Casting : Nishant Russo,Vivek Prasanna, Gayathri Iyer, Ratsasan Vinodh, Kodangi Vadivel, Gowtham, Rajesh, Anand, Athik
Directed By : Dhanabalan Govindaraj
Music By : Renjith Unni
Produced By : Lights On Media - Eav Suresh, Sundhara Krishna.P, Venki Chandrsekhar
சிறு சிறு திருட்டுகள், அடிதடி என்று காவல் நிலையத்தின் குற்றவாளி பட்டியலில் இருப்பவரான நாயகன் நிஷாந்த் ரூஷோ, இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் மிளகு காட்டுக்கு வழிகாட்டுவதற்காக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோடங்கி வடிவேலுடன் செல்கிறார். அப்போது பிணத்தின் கையோடு, நிஷாந்தின் கையையும் சேர்த்து விலங்கு போட்டுவிட்டு போன் பேச சென்றுவிடுகிறார் சப் இன்ஸ்பெக்டர்.
அந்த சமயத்தில் இறந்துவிட்டதாக நினைத்த இளைஞருக்கு திடீரென்று நினைவு வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் நிஷாந்த் பயப்படுகிறார். அப்போது அந்த இளைஞரின் கைப்பேசிக்கு வரும் அழைப்பில் பேசும் பெண், அங்கிருப்பது தனது கணவர் என்றும், அவரை காப்பாற்றினால் பத்து லட்ச ரூபாய் தருவதாக சொல்கிறார்.
பணத்திற்காக அந்த இளைஞரை காப்பாற்ற முடிவு செய்யும் நிஷாந்த், அந்த இளைஞருடன் காட்டில் பயணிக்க தொடங்க, ஒரு பக்கம் அவரை கொலை செய்ய முயற்சித்த கும்பல் துரத்துகிறது. மறுபக்கம் போலீஸ் துரத்துகிறது. இறுதியில் நிஷாந்த் அவரை காப்பாற்றினாரா? இல்லையா? அவரை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்? எதற்காக? என்பதை சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘பருந்தாகும் ஊர் குருவி’ படத்தின் மீதிக்கதை.
முதல் படமாக இருந்தாலும் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிக இயல்பாக நடித்திருக்கும் நாயகன் நிஷாந்த் ரூசோ, துறுதுறு நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
தன்னை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்? என்றே தெரியாமல் உயிர் பயத்தோடு பயணிக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் தனது கதபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ஐயர், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் சாகர், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கோடாங்கி வடிவேலு ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
விவேக் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சிக்கும் கவுதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகிய நாள்வர் கூட்டணிக்கு வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், அவர்களுடைய செயல்கள் கவனம் பெறுகிறது.
ஒளிப்பதிவாளர் அஷ்வின் நோயல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். காட்டில் பயணிக்கும் கதையை பரபரப்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை வெவ்வேறு கோணங்களில் காட்டி ரசிக்க வைக்கிறார்.
இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னியின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
ஒரு இரவு மற்றும் ஒரு பகலில் நடக்கும் கதையில் தேவையில்லாத விஷயங்களை திணிக்காமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், அதே சமயம் எளிமையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ்.
படம் தொடங்கிய சில நிமிடங்களியேலே நம் கவனத்தை ஈர்த்துவிடும் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ், இரண்டு கதாபாத்திரங்களை வைத்துகொண்டு காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி ரசிக்க வைக்கிறார். ஆனால், இதே நிலை இரண்டாம் பாதியில் நீடிக்காதது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்து விட்டது.
உயிருக்கு போராடும் ஒருவரின் உடல்நிலையை காட்டிய விதம் லாஜிம் மீறலாக இருப்பதோடு, விவேக் பிரசன்னாவை கொலை செய்வதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்லாததும் படத்திற்கு சற்று தொய்வை கொடுக்கிறது. இருப்பினும், விவேக் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சிப்பது யார்? என்ற சஸ்பென்ஸ் படத்தில் இருக்கும் குறைகளை மறைத்து ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘பருந்தாகுது ஊர் குருவி’ பருந்து அளவுக்கு பறக்கவில்லை என்றாலும் குருவியாக நம்மை திருப்திப்படுத்துகிறது.
ரேட்டிங் 3/5