Latest News :

’அயோத்தி’ திரைப்பட விமர்சனம்

908d50d33dc17f4ac449019c2d73c4bb.jpg

Casting : Sasi Kumar, Yashpal sharma, Preethi Asrani, Pugazh, Anju Asrani, Master Advaith, Bose Venkat, Vinoth

Directed By : R.Manthira Moorthy

Music By : N.R Ragunanthan

Produced By : Trident Arts - R.Ravindran

 

அயோத்தியைச் சேர்ந்த தீவிர ராம பக்தரான யஷ்பால் சர்மா, தனது மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் ராமேஸ்வரம் வருகிறார். மதுரையில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் மூலம் ராமேஸ்வரம் போகும் போது வழியில் விபத்து நேர்ந்து, அந்த விபத்தில் யஷ்பால் சர்மாவின் மனைவி அஞ்சு அஸ்ரானி உயிரிழந்துவிடுகிறார். விமானம் மூலம் உடலை காசிக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கும் அவர்களுக்கு சசிகுமார் உதவ முன் வருகிறார்.

 

இதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்வது தங்களது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி யஷ்பால் சர்மா தடுக்கிறார். ஆனால், பிரேத பரிசோதனை உள்ளிட்ட பல மருத்துவ விதிமுறைகளை செய்தால் மட்டுமே உடலை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலையில், உடல் அயோத்திக்கு பயணப்பட்டதா? இல்லையா? இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்த சசிகுமாரின் முயற்சி என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘அயோத்தி’.

 

அயோத்தி என்ற தலைப்பை பார்த்தவுடன் ஏதோ பரபரப்பான ஆன்மீக அரசியல் படமோ! என்று நிகைக்க தோன்றும். ஆனால், இந்த ‘அயோத்தி’ எந்தவித அரசியலும் பேசாமல் மனிதத்தை மட்டுமே மிக அழுத்தமாக பேசியிருக்கிறது.

 

ஆண் ஆதிக்க மனநிலையோடு வாழும் யஷ்பால் சர்மா தீவிர ராமர் பக்தராக இருந்தாலும், வட மாநிலத்தவரின் அக்மார்க்கான பாக்கு எச்சிலை கண்ட இடத்தில் துப்புவது, கடவுள் சேவையை தொழிலாக செய்தாலும் அதை கராராக செய்வது என்று நடிப்பில் தீவிரத்தை காட்டி மிரட்டுகிறார். 

 

யஷ்பால் சர்மாவின் மகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பு படம் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது. அப்பாவின் அடக்குமுறையை எதிர்க்க முடியாமலும், சகித்துக்கொள்ள முடியாமலும் மனதுக்குள் குமுறுவதை கண்களில் வெளிப்படுத்தியிருப்பவர், தனது அம்மாவின் நிலையையும், அவர் உயிரிழந்த பிறகு அவர் உடலையும் பார்த்து கலங்கும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார். பல இடங்களில் தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

Ayothi Movie Review

 

கதாநாயகனாக அல்லாமல் கதாபாத்திரமாக நடித்திருக்கும் சசிகுமார், கதைக்கு என்ன தேவையோ அதை குறையில்லாமல் செய்திருக்கிறார். இருந்தாலும், சசிகுமார் என்ற நடிகருக்கான வாய்ப்பு குறைவாக இருப்பது அவருடைய வேடத்திற்கு மட்டும் இன்றி படத்திற்கும் சிறு குறையாக அமைந்திருக்கிறது.

 

யஷ்பால் சர்மாவின் மனைவியாக ஜானகி என்ற வேடத்தில் நடித்திருக்கும் அஞ்சு அஸ்ரானி மிக இயல்பாக நடித்திருக்கிறார். பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் காணும் இந்த காலத்திலும், ஆண்களுக்கு அடிமையாக பெண்கள் இருக்கும் நிலை தொடர்கிறது, என்ற உண்மையை உரக்க சொல்லும் விதமாக அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருப்பவர், உயிரிழந்த பிறகும் பிணமாக நடித்து வியக்க வைக்கிறார்.

 

சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, அஞ்சு அஸ்ரானி ஆகியோரை சுற்றி நடக்கும் கதையில் போஸ் வெங்கட், புகழ், வினோத் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றாலும் அவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை.

 

அயோத்தி முதல் ராமேஸ்வரம் பயணித்துள்ள ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. அயோத்தியின் புதுவித இடங்களை காட்டியிருப்பவர், நடிகர்களின் உணர்வுகளையும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் நடிப்புக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் மந்திரமூர்த்தி, படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை மனிதர்களின் உணர்ச்சிகளை அளவுக்கு அதிகமாகவே காட்சிப்படுத்தி கதையை நகர்த்தி செல்கிறார். அவை தான் படத்திற்கான பலமாக இருந்தாலும் சில இடங்களில் பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது.

 

சசிகுமார் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு, படம் முழுவதும் அவருக்கான வாய்ப்பை சரியாக கொடுக்காத இயக்குநர் மந்திரமூர்த்தி, இறுதிக் காட்சியில் மட்டும் சசிகுமாரின் கதாபாத்திரத்தை உச்சத்தில் நிற்க வைத்து அவர் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பிவிடுகிறார்.

 

மதத்தை கடந்த மனிதத்தை மட்டுமே மக்கள் போற்ற வேண்டும், என்ற மெசஜை போதனையாக சொல்லாமல், மக்களின் வாழ்வியலை வைத்துக்கொண்டு இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்தி, முதல் பாதியை மிக இயல்பாகவும், கவனமாகவும் நகர்த்தி சென்று பாராட்டு பெறுகிறார். ஆனால், இரண்டாம் பாதியில் காவல் நிலையத்தில் குத்து பாட்டை வைத்து வழக்கமான சினிமாவாக நகர்த்தி செல்ல முயற்சித்திருப்பது சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. 

 

இதுபோன்ற சிறு குறைகளை தவிர்த்து விட்டு ஒரு முழுமையான திரைப்படமாக பார்க்கும் போது நடிகர்களிடம் நடிப்பு வாங்கிய விதம், காட்சிகளை இயல்பாக படமாக்கியது, தேவையில்லாததை பேசாமல், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை பேச வைத்தது போன்றவற்றால் ‘அயோத்தி’ மனதில் நிற்கிறது.

 

மொத்தத்தில், ‘அயோத்தி’ மக்களின் மனநிலையை மாற்றும் உணர்ச்சிப்பூர்வமான படம்.

 

ரேட்டிங் 3.5/5