Latest News :

’துணிவு’ திரைப்பட விமர்சனம்

3716ec124f8b24868ceb93d8af69eaf6.jpg

Casting : Ajith Kumar, Manju Warrier, Samuthirakani, Ajay, John kokken, Gm sundar, Bucks, Prem, Mohana Sundaram, Veera

Directed By : H.Vinoth

Music By : Ghibran

Produced By : Boney Kapoor

 

சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக சிலர் நுழைகிறார்கள். அந்த கும்பலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அஜித், அவர்களின் உதவியோடு வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், வந்த வேலையை செய்யாமல், வங்கியின் தலைவர், பரஸ்பர நிதி நிறுவன அதிபர் போன்றவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனது திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

 

இதற்கிடையே, காமொண்டோ படை ஒரு பக்கம் அஜித்தை பிடிக்க வலை விரிக்க, மறுப்பக்கம் போலீஸ் கமிஷ்னர் சமுத்திரக்கனி, களத்தில் நேரடியாக இறங்கி அஜித்தை பிடிப்பதற்கான முயற்சிகளை செய்கிறார். இந்த நிலையில், வங்கியில் இருக்கும் மூன்றாவது கும்பல் அஜித்தை சிறைபிடிப்பதோடு, வங்கியில் இருக்கும் பணம் மற்றும் மக்களோடு முழு கட்டிடத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிடுகிறது.

 

கொள்ளை கூட்டங்களின் வெவ்வேறான திட்டங்கள் நிறைவேறியதா? அந்த திட்டங்கள் என்ன? வங்கியில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களை அஜித் காப்பாற்றினாரா? போன்ற கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாகவும், பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகளோடும் சொல்லியிருப்பது தான் ‘துணிவு’.

 

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே வங்கி கொள்ளையை காட்டி நம்மை கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குநர் எச்.வினோத், ஒரே இடத்தில் கதையை நகர்த்தினாலும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்கிறார்.

 

நரைத்த தலைமுடி, நரைத்த தாடி, வெள்ளை நிற உடையில் வலம் வரும் அஜித், மிக இயல்பாக நடித்திருப்பதோடு, மைக்கல் ஜாக்சன் நடன அசைவுகளால் திரையரங்கையே அதிர வைக்கிறார். வில்லத்தனம் கலந்த நடிப்பு, நடுநடுவே ஜாலியான பேச்சு, போலீஸ்காரர்களை கலாய்க்கும் இடம் என நடிப்பில் பல வித்தியாசங்களை காட்டி அசத்தும் அஜித், சிரிக்கவும் வைக்கிறார்.

 

அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார். நடிப்பை காட்டிலும் சண்டைக்காட்சிகள் அவருக்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதில் கச்சிதமாக நடித்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

வங்கி தலைவராக நடித்திருக்கும் ஜான் கொக்கேன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, மிரட்டலாகவும் நடித்திருக்கிறார்.

 

போலீஸ் கமிஷ்னராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, தனது அனுபவமான நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்.

 

வங்கி மேலாளராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பக்ஸ் பகவதி, மகாநதி சங்கர், பால சரவணன், பிரேம் என அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

மூத்த பத்திரிகையாளர் வேடத்தில் நடித்திருக்கும் மோகன சுந்தரம் பேசுவது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், அவருடைய வசனத்துக்கும், எக்ஸ்பிரஷனுக்கும் திரையரங்கே குலுங்க குலுங்க  சிரிக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா வங்கிக்குள் நடக்கும் காட்சிகளையும், வங்கியை தவிர்த்த காட்சிகளையும் பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். அஜித்தின் ‘பில்லா’ படத்தை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக காட்சிப்படுத்திய நிரவ்ஷா, அதே பாணியில் இந்த படத்தின் காட்சிகளையும் கையாண்டிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.

 

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஏகப்பட்ட துப்பாக்கி சண்டைக்காட்சிகள் படத்தில் இருப்பதால், பின்னணி இசையில் வித்தியாசத்தை காட்ட ஜிப்ரான் முயற்சித்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

கலை இயக்குநர் மிலன் மற்றும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த சுப்ரீம் சுந்தர் ஆகியோரது பணி வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், சென்னை அண்ணாசாலையை அப்படியே செட் போட்டிருக்கும் மிலனை தனியாக பாராட்டியாக வேண்டும்.

 

ஆக்‌ஷன் படங்களுக்கு அதிகம் வரவேற்பு கிடைப்பதால் அஜித்தும் அந்த வழியில் பயணிக்க தொடங்கியிருக்கிறார். ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளோடு படம் நகர்ந்தாலும், வங்கிகளால் அப்பாவி மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள், என்ற மெசஜ் மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

 

வங்கி கொள்ளையை மையப்படுத்தி கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் எச்.வினோத், அஜித்தை எப்படி காட்ட வேண்டுமோ அதை மிக சரியாக செய்திருப்பதோடு, அவருக்கான மாஸ் காட்சிகளை கச்சிதமாக வடிவமைத்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.

 

மக்களின் பணத்தை பாதுக்காக வேண்டிய வங்கிகள், அதை எப்படி சுரண்டுகிறது, முதலீடு என்ற பெயரில் ஏழை மக்களின் பணத்தை எப்படி கொள்ளையடிக்கிறது, போன்றவற்றை தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் எச்.வினோத், சில இடங்களில் தற்போதைய அரசியல் பற்றியும் பேசி, அதிரடி காட்டியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘துணிவு’ துணிச்சலான முயற்சியால் வெற்றி பெற்றிருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery