Latest News :

’அகிலன்’ திரைப்பட விமர்சனம்

e5de5037d3a48c1329374591f0dce805.jpg

Casting : Jayam Ravi, Priya Bhavanishankar, Tanya Ravichandran, Chirag Jani, Tharun Arora, Madhusudhan Rao, Harish Peradi,

Directed By : N Kalyan Krishna

Music By : Sam CS

Produced By : Screen Scene Media Entertainment PVT LTD -

 

துறைமுகத்தையும், அதில் பணியாற்றும் அதிகாரிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சட்டவிரோதமான வேலைகளை செய்பவர் ஹரிஷ் பெராடி. அவருக்கு கீழ் பணியாற்றும் ஜெயம் ரவி, எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவராக இருக்கிறார். இதற்கிடையே, ஹரீஷ் பெராடியை ஓரம் கட்டிவிட்டு, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடும் ஜெயம் ரவிக்கும், ஹரிஷ் பெராடிக்கும் மோதல் ஏற்படுகிறது.

 

இதனால், ஜெயம் ரவியை கொலை செய்ய முடிவு செய்யும் ஹரிஷ் பெராடி, அதற்காக அவரை பின் தொடரும் போது ஜெயம் ரவி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது?  என்பதை பல திருபங்களுடன் சொல்லியிருப்பதே ‘அகிலன்’ படத்தின் மீதிக்கதை.

 

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் ஜெயம் ரவி, அகிலன் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாக நடித்து அசத்தியிருக்கிறார். யாரையும் நம்பாத அதே சமயம் நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதோடு, யாரையும் மதிக்காமல் மிக இயல்பாக வலம் வரும் அகிலன் கதாபாத்திரத்தை ஜெயம் ரவி கையாண்ட விதம் கைதட்டல் பெறுகிறது. 

 

நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்திற்கு சற்று பொருந்தாது போன்று இருந்தாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் வேடம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

 

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிரக் ஜானி துடிப்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். 

 

ஹரிஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதனன், ஹரிஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்கள்.

 

விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக துறைமுக காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

 

சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்தினாலும், போக போக ஒரே மாதிரியான இசையை கொஞ்சம் இரைச்சலாக கொடுத்து சலிப்படைய செய்துவிடுகிறார்.

 

படத்தொகுப்பாளர் என்.கணேஷ்குமார் துறைமுக காட்சிகளை நேர்த்தியாக தொகுத்தாலும், ஒரே மாதிரியான காட்சிகள் திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம்.

 

‘பூலோம்’ படத்தின் மூலம் விளையாட்டுத்துறையில் இருக்கும் அரசியல் மற்றும் வியாபாரத்தை அளசி ஆராய்ந்த இயக்குநர் என்.கல்யாண் கிருஷ்ணா, இந்த படத்தில் சர்வதேச அளவில் கடலில் நடக்கும் கடத்தல் சம்பவங்களையும், அதன் பின்னணியையும் ஆராய்ந்திருக்கிறார்.

 

விலைவாசி உயர்வு, உணவு பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட உலக அளவில் ஏற்படும் பல பிரச்சனைகளில் கடல்வழி சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிப்பதை விரிவாக பேச முயற்சித்திருக்கும் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா, அதே சமயம் நேர்மையான வழியை விட, நேர்மையற்ற வழியில் தான் கடல்வழி சரக்கு போக்குரவத்து நடைபெறுகிறது என்பதை தைரியமாக சொல்லியிருக்கிறார்.

 

படத்தில் காட்டப்படும் துறைமுகம் மற்றும் அங்கு நடக்கும் பணிகள் திரையில் நாம் பார்க்காத புதிய விஷயங்களாக இருப்பதோடு ரசிக்கும்படியும் இருக்கிறது. ஆனால், ஜெயம் ரவி தனக்கான சவாலை மிக எளிதாக கடந்து ஒவ்வொரு வேலையையும் செய்து முடிப்பது தான் சற்று லாஜிக் மீறலாக இருக்கிறது.

 

ஜெயம் ரவி கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம், படத்தில் வரும் எதிர்பாராத திருப்புமுனை ஆகியவை முதல் பாதியை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல,  இரண்டாம் பாதி படம் ஜெயம் ரவி நினைத்தது நடக்குமா? அவருடைய லட்சியத்தில் வெற்றி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்போடு விறுவிறுப்பாக நகர்கிறது.

 

மொத்தத்தில், புதிய களத்தில் பயணித்திருக்கும் ‘அகிலன்’-னை அனைவரும் கொண்டாடுவார்கள்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery