Casting : Vinoth Kishan, Gowri Kishan, Sachin, Rohini, Bala, Suril, Mahendran
Directed By : Jegan Vijaya
Music By : Sundaramurthy KS
Produced By : Thirupathi Brothers N.Lingusamy Presents
ஆர்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் வினோத் கிஷனின், தோழியான கெளரி கிஷன் கடத்தப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார். அவரை காப்பாற்ற துடிக்கும் வினோத் கிஷனால், அவர் இருக்கும் அறையை விட்டு வெளியே வர முடியாத சூழல். இறுதியில் கெளரி கிஷன் காப்பாற்றப்பட்டாரா இல்லையா, என்பதை வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு வித்தியாசமான முயற்சியில் சொல்லியிருப்பது தான் ‘பிகினிங்’.
எளிமையான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஜெகன் விஜயா, கதையின் காட்சிகளை அடுத்தடுத்து சொல்லாமல், திரையை இரண்டாக பிரித்து இரண்டு காட்சிகளை ஒரே நேரத்தில் பார்க்கும்படி செய்திருக்கிறார்.
ஆர்டிசத்தால் பாதிக்கப்பட்ட வேடத்தில் நடித்திருக்கும் வினோத் கிஷனின், வசன உச்சரிப்பு ஆரம்பத்தில் நம் பொறுமையை சோதித்தாலும், போக போக அவர் கதாபாத்திரத்துடன் நாமும் பயணிக்க தொடங்கி விடுகிறோம். உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தையும் கச்சிதமாக கையாண்டிருக்கும் வினோத் கிஷான், அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பெண்களுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் சோகமான கதாபாத்திரத்தில் கெளரி கிஷன் கச்சிதமாக நடித்திருக்கிறார். கடத்தியவனால் உடல் ரீதியாக துன்பப்பட்டவர், நம்பிய காதலனால் மனரீதியாக துன்பப்பட்டு, சோர்வடையும் காட்சிகளில் பெண்களின் இயலாமையை வெளிப்படுத்துகிறார்.
சாக்லெட் பேபி முகத்தை வைத்துக்கொண்டு சதி வேலைகளை மிக சாதாரணமாக செய்யும் சச்சினின் வில்லத்தனம் மிரட்டல். அவர் சிரிக்கும்போதெல்லாம் ஏதோ செய்யப்போகிறார், என்ற அச்சம் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
லகுபரன், மகேந்திரன், சுருளி, பாலா, ரோகிணி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் அளவான நடிப்பில் கவர்கிறார்கள்.
சிறிய அளவிலான பகுதியில் காட்சிகளை படமாக்க வேண்டிய வேலை தான் என்றாலும் அதை கச்சிதமாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரகுமார்.
சுந்தரமூர்த்தி கே.எஸ்-இன் பின்னணி இசை கதையோடு பயணித்துள்ளது.
சி.எஸ்.பிரேம் குமாரின் படத்தொகுப்பு கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.
உருவத்தை பார்த்து பழகுவதை விட உள்ளத்தை பார்த்து பழக வேண்டும், என்ற கருத்தை மையமாக வைத்து இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கியிருக்கிறார்.
கடத்தல் சம்பவம், கற்பழிப்பு, பரி தீர்த்தல் என்று பல சம்பவங்கள் படத்தில் இருந்தாலும் அவற்றை காட்சிகள் மூலம் விளக்காமல் மிக சாமர்த்தியமாக ஒலிகள் மூலம் விளக்கி இயக்குநர் படத்தை நகர்த்தி செல்கிறார்.
அவருடைய வித்தியாசமான முயற்சி வரவேற்க வேண்டியது தான் என்றாலும், அதனால் கதைக்கோ அல்லது திரைக்கதைக்கோ எந்தவிதத்தில் பலம் சேர்த்தது என்பது தான் தெரியவில்லை.
மொத்தத்தில், ‘பிகினிங்’ நல்ல தொடக்கம்.
ரேட்டிங் 3/5