Latest News :

‘கப்ஜா’ திரைப்பட விமர்சனம்

f151ce8d4103765462666514d2e2ab02.jpg

Casting : Upendra, Shiva Rajkumar, Sudeep, Shriya Saran, Murali Sharma, Sudha, Dev Kill,

Directed By : R.Chandru

Music By : Ravi Basrur

Produced By : Anand Pandit, R. Chandru, Alankar Pandian

 

சுதந்திர வீரரின் மகனும், இந்திய விமானப்படை விமானியுமான நாயகன் உபேந்திரா, தனது அண்ணனின் கொடூரமான கொலைக்கு பழி தீர்க்க களத்தில் இறங்குகிறார். ஆனால், காலம் அவரை இந்தியாவே பார்த்து மிரளும் நிலழ் உலக தாதாவாக மாற்றிவிடுகிறது. அவர் அப்படி மாறியது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? அவரை அடக்க இந்திய அரசு என்ன செய்தது? போன்ற கேள்விகளுக்கான விடையை பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகளோடு சொல்வதே ‘கப்ஜா’ படத்தின் கதை.

 

நாயகன் உபேந்திரா ஆர்கேஷ்வரன் என்ற வேடத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்தியிருக்கிறர். இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர், படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் ரஜினியின் உடல்மொழியோடு நடிக்கவும் செய்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்கியிருக்கிறார். ஒரு பாடல் மூலம் நடனத்தில் கவனம் ஈர்ப்பவர், குறையில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார்.

 

படத்தில் ஏகப்பட்ட வில்லன் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கதையில் கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு ஏற்றபடி இருப்பதோடு, மிரட்டலாகவும் இருக்கிறார்கள். 

 

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் வரும் காட்சிகள் கைதட்டல் பெறுகிறது.

 

ஒளிப்பதிவாளர் ஏ.ஜே.ஷெட்டி காட்சிகளை பிரமாண்டமாக கட்ட மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். எது செட், எது கிராபிக்ஸ் என்று தெரியாதவாறு காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘கே.ஜி.எப்’ படத்திற்கு பயன்படுத்திய அதே பாணியை இந்த படத்திலும் பயன்படுத்தியிருப்பதால் பின்னணி இசை கவனம் ஈர்க்கவில்லை. “நடராஜா...” பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

 

படத்தொகுப்பாளர் எஸ்.ரெட்டி, படத்தில் இருக்கும் குறைகளை முடிந்தவரை மறைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி சில காட்சிகள் குழப்பத்தையும், சலிப்படையும் ஏற்படுத்துகிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.சந்துரு ‘கே.ஜி.எப்’ படத்தின் பாதிப்பால் தான் இப்படி ஒரு படத்தை எழுதி இயக்கியதாக சொல்லியிருந்தார். ஆனால், அவருடைய ஒவ்வொரு நரம்பிலும் கே.ஜி.எப் படத்தின் பாதிப்பு இருப்பதை படத்தின் அனைத்து காட்சிகளும், அதை வடிவமைத்த விதமும் நிரூபிக்கிறது.

 

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களை வைத்திருக்கும் இயக்குநர் சந்துரு, அவர்கள் யார்? என்பதை படம் பார்ப்பவர்களுக்கு புரிய வைப்பதற்காகவே தனியாக ஒரு படம் எடுக்க வேண்டும் போலியிருக்கிறது. அந்த அளவுக்கு எக்கச்சக்கமான நடிகர்களை வைத்து குழப்பியிருக்கிறார்.

 

ஒரு படத்தின் தாக்கம் அதேபோன்று பல படங்கள் வருவதற்கு வழி வகுப்பது சகஜமானது தான் என்றாலும், அந்த படத்தின் பாதிப்பு தெரியாதவாறு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைப்பது தான் இயக்குநரின் புத்திசாலித்தனம். ஆனால், இயக்குநர் சந்துரு, இயக்குநராக அல்லாமல் ரசிகராக ஒரு படத்தால் பாதிக்கப்பட்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

 

காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அதை பிரமாண்டமாக காட்டியது உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக படம் ரசிக்க வைப்பதோடு, காட்சிக்கு காட்சி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

 

தொழில்நுட்ப ரீதியாக படத்திற்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை போல், கதை மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் ‘கப்ஜா’ இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மற்றொரு கன்னட படமாக அமைந்திருக்கும்.

 

மொத்தத்தில், பிரமாண்டத்திற்காகவும், ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் ‘கப்ஜா’-வை ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery