Latest News :

’விடுதலை - பாகம் 1’ திரைப்பட விமர்சனம்

f4b00768eb3eabe8ced3fe9c37081ae4.jpg

Casting : Soori, Vijay Sethupathi, Bhavani Sre, Gautham Vasudev Menon, Rajiv Menon, Chetan, Ilavarasu, Munnar Ramesh, Saravana Subbiah

Directed By : Vetrimaaran

Music By : Ilaiyaraaja

Produced By : RS Infotainment,Grass Root Film Company - Elred Kumar

 

கனிம வளத்திற்காக பழங்குடி மக்களை விரட்டியடித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு அருமபுரி என்ற மலையை தாரைவார்த்துக்கொடுக்க அரசு முடிவு செய்கிறது. அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடுகிறது. அந்த அமைப்பு இருக்கும் வரை கனிம வளங்களை எடுக்க முடியாது என்பதால், அப்பகுதியில் நடக்கும் ரயில் குண்டு வெடிப்பு சம்பவ பழியை அந்த அமைப்பின் மீது சுமத்தி, மக்கள் படையை தீவிரவாத அமைப்பாக அரசு சித்தரிக்கிறது. இதையடுத்து ‘ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற பெயரில் மக்கள் படை தலைவரான விஜய் சேதுபதியை பிடிப்பதற்காக மலை மீது காவல்துறை முகாமிடுகிறது.

 

இதற்கிடையே, காவலராக பணியில் சேரும் சூரி, மக்கள் படை தலைவரை பிடிக்கும் காவல் படையில் ஜீப் ஓட்டுநராக இணைகிறார். மனிதாபிமானம் மிக்கவராக இருப்பதால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகி துறை ரீதியாக சூரி தண்டிக்கப்படுகிறார். மறுபக்கம் ஆபரேஷன் கோஸ்ட் திட்டத்தின் தலைவராக டிஎஸ்பி கெளதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையில் இதுவரை வெளிவராத மக்கள் படை தலைவர் விஜய் சேதுபதியின் முகம் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது.

 

இந்த நிலையில், மக்கள் படைக்கும், காவல் படைக்கும் இடையிலான மோதல் சம்பவங்கள் அதிகரிக்கிறது. இதில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட, கோபமடையும் காவல்துறை ஊரில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரையும் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்கிறது. இதை பார்த்து களங்கும் சூரி, அவர்களை காப்பாற்ற என்ன செய்தார்? மக்களின் நம்பிக்கையாக இருக்கும் மக்கள் படை தலைவர் விஜய் சேதுபதி பிடிபட்டாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் சூரி, குமரேசன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் நடிகர் சூரி என்பது தெரியாதவாறு குமரேசன் என்ற கதபாத்திரமாக பயணித்து நம்மையும் அவருடன் பயணிக்க வைத்திருக்கிறார். மக்களின் உயிரை காப்பது போலீஸின் கடமை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் நடித்திருக்கும் சூரி, தான் செய்தது தவறில்லை என்பதால் உயர் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்காமல் அவர் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் காட்சிகளிலும், காவல்துறையின் கொடூரத்தில் சிக்கி அவதிப்படும் பெண்களை காப்பாற்றுவதற்காக உயர் அதிகாரிகளிடம் போராடி தவிப்பது என அனைத்து இடங்களிலும் கதையின் நாயகனாக பளிச்சிடுகிறார். மெய்சிலிரிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சியில் கடினமாக உழைத்திருக்கும் சூரி, துப்பாக்கியை கையில் எடுக்கும் போது கைதட்டல் சத்தத்தால் திரையரங்கமே அதிர்கிறது.

 

பெரிய அளவு வசனங்கள் இல்லை என்றாலும், அவ்வபோது சில இடங்களில் திடீரென்று தோன்றி, சட்டென்று மறைந்து போனாலும் மக்கள் படை தலைவர் வாத்தியாராக மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. முகத்தை மறைத்துக்கொண்டு அவர் அறிமுகாகும் சில நிமிட காட்சிகளுக்கே ரசிகர்கள் விசில் அடித்து திரையரங்கை அதிர வைக்கிறார்கள் என்றால், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி பேசும் அரசியல் வசனங்கள் அனுகுண்டுகளாக வெடிப்பது உறுதி.

 

மக்கள் தலைவர் வாத்தியார் யார்? என்பதை முதல் பாகத்தில் சொல்லியிருப்பதோடு, இரண்டாம் பாகத்தில் அவருடைய செயல்பாடுகள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான அவருடைய உரையாடல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் எப்படி இருக்கும் என்பது பற்றி படம் முடியும் போது கொடுத்த லீட், இரண்டாம் பாகத்தின் மீதும், விஜய் சேதுபதி மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

டி.எஸ்.பி சுனில் மேனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் கம்பீரமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.  

 

காவல் படைக்கு தலைமை அதிகாரியாக நடித்திருக்கும் சேத்தன் வன்மத்தனமும், பழிவாங்கும் குனமும் கொண்ட கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ பழங்குடி இன பெண் வேடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு தனது அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்.

 

தலைமை செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இயக்குநர் தமிழ், மூணாறு ரமேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ஜெயமோகன் கூட்டணியின் வசனங்கள், கதை பேசும் அரசியல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

 

தனது கேமரா கண்கள் மூலம் நம்மையும் மலைகிராமத்திற்குள் பயணிக்க வைக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், காட்சிகளை மிக இயல்பாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

இளையராஜா இசையில் “காட்டு மல்லி...” பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டது. அந்த பாடல் எந்த இடத்தில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பையும் மிக சரியாக பூர்த்தி செய்யும் வகையில் கதையோடு பாடல்  பயணித்திருக்கிறது. பின்னணி இசை கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

 

’விடுதலை’ என்ற தலைப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை இயக்குநர் வெற்றிமாறன் கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில் படத்தை கொடுத்திருக்கிறார்.

 

படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை நமது கவனம் சிதறாத வகையில் திரைக்கதையை ஜெட் வேகத்தில் நகர்த்தி செல்லும் இயக்குநர் வெற்றிமாறன், கதைக்களம் மற்றும் படத்தில் இடம்பெறும் லொக்கேஷன் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் மூலம் நம்மை வியக்க வைத்திருக்கிறார்.

 

முதல் பாதி படம் முடிந்ததே தெரியாதவாறு படு சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், மக்களின் உணர்வுகளை நம் மனதில் மிக ஆழமாக படம் கத்துகிறது. அதை தொடர்ந்து இரண்டாம் பாதி படம் மீது மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டாலும், ஒரே சண்டைக்காட்சியில் இரண்டாம் பாதி முடிவதால், சட்டென்று முடிவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே சமயம், இரண்டாம் பாகத்தில் படத்தில் என்னவெல்லாம் இருக்கும், விஜய் சேதுபதியின் வேடம் எப்படி இருக்கும், என்பதை காட்டி இரண்டாம் பாகத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

 

ஒரு சிறுகதையை இப்படி ஒரு பிரமாண்டமான படைப்பாகவும், மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய செய்தியாகவும், மக்கள் ரசிக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் கொடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு, தன்னால் முடியும் என்பதை ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் நிரூபித்து வரும் இயக்குநர் வெற்றிமாறன், இந்த முறையும் மிக அழுத்தமாக தான் இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

ரேட்டிங் 4.5/5