Latest News :

’செங்களம்’ இணையத் தொடர் விமர்சனம்

75c8fa8f1b33df784723e6a4ec02994d.jpg

Casting : Kalaiyarasan, Vani Bhojan, Sharath Lohistashwa, Viji Chandrasekhar, Shali Nivekas, Bhavan, Vela Ramamurthy, Lagubaran, Daniel, Arjai, Prem, Gajaraj, Muthukumar

Directed By : SR Prabhakaran

Music By : Dharan

Produced By : Abi & Abi Entertainment - Abinesh Elangovan

 

விருதுநகர் மாவட்டத்தின் நகராட்சியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சரத் லோகிதாஸின் குடும்பம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனால், அவர்களது குடும்பத்திற்கு மக்களிடம் இருக்கும் மரியாதைக்கும், அரசியல் செல்வாக்கிற்கும் முற்றுப்புள்ளி வைத்து விருதுநகர் நகராட்சியை கைப்பற்ற மாநிலத்தை ஆளும் கட்சி திட்டமிடுகிறது. 

 

இதற்கிடையே சரத் லோகிதாஸின் மகனான நகராட்சி தலைவர் பவனுக்கு இரண்டாம் தாரமாக வாணி போஜனை திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் ஆன சில மாதங்களில் பவன் மர்மமான முறையில் இறக்க, வாணி போஜனுக்கு அரசியல் ஆசை வருகிறது. தனது அரசியல் ஆசையை கணவர் குடும்பத்தாரிடம் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், கணவன் வகித்த பதவியை கைப்பற்ற அவர் திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தால் விருதுநகர் மாவட்ட அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் விறுவிறுப்பாக சொல்வது தான் ‘செங்களம்’ இணையத் தொடரின் கதை.

 

Sengalam Web Series Review

 

மொத்தம் 9 பாகங்களை கொண்ட இந்த தொடரின் ஒவ்வொரு பாகங்களிலும் கலையரசன் மற்றும் அவரது இரண்டு தம்பிகள் சேர்ந்து செய்யும் தொடர் கொலைகளை நிகழ்கால கதையாகவும், அதனுடன் விருதுநகர் மாவட்ட அரசியல் சதுரங்க ஆட்டத்தின் மீள் காட்சியையும் சேர்த்து சொல்லியிருப்பது தொடரை சஸ்பென்ஸாக நகர்த்தி செல்கிறது.

 

தொடரின் முதன்மை கதாபாத்திரமாக சூர்யகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவது போல் நடித்திருக்கிறார். அதனுடன் அவருடைய தோழியான சசிகலாவை நினைவுப்படுத்தும் கதாபாத்திரமும், அதை வடிவமைத்த விதமும் தொடரின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.

 

மற்றொரு முதன்மை கதாபாத்திரமான ராயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவரது தம்பிகளாக நடித்திருக்கும் டேனியல் மற்றும் லகுபரன் இருவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக காமெடி வேடங்களில் நடித்து வந்த டேனியல், இதில் குணச்சித்திர வேடத்தில் கவனம் ஈர்க்கிறார்.

 

சக்கர நாற்காலியில் வலம் வரும் சரத் லோகிதாஸின் கதாபாத்திரமும், அவரது குடும்பம் மற்றும் அவர்களின் அரசியல் ஆர்வம் தமிழகத்தில் இருக்கும் முக்கிய அரசியல் குடும்பத்தை நினைவுப்படுத்துகிறது. ஆனால், அந்த குடும்பத்தையும்,அவர்களது அரசியலையும் எந்தவிதத்திலும் விமர்சிக்காமல், அவர்களது குடும்ப அரசியலை விமர்சிப்பவர்களுக்கு வசனம் மூலம் தலையில் குட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகர்.

 

Sengalam Web Series Review

 

வேல ராமமூர்த்தி, முத்துக்குமார், கஜராஜ், பிரேம், பூஜா வைத்தியநாதன், விஜி சந்திரசேகர், பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன், ஷாலி நிவேகாஷ், அர்ஜை, பவன், மானஷா ராதகிருஷ்ணன் என தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு அளவான நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் விருதுநகர் மாவட்டத்தின் வரட்சியையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

 

இசையமைப்பாளர் தரணின் பின்னணி இசை அரசியல் சதுரங்க ஆட்டத்திற்கு ஏற்றவாறு பயணப்பட்டுள்ளது. வாணி போஜனின் மீள் காட்சியையும், கலையரசனின் நிகழ்கால கதைக்கும் தனித்தனியாக பீஜியத்தை கொடுத்து தொடர் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறார் தரண்.

 

ஒவ்வொரு பாகங்களிலும் மீள் காட்சி மற்றும் நிகழ்கால கதையை சொல்லி தொடரின் முக்கிய சஸ்பென்ஸை இறுதி வரை யூகிக்க முடியாதபடி கொண்டு செல்லும் படத்தொகுப்பாளர் பிஜு வி.டான்பாஸ்கோவின் படத்தொகுப்பு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

தொடரை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.ஆர்.பிரபாகரன் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து ஒரு மிகப்பெரிய அரசியல் திரில்லர் கதையை எழுதியிருக்கிறார். எந்த அரசியல் தலைவர்களையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும், வசனங்களும் அவர் யாரை குறிப்பிடுகிறார், என்பதை மிக தெளிவாக புரிய வைக்கிறது.

 

திரைப்படத்திற்காக எழுதப்பட்ட ஒரு கதையை 9 பாகங்கள் கொண்ட தொடராக மாற்றுவதற்காக சில காட்சிகளை கூடுதலாக சேர்த்திருப்பது சில இடங்களில் சற்று தொய்வை ஏற்படுத்துவதோடு, அனைத்து பாகங்களிலும் நிகழ்கால கதையுடன் மீள் காட்சியும் இடம்பெறுவது ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், ஒரு கட்டத்தில் எது நிகழ்கால கதை, எது மீள் காட்சி என்பதில் ரசிகர்களுக்கு சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரண்டு விஷயங்கள் மட்டும் தொடரின் சிறு குறைகளாக இருக்கிறது.

 

கலையரசனின் தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன?, பவன் மரணத்தின் பின்னணி என்ன? வாணி போஜனின் அரசியல் அவதாரமும், அதனை தொடர்ந்து ஏற்படும் திருப்பங்கள் ஆகியவை அடுத்த பாகத்தில் என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு பாகத்தையும் பார்க்க வைக்கிறது.

 

வாணி போஜனின் அரசியல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தோழியின் சாமர்த்தியமும், புத்திசாலித்தனமும் கைதட்டல் பெறுவதோடு, அவரது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதிரடியாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

 

Sengalam Web Series Review

 

ஒரு கட்டத்தில் திமுக-வுக்கு ஆதரவான தொடராகவும், அதிமுக தலைவர்களை கலாய்க்கும் ஒரு தொடராகவும் தோன்றும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் யார்? என்ற கேள்விக்கும் விடை சொல்லியிருக்கும் இயக்குநரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

எந்த உண்மை சம்பவத்தையும் மையப்படுத்தி சொல்லாமல், முழுக்க முழுக்க கற்பனையான அரசியல் கதை என்றாலும், இந்த தொடரின் ஒவ்வொரு காட்சியும், கதாபாத்திரங்களும் தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளை நினைவுப்படுத்துவது தொடருக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

 

9 பாகங்களை மொத்தமாக பார்த்தாலும் நேரம் போனதே தெரியாதவாறு காட்சிகளை பரபரப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், தொடரின் இறுதி பாகத்தில் கூட ஒரு திருப்புமுனையை வைத்து, ரசிகர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறார்.

 

Sengalam Web Series Review

 

மொத்தத்தில், ‘செங்களம்’ தொடருக்கு ரசிகர்கள் நிச்சயம் சிவப்பு கம்பளம் விரிப்பார்கள்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery