Latest News :

’கொன்றால் பாவம்’ திரைப்பட விமர்சனம்

735c25c0031abda1664e1cdada78f5b3.jpg

Casting : Santhosh Pradap, Varalakshmi Sarathkumar, Charli, Eshwari Rao, Sendrayan, Rajendran, Subramaniya Siva

Directed By : Dayal Padmanaban

Music By : Sam CS

Produced By : Pratap Krishna and Manoj Kumar.A

 

அப்பா சார்லி, அம்மா ஈஸ்வரி ராவ், மகள் வரலட்சுமி சரத்குமார் என அளவான குடும்பமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான வறுமையோடு வாழ்ந்து வரும் இவர்களின் வீட்டில் ஒரு இரவு தங்கிவிட்டு செல்வதற்கு அனுமதி கேட்கிறார் வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப். இவர்களும் அதற்கு சம்மதிக்கிறார்கள். 

 

இதற்கிடையே, சந்தோஷ் பிரதாப் வைத்திருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் மீது வரலட்சுமிக்கு ஈர்ப்பு வர, அவற்றை அபகரிக்க முடிவு செய்கிறார். அதற்காக தனது தாய், தந்தை உதவியுடன் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்ய திட்டமிடும் வரலட்சுமியின் எண்ணம் ஈடேறியதா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாகவும், வியக்க வைக்கும்படியும் சொல்வது தான் ‘கொன்றால் பாவம்’.

 

மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், வறுமையான வாழ்க்கையை வெறுத்து வாழ்வதை தனது வெறுப்பான பேச்சால் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். கூர்மையான வார்த்தைகளை தனது வேகமான வசன உச்சரிப்பு மூலம் பேசும் வரலட்சுமியின் நடிப்பும், ஒவ்வொரு அசைவும் நெருப்பாக உள்ளது.

 

நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மிக நிதானமான நடிப்பின் மூலம் கவர்கிறார். கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் விதத்தில் கச்சிதமாக பொருந்தும் சந்தோஷ் பிரதாப், தனது அளவான நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

சார்லி மற்றும் ஈஸ்வரி ராவின் அனுபவமான நடிப்பு காட்சிகளுக்கு கூடுதல் மெருகேற்றுகிறது. பார்வையற்றவராக நடித்திருக்கும் செண்ட்ராயன், மீசை ராஜேந்திரன், மனோ பாலா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா என படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்திருப்பவர்கள் கூட கவனம் பெறும் விதத்தில் அவர்களுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது படத்தின் கூடுதல் சிறப்பு.

 

ஒளிப்பதிவாளர் செழியன் 1980 களில் நடக்கும் கதைக்கு ஏற்ப காட்சிகளை மிக தத்ருபமாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக மின்சார விளக்குகளை பயன்படுத்தாமல் இயல்பாக காட்சிகளை படமாக்கியிருக்கும் செழியன், நெருப்பின் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தை வைத்தே பெரும்பாலான காட்சிகளை படமாகிய விதம் வியக்க வைக்கிறது.

 

வாரம் ஒரு படம் வெளியானாலும் படங்களின் டைடில் கார்டில் மட்டுமே இசையமைப்பாளராக இடம்பெற்ற சாம் சிஎஸ், இப்படம் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார், என்று சொல்லும் அளவுக்கு பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். கதையோடு பயணிக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிராக பயணித்திருக்கிறது. “லோலாக்கு..” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், எளிமையான கதையை மிக வலிமையாக சொல்லும் விதத்தில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

”பேராசை பெரும் நஷ்ட்டம்”, என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்திருக்கும் கதையை, விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படமாக கொடுத்தாலும், வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை மிக அழுத்தமாக இயக்குநர் தயாள் பத்மநாபன் பதிவு செய்திருக்கிறார்.

 

ஒரு வீட்டில், ஒரு இரவு நடக்கும் கதையாக இருந்தாலும், நமக்கு அப்படி ஒரு உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை நகர்த்தி செல்லும் இயக்குநர், தான் சொல்ல வந்ததை விறுவிறுபாக சொன்னாலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், அவர்களுடைய மனபோராட்டங்களையும் மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் மிக தெளிவாகவும் புரிய வைக்கிறார்.

 

2 மணி நேரத்திற்கும் குறைவான நீளம் கொண்ட படத்தில் தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு, யூகிக்க முடியாதபடி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் 1980-ம் காலக்கட்டத்தை காட்சிப்படுத்திய விதம், அக்காலக்கத்தில் பழக்கத்தில் இருந்த வார்த்தைகளை வசனங்களில் பயன்படுத்தியது, சிறிய வேடமாக இருந்தாலும் அவர்களை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைத்தது என அனைத்து விஷயங்களையும் மிக தெளிவாக கையாண்டிருக்கிறார்கள்.

 

சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படங்கள் என்றாலே வேகமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், இயக்குநர் தயாள் பத்மநாபன், திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்த விதம், காட்சிகள் மற்றும் வசனம் மூலம் சொல்லப்பட்ட சமூக நீதி, தவறான பாதையில் பயணித்தால் என்னவாகும், போன்ற பல விஷயங்களை படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதியும் வகையில் சொல்லி,  ‘கொன்றால் பாவம்’ வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லர் படம் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கொன்றால் பாவம்’ படத்தை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery