Latest News :

‘இரும்பன்’ திரைப்பட விமர்சனம்

a28a7d2b436af0010f5d8624b8ebebb0.jpg

Casting : Junior mgr, Yogibabu, Aishwarya dutta,Shaji Choudhary Sendrayan, Raksitha, Aswini, Manimaran, Sampathram, Kayal Devaraj

Directed By : Keera

Music By : Srikanth Deva

Produced By : Lemuria Movies - Tamil Bala & R.Vinothkumar

 

நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆரிடம் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா நட்பாக பழகுகிறார். ஐஸ்வர்யா தத்தா மீது ஜுனியர் எம்.ஜி.ஆருக்கு காதல் மலர்கிறது. ஆனால் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதென முடிவு செய்து ஜெயின் மடத்தில் சேர்ந்துவிடுகிறார். ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதை விரும்பாத ஜுனியர் எம்.ஜி.ஆர் அவரை துறவி மடத்தில் இருந்து கடத்த திட்டமிட, அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும், அவரது காதல் கைகூடியதா? இல்லையா? என்பதையும் கமர்ஷியலாக சொல்வது தான் ‘இரும்பன்’.

 

நாயகனாக நடித்திருக்கும் ஜுனியர் எம்.ஜி.ஆர் முதல் படத்திலேயே காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, சண்டைக்காட்சி, நடனம் என அனைத்து ஏரியாவிலும் தனது திறமையை நிரூபிக்க கடுமையாக உழைத்திருக்கிறார். இருந்தாலும், நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் அசத்தியிருப்பவர் நடிப்பில் சற்று தடுமாறுகிறார்.  ஆக்‌ஷன் படங்களுக்கு ஏற்றவாறு இருக்கும் ஜுனியர் எம்.ஜி.ஆர், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், என்று அடம் பிடிக்காமல் நல்ல படங்களில், நல்ல வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டால் எம்.ஜி.ஆரின் பெயருக்கு பெருமை சேர்க்கலாம்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பதை விட குட்டை பாவாடை அணிந்து அதிகம் கவனம் ஈர்க்கிறார்.

 

யோகி பாபு வரும் காட்சிகள் அதிகமாக இருப்பது போல், காமெடியும் நிறைவாகவும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. கூடுதல் காமெடிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் செண்ட்ராயன் தன்னால் முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் ஷாஜி சவுத்ரி, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சம்பத்ராம், நாயகனின் தந்தையாக நடித்துள்ள யோகி தேவராஜ், மணிமாறன், அஸ்வினி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

லெனின் பாலாஜியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் பளிச்சென்று இருப்பதோடு, கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது. கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

 

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் இனிமையாகவும், துள்ளல் ரகமாகவும் இருக்கிறது. ”நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி...” பாடலின் ரீமிக்ஸ் திரையரங்கையே ஆட்டம் போட வைப்பது உறுதி. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் கீரா, நரிக்குறவர்கள் பற்றிய படமாக எடுக்க முயற்சித்தி பிறகு நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆருக்கான படமாக இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கமர்ஷியலான படமாக கொடுக்க முடிவு செய்திருப்பவர் சில இடங்களில் சிறுசிறு அரசியல் பேசினாலும் அவை கவனம் பெறாமல் போகிறது.

 

மெதுவாக நகரும் திரைக்கதை, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் இஷ்ட்டத்திற்கு நடிகர்கள் பேசிக்கொண்டு இருப்பது போன்றவை மூலம் கொஞ்சம் கடுப்பேற்றினாலும், பாடல்கள், சண்டைக்காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிக்கவும் வைக்கிறான் இந்த ‘இரும்பன்’.

 

ரேட்டிங் 2.75/5