Latest News :

’மெமரீஸ்’ திரைப்பட விமர்சனம்

2356e9c3c1713253e7436877dab89a46.jpg

Casting : Vettri, Ramesh thilak, Hareesh peradi, RNR Manohar, Sajil, Dayana, Parvathy

Directed By : Syam and Praveen

Music By : Gavaskar Avinash

Produced By : Shiju Thameen's Film Factory - Shiju Thameens

 

மருத்துவத்துறையில் வியக்கத்தக்க ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வெற்றி பெறும் மருத்துவர் ஒருவர், தனது கண்டுபிடிப்பை தனது சுயநலத்துக்காக தவறான செயலுக்கு பயன்படுத்துகிறார். அதனால் பாதிக்கப்பட்ட நாயகன் வெற்றி, தனது நினைவுகளை இழந்து விட, அவரை பல்வேறு பிரச்சனைகள் துரத்துகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்காக தான் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் வெற்றி அதை கண்டுபிடித்தாரா? இல்லையா?, மருத்துவருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்வது தான் ‘மெமரீஸ்’.

 

மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் வெற்றி, உருவத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பது போல், நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக வெற்றி யார்? என்ற உண்மையான கதையில் அவருடைய நடிப்பு பாராட்டும்படி உள்ளது. 

 

கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படங்கள் என்றாலே வெற்றி தான் சரியாக இருப்பார், என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து ஒரே ஜானர் படங்களில் வெற்றி நடித்து வருவதால் அவருடைய நடிப்பும் நமக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது. இனி இதுபோன்ற படங்களில் நடிப்பதை கொஞ்சம் குறைத்துக்கொண்டு கமர்ஷியல் படங்களில் சராசரியான கதாபாத்திரத்தில் நடித்தால் வெற்றிக்கு கோலிவுட்டில் பல வெற்றிகள் கிடைப்பது உறுதி.

 

நாயகியாக நடித்திருக்கும் பார்வதி கதையில் ஒரு கதாபாத்திரமாக வந்தாலும் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் டயானாவும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், சாஜில் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரம் புரியாத புதிராக இருந்தாலும், இறுதியில் அனைத்து குழப்பங்களையும் தீர்த்து வைக்கின்றன.

 

ஒளிப்பதிவாளர்கள் அர்மோ மற்றும் கிரண் நிபிடல் வெற்றியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடியிருக்கிறார்கள். காடு, மலை என அலைத்திருக்கும் கேமரா கதை பயணிக்கும் பாதையில் பங்கம் இல்லாமல் பயணித்திருக்கிறது.

 

கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், இப்படி ஒரு கதையை புரிந்துக்கொண்டு படத்தொகுப்பு செய்ததும், அதை ரசிகர்களுக்கு புரிய வைத்ததும் மிகப்பெரிய சவால் நிறைந்த பணி. ஆனால், அந்த சவாலை மிக சாமர்த்தியமாக எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்.

 

அஜயன் பாலாவின் வசனங்கள் நாயகனின் ஒருதலை காதலை வெளிப்படுத்தும் போது கவனம் ஈர்க்கிறது.

 

ஷியாம் மற்றும் பிரவீன் ஆகியோர் எழுதி இயக்கியிருக்கிறார்கள். எளிமையான கதையை குழபங்கள் நிறைந்த திரைக்கதையாக்கி, அதை தெளிவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

 

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலே பல திருப்புமுனைகள் இருக்கும், ஆனால் இந்த படத்தில் கதையை திருப்புமுனையாக மாற்ற நினைத்திருக்கும் இயக்குநர்கள் ஒரே கதையை பல முறை, பல்வேறு நடிகர்களை வைத்து சொல்லியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, சற்று சலிப்படையவும் செய்கிறது.

 

இருப்பினும், வெற்றி யார்? என்ற கேள்வி படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘மெமரீஸ்’ கவனமாக பார்க்கவில்லை என்றால் நம்ம மெமரீஸை அழித்துவிடும்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery