Casting : Raghava Lawrence, Priya Bhavani Shankar, Sarathkumar, Nazar, Boornima Bagyaraj, Kaali Venkat, Redin Kingsly
Directed By : S.Kathiresan
Music By : Songs - GV Praksh Kumar and Background Score - Sam CS
Produced By : S.Kathiresan
அப்பா வாங்கிய கடனை அடைப்பதற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார் ராகவா லாரன்ஸ். சென்னையில் இருக்கும் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத விஷயம் தெரிந்தவுடன், மனைவி பிரியா பவானி சங்கரை சென்னைக்கு அனுப்புகிறார். ஆனால், சென்னைக்கு போன மனைவியிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையில், அவரது நண்பரிடம் இருந்து அம்மா இறந்துவிட்ட தகவல் மட்டும் வருகிறது. உடனடியாக சென்னைக்கு திரும்பும் லாரன்ஸ், அம்மாவின் இறுதி சடங்கை முடித்துவிட்டு தனது மனைவியை தேடும் போது அவருக்கு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன? மாயமான பிரியா பவானி சங்கர் என்ன ஆனார்? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்பதை வழக்கத்தை விட கூடுதலான மசாலத்தனத்தோடு சொல்வதே ‘ருத்ரன்’ படத்தின் மீதிக்கதை.
வழக்கம் போல் ஆட்டம், ஆக்ஷன், குறும்புத்தனமான நடிப்பு என அனைத்து ஏரியாவிலும் ஓவர் டோஸ் கலந்து நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதில் ஆட்டமும், ஆக்ஷனும் ரசிக்க வைத்தாலும், குறும்புத்தனமான நடிப்பு மட்டும் சில இடங்களில் சகிக்கவில்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், பலமான வேடத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் அவருக்கான வேலை குறைவு என்றாலும் இரண்டாம் பாதியில் வரும் அவரது வேடம் மக்கள் மனதில் நின்றுவிடுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் சரத்குமார், தனது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
லாரன்ஸின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், அம்மாவாக நடித்திருக்கும் பூர்ணிமா இருவரும் அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.
காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, ஜெயப்பிரகாஷ், அபிஷேக் வினோத் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் மட்டும் இன்றி ராகவா லாரன்ஸும் வழக்கத்தை விட அதிகமான பிரகாசம் பெற்று ஜொலிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் லாரன்ஸ் ஆடுவதற்கு ஏற்றபடி இருக்கிறது. சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை வழக்கத்தை விட அதிகம் சத்தமாக இருக்கிறது.
சமூகத்தில் நடக்கும் குற்ற செயலை மையமாக வைத்து கே.பி.திருமாறன் எழுதியிருக்கும் கதை, திரைக்கதைக்கு, கமர்ஷியல் முறையில் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கதிரேசன்.
தயாரிப்பாளர்கள் என்றாலே முழுக்க முழுக்க வியாபரத்தை மட்டுமே பார்ப்பார்கள், என்பதற்கு கதிரேசன் இயக்குநராகியிருக்கும் ‘ருத்ரன்’ மிகப்பெரிய உதாரணமாக அமைந்து விட்டது. அதே சமயம், முழுக்க முழுக்க வியாபாரத்தை மட்டுமே முன்னிறுத்தி படத்தை இயக்கினால், நல்ல கதைக்கரு கூட நாசமாகிவிடும் என்பதற்கும் ‘ருத்ரன்’ உதாரணமாக அமைந்துவிட்டது.
அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படங்கள் வெகுஜன மக்களை எளிதியில் சென்றடையும் என்பது உண்மை என்றாலும், அதற்காக இப்படி அளவுக்கு அதிகமான கமர்ஷியல் அம்சங்களை திணித்திருப்பது அதே மக்களை முட்டாளாக்கும் முயற்சியாகும்.
படத்தில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய மையக்கரு வரவேற்கத்தக்கது என்றாலும், அது படம் பார்ப்பவர்கள் மனதில் நிற்காத அளவுக்கு மசாலத்தனம் நிறைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
மொத்தத்தில், ரசிகர்களை கடும்கோபத்திற்கு ஆளாக்கி விட்டான் இந்த ‘ருத்ரன்’.
ரேட்டிங் 2/5