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.
மொத்தத்தில், ‘டிரைவர் ஜமுனா’ வேகம்.
ரேட்டிங் 3.5/5