Casting : Prajin, Vidya Pradeep, Charlie, Raghul Madhav
Directed By : Balaji
Music By : Srijith Edavana
Produced By : BMASS Entertainment - Manoj
தென்காசி மாவட்டத்தில் உள்ள டி3 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பிரஜின், அப்பகுதியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளம் பெண் வழக்கை விசாரிக்கும் போது, அதேபோன்று பல சம்பவங்கள் அங்கு நடந்திருப்பதை கண்டுபிடிக்கிறார். அதன் பின்னணி குறித்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் பிரஜினுக்கு பல பிரச்சனைகள் வர, அவற்றை சமாளித்து குற்றத்தின் பின்னணியையும், குற்றவாளிகளையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சஸ்பென்ஸாக சொல்வதே ‘டி3’-யின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, கவனமாகவும் நடித்திருக்கிறார். அதிகமாக பேசாமல் உடல்மொழி மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பவர் தனது நடிப்பு மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப்புக்கு வேலை குறைவாக இருந்தாலும், அதை நிறைவாக செய்து கவனம் பெறுகிறார்.
பிரஜினின் நண்பராக நடித்திருக்கும் ராகுல் மாதவ் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
ரவுடியாக நடித்திருப்பவர், சார்லி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
மணிகண்டன்.பி.கே-வின் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் எடவானாவின் இசையும் கதைக்கு ஏற்ப பயணிப்பதோடு, காட்சிகளுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.
மர்மான கொலைகள், மாயமாகும் மனிதர்கள் என்று ஆரம்பத்திலேயே நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் இயக்குநர் பாலாஜி, அடுத்தடுத்த சம்பவங்கள் மற்றும் காட்சிகள் மூலம் யார்? எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்போடு படத்தை பார்க்க வைக்கிறார்.
பிரஜின் குற்றவாளிகளை நெருங்கும் போதெல்லாம் அங்கு ஒரு திருப்புமுனையை வைத்து, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை நகர்ந்தாலும், ஒரு கட்டத்தில் அதுவே சலிப்படைய செய்துவிடுகிறது.
இறுதியில், குற்ற பின்னணியின் ரகசியத்தை வெளிப்படுத்தும் போது இயக்குநர் பாலாஜி சொல்லும் மருத்துவ குற்றமும், அதை செய்யும் விதமும் மற்ற க்ரைம் த்ரில்லர் படங்களில் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
மர்மான கொலைகள் மற்றும் கடத்தல்கள் சம்பவங்களை காட்சிப்படுத்திய விதம் மிகப்பெரிய லாஜிக் மீறலாக இருந்தாலும், அதன் பின்னணியில் சொல்லப்படும் குற்ற செயலும், அதை செய்பவர்களின் பின்னணியும் புதிதாக இருப்பதோடு, புருவத்தை உயர்த்தவும் செய்கிறது.
மொத்தத்தில், ‘டி3’ வழக்கமான பாணியாக இருந்தாலும், புதிய முறையில் சொல்லியிருக்கிறார்கள்.
ரேட்டிங் 3/5