Latest News :

சத்யா விமர்சனம்

6139f2d9f5947db5f718a849705a9652.jpg

Casting : Sibiraj, Ramya Nambeesan, Sathish, Varalakshmi Sarathkumar

Directed By : Pradeep Krishnamurthy

Music By : Simon K.King

Produced By : Sathyaraj

 

தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய டிரெண்ட் செட்டராகவும், வெற்றிப் படமாகவும் அமைந்த ‘ஷணம்’ படத்தின் ரீமேக் ஆன ‘சத்யா’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கும் சிபிராஜிக்கு, அவரது முன்னாள் காதலியான ரம்யா நம்பீசன் போன் மூலம் தனது குழந்தை கடத்தப்பட்டு விட்டதை தெரிவிப்பதோடு, குழந்தையை கண்டுபிடிக்க உதவுமாறும் கேட்கிறார். அதன்படி இந்தியாவுக்கு வந்து குழந்தை குறித்து விசாரிக்கும் சிபிராஜுக்கு அப்படி ஒரு குழந்தையே இல்லை, என்ற பதில் கிடைப்பதோடு, பல புதிய கேள்விகளும் எழ, இறுதியில் அப்படி ஒரு குழந்தை இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த குழந்தையை யார் கடத்தியது, எதற்காக கடத்தினார்கள், என்ற கேள்விக்களுக்கான பதில்களை பலவித திருப்புமுனைகளோடு சொல்லியிருப்பது தான் சத்யா படத்தின் கதை.

 

கடத்தப்பட்ட குழந்தையை தேடும் சிபிராஜுக்கு, அப்படிப்பட்ட குழந்தையே இல்லை, என்ற விஷயம் தெரிய வரும் போது, குழந்தையை தேடுவதைக் காட்டிலும் குழந்தை இருப்பது உண்மையா அல்லது பொய்யா, என்பதை அறிந்துக் கொள்ள முயற்சிக்கிறார். இப்படி ஒரு முடிச்சை அவிழ்க்கும் போது, அதில் இருந்து இன்னொரு ட்விஸ்ட் வர, படம் முழுவதுமே யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பான காட்சிகளோடு நகர்கிறது.

 

தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை எந்தவித மாற்றமும் இன்றி எடுத்தாலே போதும், படம் வெற்றி பெற்றுவிடும் என்பதை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ரொம்ப நன்றாகவே அறிந்து, அப்படியே காப்பி செய்திருக்கிறார்.

 

இருந்தாலும் நடிகர்கள் தேர்வு தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. முதல் மைனஸ் ஹீரோ சிபிராஜ். சுட்டுபோட்டாலும் துளி கூட நடிக்க தெரியாத சிபிராஜ், திரைக்கதையின் சீரியஸ்னஸை புரிந்து பல இடங்களில் அடக்கி வாசித்தாலும், ரியாக்ஸனில் பெரிய அளவில் சொதப்புகிறார். அதிலும் அவர் வைத்திருக்கும் விக்கு அவருக்கு கொஞ்சமும் சூட்டாகவில்லை.

 

சிபிராஜை சில பிரேம்களில் ரசிக்க முடிகிறது என்றால், அதற்கான கிரேடிட்டை ஒளிப்பதிவாளர் அருண்மணி பழனிக்கு தான் கொடுக்க வேண்டும். ரொம்ப குறைந்த பட்ஜெட் படத்தை தனது ஒளிப்பதுவு மூலம் பல இடங்களில் பிரம்மாண்டப்படுத்தி இருக்கிறார். அதேபோல், இசையமைப்பாளர் சிமோன் கே.கிங், கேட்டவுடனே பிடிக்கும் விதத்தில் இரண்டு பாடல்களை கொடுத்திருப்பவர், பின்னணி இசையால் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளார்.

 

ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பாடு ரசிகர்களை படம் முழுவதுமே உட்கார வைக்கும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தெலுங்கு படத்தில் நடிகர்கள் அணிந்த உடையின் வண்ணம், கதாபாத்திரத்தின் பெயர், சில வசனங்கள் போன்றவற்றை ஈ அடிச்சான் காப்பியாக செய்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல், சிபிராஜ், ரம்யா நம்பீசன், சதீஷ் ஆகியோரது நடிப்பு செயற்கை தனமாக இருப்பதும் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

 

மொத்தத்தில், பல முறை பார்த்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருந்த ’ஷணம்’, சிபிராஜ் என்ற நடிகர் நடித்ததால், ஒரு முறை பார்க்கலாம், என்ற ’சத்யா’ வாகியுள்ளது.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery