Casting : Gautham Karthik, Ashrita Shetty, Sonarika Bhadoria
Directed By : Kalaprabhu
Music By : KP
Produced By : Kalaipuli S. Thanu
தமிழ் சினிமாவில் பேண்டசி அட்வெஞ்சர் படங்களின் வருகை அரிதான ஒன்று. அப்படி வந்தாலும் அட்வெஞ்சர் காட்சிகளை அலங்கோலமாக கொடுத்து ரசிகர்களை சாகடித்து விடுவார்கள். தமிழ் சினிமாவில் அட்வெஞ்சர் படங்களுக்கு இப்படியான வரலாறு இருக்க, அத்தகைய வரலாற்றை மாற்றும் விதத்தில் மேக்கிங்கில் மிரட்டும் படமாக வெளியாகியுள்ளது இந்த ‘இந்திரஜித்’.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சூரியனில் இருந்து தெறித்து வரும் துகள் பூமியில் விழுகிறது. மனிதர்களின் காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்ட அந்த துகளை சித்தர்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கின்றனர். அவர்களுக்கு பிறகு அந்த துகள் பற்றி யாருக்கும், எதுவும் தெரியமல் போக, தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் பேராசிரியர் சச்சின் கேதகர், அந்த துகளை பற்றி அறிந்து, அதை தேடிச் செல்ல, அவருடன் ஹீரோ கெளதம் கார்த்திக்கும் செல்கிறார். அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார். இறுதியில் அந்த துகள் யாரிடம் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
அட்வெஞ்சர் படம் என்றாலே கதை என்பது பெரிதாக இருக்காது. ஆனால், இந்த படத்தில் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுகாமல் கதைக்கும் இயக்குநர் கலாபிரபு முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, சித்தர்கள் பற்றியும், அவர்களின் சக்தி குறித்தும் சொல்லியிருக்கிறார்.
சாக்லெட் பாயாக துறுதுறு என்று நடித்துள்ள கெளதம் கார்த்திக் ஹீரோயின்களோடு ரொமான்ஸ் செய்வதை காட்டிலும் இயற்கையை தான் அதிகமாக காதலித்திருக்கிறார். பார்க்க மென்மையாக இருந்தாலும் கரடு முரடான இடங்களில் சகட்டுமேனிக்கு விழுந்து புரளும் அவர், இந்த படத்திற்காக அதிகமாகவே உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.
சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என்று இரண்டு நாயகிகள் கதையின் தேவைக்கும், கமர்ஷியல்தேவைக்கும் பயன்பட்டிருக்கிறார்கள்.
சுதான்ஷு பாண்டே, சச்சின் கேதகேர் என அனுபவம் வாய்ந்த நடிகர்களின் கதாபாத்திர அமைப்பும், அவர்களது நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இயக்குநர் கலாபிரபு கலாரசிகராக இருப்பதோடு மிகப்பெரிய இயற்கை ரசிகராகவும் இருப்பார், என்பதை இப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் நமக்கு உணர்த்திவிடுகிறது. படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்களில் எது நிஜம், எது கிராபிக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கிரபிக்ஸும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளது.
ராசா மதியின் கேமரா, இயக்குநர் கலாபிரபு கேட்பதையெல்லாம் கொடுக்கும் அக்ஷய பாத்திரமாக பயன்பட்டிருக்கிறது. படத்தில் இடம்பெறும் பல காட்சிகள், “இதை எப்படி எடுத்திருப்பார்கள்!” என்று ரசிகள் ஆச்சரியப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் கே.பி பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இரச்சல் இல்லாத இசையை கொடுத்திருப்பதோடு, பல சாதாரண காட்சிகளை கூட தனது இசையால் பிரமிப்பான காட்சியாக மாற்றியிருக்கிறார்.
ஆக்ஷன், பேய் பிளஸ் காமெடி, அதை விட்டால் அவ்வபோது வெளியாகும் சில மாஸ் ஹீரோக்களின் சுமார் படங்கள் என்று சோர்வடைந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது அனுபத்தை கொடுக்கும் விதத்தில், இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குநர் கலாபிரபுக்கு பல்லாயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.
இதுபோன்ற படங்களுக்கு கிராபிக்ஸும், காட்சிகளை கையாள்வதும் மிக முக்கியமானது என்பதை இயக்குநர் கலாபிரபு உணர்ந்ததை விட தயாரிப்பாளர் தாணு ரொம்ப நன்றாகவே உணர்ந்திருக்கிறார் என்பதை காட்சிகளின் பிரம்மாண்டம் நமக்கும் புரிய வைக்கிறது.
படத்தில் இப்படி ஏகப்பட்ட பாராட்டுதலுக்குரிய விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதை அமைப்பு சற்று பலவீனமாக உள்ளது. இருந்தாலும், அதை தனது மேக்கிங் திறமையால் பேலன்ஸ் செய்துவிடும் இயக்குநர் கலாபிரபு, சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்பதை மனதில் வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
குறிப்பாக அடர்ந்த காட்டில் நடக்கும் சேஸிங் காட்சி இளைஞர்களை சீட் நுணியில் உட்கார வைத்தால், அந்த புலி காட்சி சிறுவர்களை கவரும் விதத்தில் உள்ளது. இப்படி படம் முழுவதும் ரசிகளை பிரமிக்க வைக்கும் இந்த ‘இந்திரஜித்’ வித்தியாசமான சினிமா விரும்பிகளும், சிறுவர்களும் கொண்டாடும் படமாக உள்ளது.
மொத்தத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் அட்வெஞ்சர் படம் என்றால், நினைவுக்கு வரும் முதல் படம் ‘இந்திரஜித்’ ஆக தான் இருக்கும்.
ஜெ.சுகுமார்