Casting : Akash Premkumar, Enakshi Ganguly, Mime Gopi, Chams, Pugazh, VJ Ashikq, Noble, RKV, Priyanka Venkatesh, Anu Priyadarshini, Mithunya, Krithiga, Nizar, Swapna
Directed By : RKV
Music By : Chetan Krishna
Produced By : S Cube Pictures - E.Mohan
காதல் தோல்வியால் மன ரீதியாக பாதிக்கப்படும் நாயகன் ஆகாஷ் பிரேம்குமார், மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சில புத்தகங்களை கொடுத்து அவரை படிக்க சொல்கிறார். அந்த புத்தகங்களை படிக்கும் ஆகாஷ் பிரேம்குமார், இனி காதல் தோல்வியால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, மனிதர்களுக்கு காதல் உணர்வு ஏற்படாமல் இருக்க தீர்வு ஒன்றை கண்டுபிடிக்கிறார்.
இதுவரை யாரும் யோசிக்காத அந்த தீர்வு வித்தியாசமாக இருந்தாலும், விபரீதமான விஷயமாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட தீர்வு மூலம் உலகில் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்கும் ஆகாஷ் பிரேம்குமார் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதையும், அந்த தீர்வின் மூலம் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் ஜாலியாக சொல்வது தான் ‘கடைசி காதல் கதை.’.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகும் சில படங்கள், வெளியான பிறகு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவ உண்டு. அப்படிப்பட்ட ஒரு படமாகத்தான் இந்த படம் பார்த்தவகள் அனைவரையும் வியக்க வைத்து ரசிக்க வைக்கிறது.
அறிமுக நாயகன் ஆகாஷ் பிரேம்குமார், கதைக்கு ஏற்ப இளமையாக இருக்கிறார். தொடாமல் காதலிக்க வேண்டும் என்ற நிபந்தனை போடும் நாயகியை உருகி உருகி காதலித்தாலும், அவ்வபோது அவர் உடல் மீது கொள்ளும் காதலால் தடுமாறும் காட்சிகளிலும் சரி, காதல் தோல்வியால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு புலம்பும் காட்சிகளிலும் சரி மாறுபட்ட நடிப்பை கொடுத்து பாராட்டு பெறுகிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, காதல் காட்சிகள் என அனைத்திலும் ஏறி அடிக்கும் ஆகாஷுக்கு இதுபோன்ற நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் ஆவது உறுதி.
நாயகியாக நடித்திருக்கும் இனாக்ஷி கங்குலி, அளவான நடிப்பாலும், அழகாலும் மனதில் நிற்கிறார். அவர் போடும் காதல் நிபந்தை காதலர்களுக்கு ஆபத்தாக இருந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல் ஆகியோர் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. அதிலும் நாயகனிடம் சிக்கிக்கொண்டு கதறும் காட்சிகளில் திரையரங்கே அதிரும் வகையில் சிரிப்பு சத்தம் கேட்கிறது.
நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் சாம்ஸ் காமெடியில் கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் மைம் கோபி, கோபமாக இருந்தாலும், அவரை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் காமெடி கலாட்டாவாக இருக்கிறது. இவர்களுடன் மருத்துவர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வி-யின் சிகரெட் பழக்கத்தை விடுவதற்கான கண்டுபிடிப்பும், அதை அவர் பயன்படுத்தும் விதமும் மரண காமெடி
பிரியங்கா வெங்கடேஷ், அனு பிரியதர்ஷினி, மிதுன்யா, ஸ்வப்னா, கிருத்திகா, நிஸார் என மற்ற வேடங்களில் நடித்திப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்து படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
சிவசுந்தரின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
சேத்தன் கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருப்பதோடு நம்மை முனுமுனுக்கவும் வைக்கிறது. குறிப்பாக “லட்டு...லட்டு...” உள்ளிட்ட அனைத்து பாடல்களின் வரிகளையும் புரியும்படி இசையமைத்திருக்கும் சேத்தன் கிருஷ்ணா, பின்னணி இசையையும் குறையில்லாமல் கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பி.ஆர்.பிரகாஷ், வசனங்கள் தான் படத்தின் பலம் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
காதல் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வி, இளைஞர்களை கவரக்கூடிய விதத்தில் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட இரட்டை அர்த்தம் வசனங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் முகம் சுழிக்கும் வகையில் இல்லாமல் ரசிக்கும்படியும், சிரிக்கும்படியும் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
படத்தின் மையக்கரு விபரீதமான செயலாக இருந்தாலும் அதை மையப்படுத்திய காட்சிகளை காமெடியாக நகர்த்தி ரசிக்க வைக்கும் இயக்குநர், ஆரம்பத்தில் அதை தீர்வாக சொன்னாலும், இறுதியில் உண்மையான தீர்வு அதுவல்ல என்று சொல்லி படத்தை புத்திசாலித்தனமாக முடித்திருக்கிறார்.
புதுமுக நடிகர்களையும், சில அனுபவ நடிகர்களையும் வைத்துக்கொண்டு ஒரு எளிமையான கதையை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ரசிக்கும்படி மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஆர்.கே.வி, இறுதியில் சொல்லும் மெசஜ் காதலர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்கிறது.
இரண்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியாதவாறு ஒரு காதல் கதையை இளைஞர்கள் ஜாலியாக பார்த்து ரசிக்கும்படியும், சினிமா ரசிகர்கள் சிரித்து மகிழும்படியும் சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.கே.வி தனது வித்தியாசமான முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாகவும், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், இயக்குநர் தான் சொல்ல வந்த விஷயத்தை ரசிகர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் சொல்லி கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில் ‘கடைசி காதல் கதை’ கலகலப்பான கதை.
ரேட்டிங் 3.5/5