Casting : Sasikumar, Magima Nambiyar, Poorna, Sanusha, Pasupathi, Vitharth
Directed By : M. Muthaiya
Music By : N. R. Raghunanthan
Produced By : M. Sasikumar
பெரும் துயரத்திற்கு இடையே ‘கொடிவீரன்’ படத்தை சசிகுமார் ரிலீஸ் செய்திருக்கிறார். படம் எப்படி என்பதை பார்ப்போம்.
சிறுவயதிலேயே தாயை இழந்த சசிகுமார், தனது தங்கையை உயிராக நினைத்து வாழ்கிறார். அவருக்கு ஏதாவது என்றால் பிரிச்சி மேய்ந்திடுவார். அதே ஊரில் சகல தவறுகளையும் செய்து வரும் பசுபதியை, அரசு அதிகாரியான விதார்த் தட்டி கேட்க விதார்த்துக்கு பசுபதி நேரம் குறித்துவிடுகிறார்.
இந்த நிலையில், விதார்த் சசிகுமாரின் தங்கை சனுஷாவை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு என்ன தனது மச்சானின் பிரச்சினை தனது பிரச்சினையாக எண்ணி களத்தில் இறங்கும் சசிகுமார், என்ன செய்திருப்பார், படத்தின் முடிவு என்னவாக இருக்கும், என்பது இந்த படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. இயக்குநர் முத்தையாவின் முந்தயப் படங்களை பார்த்திருந்தாலே போதும்.
பாசமிகுந்த அண்ணனாக நடித்துள்ள சசிகுமார், பல முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியுற்று, கிராமம் சார்ந்த கேரக்டரே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஏற்கனவே சசிகுமாரை நாம் இப்படி பார்த்திருந்தாலும், தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
மீண்டும் அசத்தல் வில்லனாக மிரட்டியுள்ள பசுபதி, கருப்பன் சாயலோடு தெரிந்தாலும் தனது கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா என்று அனைத்து நடிகைகளுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ரேணிகுண்டா’ படத்திற்கு பிறகு ரொம்ப அழுத்தமான வேடத்தில் நடித்து சனுஷா மனதில் நிற்பது போல, பூர்ணாவும் மிரட்டியிருக்கிறார்.
கதிரின் ஒளிப்பதிவும், ரகுநந்தனின் பின்னணி இசையும் புளித்துப் போன தோசை மாவுக்கு ரவையாக பயன்பட்டிருக்கிறது.
இந்த கதையை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை படங்களை முத்தையா எடுக்கப் போகிறாரோ, என்று படம் பார்ப்பவர்கள் புலம்பும் அளவுக்கு அரைத்த மாவையே முத்தையா அரைத்திருக்கிறார்.
மண்ணையும், மண் சார்ந்த மக்களைப் பற்றியும் சொல்கிறேன், என்ற பெயரில் முத்தையா படத்தில் ஏகப்பட்ட வன்முறை காட்சிகளை வைத்ததோடு, பாடல்களிலும் “உன் தலையை எடுத்துவிடுவேன்...” என்ற வார்த்தைகளை போட்டு மக்களை வெறியர்களாக்கி விடுகிறார்.
படத்தில் உருப்பட்டியான ஒன்று என்றால், அது செண்டிமெண்ட் தான். ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்கும் இருக்கும் தங்கை செண்டிமெண்ட் ரொம்ப நல்லாவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. மற்றபடி இந்த ’கொடிவீரன்’ வெத்துவேட்டு தான்.
ஜெ.சுகுமார்