Latest News :

’இன் கார்’ திரைப்பட விமர்சனம்

abf3f4c8353c5ccac14aa699d91e9d2b.jpg

Casting : Ritika Singh, Sandeep Goyat, Manish Jhanjholia, Gyan Prakash

Directed By : Harsh Warrdhan

Music By : Mathias Duplessy

Produced By : Inbox Pictures - Anjum Qureshi, Sajid Qureshi

 

கல்லூரி மாணவி ரித்திகா சிங்கை, மூன்று பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தில் செல்கிறது. அவர்கள் ரித்திகா சிங்கை கடத்தியது ஏன்? அவர்கள் யார்? அவர்களிடம் இருந்து ரித்திகா சிங் தப்பித்தாரா? இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதிலை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் சொல்வது தான் ‘இன் கார்’.

 

’இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங், மிக பலமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். யார் என்றே தெரியாதவர்கள் திடீரென்று காரில் கடத்தி செல்லும் போது, அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை தனது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தியிருக்கும் ரித்திகா சிங், அவர்களிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது.

 

ரித்திகா சிங்கை கடத்தி செல்லும் சந்தீப் கோயட், மணிஷ் ஜன்ஜோலியா, ஜியான் பிரகாஷ் ஆகிய மூவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, நடிப்பில் காமத்தையும், போதையையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மிதுன் கங்கோபத்யாய் மிக சவாலான பணியை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் காருக்குள் நடப்பது போல் இருந்தாலும், அவற்றை பல்வேறு கோணங்கள் மூலம் காட்சிப்படுத்தி போரடிக்காமல் காட்சிகளை நகர்த்தி செல்கிறார். சண்டைக்காட்சியையும், ரித்திகா சிங்கையும் மிக இயல்பாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் தனது கடுமையான உழைப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் மதியாஸ் டூப்ளிஸியின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் கதையின் போக்கை மாற்றும்படியான இசையை கொடுக்காமல், அளவான பின்னணி இசை மூலம் காட்சிகளை கவனிக்க வைத்திருக்கிறார்.

 

இந்தியாவில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கும் ஹர்ஷ் வர்தன், இதுபோன்ற குற்ற செயல்கள் எதிர்பாராமல் நடப்பது அல்ல திட்டமிட்டே நடத்தப்படுகிறது, என்பதை தைரியமாக சொல்லியிருக்கிறார்.

 

பட்டபகலில், மக்கள் நிறைந்த ஒரு இடத்தில் இருந்து இளம் பெண் கடத்தப்படுவது அதிர்ச்சியளித்தாலும், இதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பல நம் சமூகத்தில் நடத்துக்கொண்டு தான் இருக்கிறது, என்பதை சொல்லும் விதமாக அந்த காட்சியை படமாக்கிய இயக்குநரை வெகுவாக பாராட்டலாம்.

 

பாலியல் குற்ற செயலை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும், அதற்கான எந்தவித தீர்வையும் சொல்லாத இயக்குநர் ஹர்ஷ் வர்தன், பெண்கள் இந்த சமூகத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கான பாதுகாப்பு அவர்கள் மட்டுமே என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

ரித்திகா சிங் எப்படி தப்பிப்பார்? என்ற ஒரு கேள்வி மட்டுமே படத்தை எதிர்பார்ப்போடும், சுவாரஸ்யத்தோடும் நகர்த்தி சென்றாலும், அதை தவிர்த்து மற்ற விஷயங்கள் அனைத்தும் படத்தை தொய்வடைய செய்கிறது. 

 

மொத்தத்தில், ‘இன் கார்’ சுவாரஸ்யம் இல்லாத பயணம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery