Latest News :

’பியூட்டி’ திரைப்பட விமர்சனம்

9f18380a806275437e1af9fa0cf17169.jpg

Casting : Rishi, Karina Shaa, Singamuthu, Aadash Bala, Gaya Kapoor

Directed By : Ko.Anand Siva

Music By : Elakkiyan

Produced By : Om Jayam Theater - R.Deepak Kumar

 

அழகு என்றாலே ஆபத்து என்று நினைக்கும் நாயகன் ரிஷி, அழகான பெண்களை பார்த்தாலே வெறுப்பதோடு, தனது தந்தை ஆசைப்பட்டது போல், ஊனமுற்ற அல்லது மற்றவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். 

 

இதற்கிடையே தீ விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட நாயகி கரீனா ஷாவை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்ளும் நாயகன் ரிஷி, தன் தந்தை சொன்னது போன்ற ஒரு பெண்ணுடன் தனது இல்லற வாழ்க்கையை தொடங்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் நேரத்தில், நாயகி கரீனா ஷா பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை பழையபடி அழகுப்படுத்திக் கொள்கிறார். 

 

நாயகி அழகாக மாறியதால் அவரை வெறுக்கும் ரிஷி, பழையபடி நாயகியின் அழகான முகத்தை அலங்கோலமாக்கி அதன் பிறகு அவரை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். ரிஷியின் இந்த விபரீதமான முயற்சியால் என்ன நடந்தது?, அழகு என்றாலே ஆபத்து என்று ரிஷி நினைப்பது ஏன்?,  அவருடைய தந்தை இப்படி ஒரு விபரீதமான எண்ணத்தை ரிஷி மனதில் விதைத்தது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘பியூட்டி’ படத்தின் மீதிக்கதை கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ரிஷி தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமாக நடித்திருக்கும் ரிஷி, அப்பா கதாபாத்திரத்தை விட மகன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் கரீனா ஷா, கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்.

 

சிங்கமுத்து, காயா கபூர், ஆதேஷ் பாலா என்று மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

படத்தை தயாரித்திருக்கும் ஆர்.தீபக் குமார் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.தீபக் குமார், கதைக்களத்திற்கு ஏற்றவாறு வண்ணங்களை பயன்படுத்தியிருப்பதோடு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பணியாற்றியிருக்கிறார்.

 

இலக்கியனின் இசையில், வெ.இறையன்பு மற்றும் தமிழ்முருகன் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருப்பதோடு, வரிகள் புரியும்படியும் உள்ளது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

சங்கர்.கே-வின் படத்தொகுப்பு திரைக்கதையின் திருப்புமுனைகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறது. ரவிவர்மாவின் கலை பணி படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாயகனின் வித்தியாசமான வீடும், அதனுள் இருக்கும் பொருட்களும் கவனிக்க வைக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் கோ.ஆனந்த் சிவா, கமர்ஷியலான படமாக இருந்தாலும் அதில் நல்ல மெசஜை ரசிக்கும்படியும், மக்களை யோசிக்க வைக்கும்படியும் சொல்லியிருக்கிறார்.

 

உடல் அழகை காட்டிலும் மன அழகு தான் முக்கியம், என்பதை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் அழகான பெண்கள் அனைவரும் தவறானவர்கள் இல்லை, என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

 

நாயகன் ரிஷி செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ஆபத்தாக இருந்தாலும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது. 

 

படத்தின் முதல் பாதி சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதி திரைக்கதை அத்தனை குழப்பங்களையும் தீர்த்து தெளிவான தீர்வை சொல்வதோடு, நியாயமான முடிவை கொடுத்து முழுமையான கமர்ஷியல் படமாக ரசிகர்களை திருப்தியடைய செய்வதோடு, படத்தில் சொல்லப்பட்ட மெசஜ் நல்ல படம் பார்த்த மன நிறைவையும் தருகிறது.

 

மொத்தத்தில், ‘பியூட்டி’- யில் இருக்கும் ஆபத்து படத்தில் இல்லை.

 

ரேட்டிங் 3/5