Casting : Ramakrishnan, Sindhiya Lurthu, Big Boss Amir, Vaishnavi Raj, Sriram Karthik, Vishnu Bala, Guhasini, Nimi Manuvel, Vasudevan, Vanthana, Uma Maheshwari, AP Rathnavel
Directed By : Sukumar Azhagarsamy
Music By : Deepan Chakravarthy
Produced By : Sindhiya Lowrde
தமிழகத்தில் நடந்த ஆணவக் கொலைகள் பற்றி டாக்குமெண்டரி படம் எடுப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வரும் நிருபர் சிந்தியாவுக்கு ஆட்டோ ஓட்டுநரான ராமகிருஷ்ணனும், வைஷ்ணவி ராஜும் உதவி செய்கிறார்கள். தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆணவக் கொலைகள் மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரித்து, சம்மந்தப்பட்டவர்களை பேட்டி எடுக்கும் இவர்கள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
இதற்கிடையே, காதல் ஜோடி ஒன்று சிந்தியா குழுவினரிடம் தஞ்சம் அடைய அவர்களுக்கு அடைக்களம் கொடுக்கிறார்கள். ஆனால், காதல் ஜோடியின் பெற்றோர் கொலை வெறியுடன் துரத்த, அவர்களிடம் இருந்து காதல் ஜோடி தப்பித்ததா? இல்லையா?, ஆணவக் கொலைகள் பற்றி சிந்தியா டாக்குமெண்டரி படம் எடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழகத்தில் நடந்த ஆணவக் கொலைகள் சம்பவங்களை மையமாக வைத்து, அதே சமயம் கற்பனை கதைகளை சேர்த்து சாதி வெறியர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
படத்தை தயாரித்திருக்கும் சிந்தியா லூர்து, நிருபராக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சாதி பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகள் பற்றி அறிந்து கோபம் கொள்ளும் காட்சிகளிலும், சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்று அறிவுரை கூறும் காட்சிகளிலும் சமூகத்தின் மீதான கோபத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லன் மற்றும் நாயகன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். சாதி பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், சாதியை விட்டு ஒதுங்கியிருக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருப்பவர், சாதி வெறிப்பிடித்த கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் வைஷ்ணவி ராஜ், சாதி பிரிவினை குறித்தும், பிராமண சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து எழுப்பும் கேள்விகள் கைதட்டல் பெறுகிறது.
பிக் பாஸ் அமீர், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குஹாஷினி, நிமி மானுவல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, அண்ணன் வேடத்தில் நடித்த நிருபர் ஏ.பி.ரத்னவேல் என படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார்கள்.
பிரவீணாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், அங்கு நடக்கும் ஆணவக் கொலைகளின் கொடூரத்தையும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் பிரவீணாவின் கேமரா, கதாபாத்திரங்களின் உணர்வை ரசிகர்களிடம் கடத்துவதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு சேர்ந்து பயணித்துள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் சுகுமார் அழகர்சாமி, சமூகத்தில் நடந்த சாதி கொலைகள் மற்றும் அதன் பின்னணியில் உண்மையில் என்ன நடந்திருக்கும், என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.
சாதி மறுப்பு காதல் திருமணங்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டாலும், அவர்களை சுற்றியிருக்கும் சமூகம் சாதி பிரிவினையை எப்படி தூக்கி பிடிக்கிறது என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இறுதியில் எத்தனை புரட்சியாளர்கள் வந்தாலும், சாதி பிரச்சனை ஒழியாது என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவரையும் அளவாக பயன்படுத்தி தான் சொல்ல வந்த கதையை மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் கதையை கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், ‘வர்னாஸ்ரமம்’ சாதி வெறியர்களுக்கு சாட்டையடி
ரேட்டிங் 3/5