Latest News :

’பல்லு படாம பாத்துக்க’ திரைப்பட விமர்சனம்

dce84df400a7ba6d35fbb3593c3ce1e5.jpg

Casting : Atta Kathi Dinesh, Sanjitha Shetty, Shara, Linga, Sai Dhina, Jagan, Rishikanth, Vijay Varadharaj, Abdool

Directed By : Vijay Varadharaj

Music By : Balamurali Balu

Produced By : Magic Rays

 

வாழ்க்கையை வெறுத்த சில இளைஞர்கள் மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட வனப்பகுதி ஒன்றில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அங்கு வரும் அட்ட கத்தி தினேஷ், அவர்களின் தற்கொலை முடிவை மாற்றி, அவர்களுடன் சேர்ந்து அந்த வனப்பகுதியில் பயணிக்கிறார். அப்போது அவர்கள் ஒரு பயங்கரமான பிரச்சனையில் சிக்கி உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். அந்த நேரத்தில் ‘ரெசிடெண்ட் ஈவில்’ நாயகி போல் அதிரடியாக எண்ட்ரி கொடுக்கும் சஞ்சிதா ஷெட்டி, அவர்களை அந்த பயங்கரத்தில் இருந்து காப்பாற்றுவதோடு,  இங்கிருந்து உயிருடன் தப்பிக்க வேண்டுமானால் ”பல்லு படாம பாத்துக்குங்க” என்று சொல்கிறார். 

 

சஞ்சிதா ஷெட்டி ஏன் அப்படி சொன்னார்? யாருடைய பல் படாம பாத்துக்கனும்?, அப்படி பல்லு படாம பாத்துக்கிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் விதத்தில் சொல்வது தான் ‘பல்லு படாம பாத்துக்க’.

 

அட்ட கத்தி தினேஷ், ஷாரா, லிங்கா, சாய் தீனா, ஜெகன், அப்துல், விஜய் வரதராஜ், ஆனந்த் பாபு, ஹரிஷ் பெராடி என மிகப்பெரிய ஆண் நட்சத்திரங்கள் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும் சில நடிகர்கள் கொஞ்சம் ஓவராகவும் நடித்திருக்கிறார்கள்.

 

அட்ட கத்தி தினேஷ் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னாலும் காமெடி பண்ண முடியும் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது காமெடியை விட அப்துலின் காமெடி தான் நம்மை சிரிக்க வைக்கிறது.

 

ஜெகனின் வித்தியாசமான நடிப்பும், அவருக்கு இணையாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் வரதராஜின் வசனங்களும் ஆபாசமாக இருந்தாலும், காமெடியாகவும் இருக்கிறது. அதிலும், பெண்களை பற்றி பேசினாலே ஜெகன் கொடுக்கும் எக்ஸ்பிரஷனும், வசனங்களும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.

 

அதிரடியாக எண்ட்ரி கொடுக்கும் சஞ்சிதா ஷெட்டி, துப்பாக்கியோடு அதிரடி காட்டுவதிலும், பாடல் காட்சியில் கவர்ச்சி காட்டுவதிலும் ரசிகர்களை திருப்திபடுத்துகிறார்.

 

சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சியை காட்டிலும், மற்ற நட்சத்திரங்கள் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் தான் திரையரங்கையே அதிர வைக்கிறது. சில இடங்களில் இரட்டை அர்த்தம் இல்லை, நேரடியாகவே சொல்கிறோம், என்ற பாணியில் அதிர்ச்சியளிக்கவும் செய்கிறார்கள்.

 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்தாலும், படத்தில் இடம்பெறும் வசனங்கள் தான் ரசிகர்களிடம் அழுத்தமாக பதிகிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் விஜய் வரதராஜ், ‘பல்லு படாம பாத்துக்க’ என்ற வார்த்தைக்கு ஏற்ற ஒரு கதையை கவர்ச்சி கலந்த காமெடி படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம்பெறும் பெரும்பாலான வசனங்களில் கவர்ச்சியை தாண்டிய கவுச்சி வாடை அடிக்கிறது.

 

வசனங்களை மட்டுமே நம்பி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் விஜய் வரதராஜன், சில திரைப்பட காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் கலாய்த்து சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், இரட்டை அர்த்த வசனங்களின் ஆதிக்கத்தால் அவருடைய நகைச்சுவை வசனங்களும், காட்சிகளும் எடுபடாமல் போகிறது.

 

மொத்தத்தில், ’பல்லு படாம பாத்துக்க’ பார்க்க வேண்டியவங்க பார்க்கும் படம்.

 

ரேட்டிங் 2.5/5