Latest News :

’யாத்திசை’ திரைப்பட விமர்சனம்

dd95f2af9384da58cbdfe69b7bc45340.jpg

Casting : Shakti Mithran, Seyon, Rajalakshmi, Guru Somasundaram, Subatra, Samar, Vaidhegi amarnath

Directed By : Dharani Rasendran

Music By : Chakravarthy

Produced By : KJ Ganesh

 

அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், கே.ஜே.கணேஷ் தயாரிப்பில், புதுமுக நடிகர், நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாத்திசை’. யாத்திசை என்றால் தென் திசை என்று அர்த்தம். தென் தமிழகத்தை ஆண்ட சேர சோழர்களை வீழ்த்திய பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இக்கதையில் சங்க கால தமிழ் உள்ளிட்ட பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சேர சோழ மன்னர்களை தோற்கடித்துவிட்டு சோழ நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்கிறார் ரணதீர பாண்டியன். போரில் சோழர்களுக்கு உதவிய பல சிறுகுடிகளில் எயினர் குடியும் ஒன்று. சோழர்கள் தோல்வியடைந்து காட்டுக்குள் பதுங்கிவிட, எயினர்கள் பாலை நிலத்துக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். அங்கு வேட்டையாடி சமூகமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் அவர்கள் பாண்டிய மன்னனை வீழ்த்தி விட்டு மீண்டும் சொந்த நாட்டுடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி,  படை ஒன்றை திரட்டி பாண்டிய மன்னனை வீழ்த்த யூகம் வகுக்கும் அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே ‘யாத்திசை’ படத்தின் கதை.

 

கதையின் முதன்மை கதாபாத்திரங்களான ரணதீர பாண்டியன் வேடத்தில் நடித்திருக்கும் ஷக்தி மித்ரன், எயினர் குடி தலைவன் கொதி வேடத்தில் நடித்திருக்கும் சேயோன் இருவரும் புதுமுகங்கள். இவர்கள் மட்டும் இன்றி படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள். ஆனால், இவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்பதை மறந்துவிட்டு வெறித்தனமாக நடித்திருக்கிறார்கள்.

 

இதுபோன்ற சரித்திர படங்கள் என்றாலே மன்னர்கள் வெண்ணையில் ஓர வைத்தது போல், பட்டு போன்ற மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பார்கள், என்ற விதியை உடைத்தெறிந்திருக்கும் இயக்குநர் தரணி ராசேந்திரன், அந்தக் கால தமிழர்கள் மற்றும் தமிழ் மன்னர்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

கதாபாத்திரங்கள் உடுத்தியிருக்கும் உடைகள், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், அவர்களிடம் இருக்கும் போர் வெறி, போருக்கு செல்லும் முன்பு மனித பலி கொடுப்பது, என்று பல வரலாற்று சம்பவங்களை எந்தவித சினிமாத்தனமும் இன்றி மிக இயல்பாக மக்களுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்றே சொல்லலாம்.

 

சங்காகலத்தில் பயன்பாட்டில் இருந்த தமிழ் வார்த்தைகளை கொண்டு எயினர் குடியினர் பேசும் வசனங்களை எழுதியிருப்பது புதிய முயற்சி. அந்த வசனங்கள் புரியவில்லை என்பது குறையாக இருந்தாலும், நாம் இதுவரை திரைப்படங்களில் கேட்டிராத சங்ககால தமிழ் வார்த்தையை படத்தில் பயன்படுத்தியிருப்பது புதிய முயற்சியாக மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவமாகவும் இருக்கிறது.

 

 

அக்காலம் முதல் தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் போர்கள் வரை, அனைத்துமே அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக  மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் தரணி ராசேந்திரன், கூர்மையான வசங்கள் மூலமாகவும் கவனம் ஈர்க்கிறார்.

 

இயக்குநர் தரணி ராசேந்திரன், பாண்டிய மன்னனையும், அவரை எதிர்த்து நின்ற எயினர் குடியையையும் மையப்படுத்தி கதை எழுதினாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்த விதத்தில்,  தற்காலத்து உலக யுத்த அரசியலை நினைவுப்படுத்தியிருக்கிறார். 

 

நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் மிக கடுமையாக உழைத்திருப்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உடை வடிவமைப்பு, கலை இயக்கம் என அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருப்பதோடு, அனைத்துமே கதையோடு ஒன்றி பயணித்து படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தில் சிறிய அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகளை லைவ் லொக்கேஷனில் படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சி போர்க்கள காட்சிகள் தான். ஆனால், நாம் வழக்கமான சரித்திர படங்களில் பார்த்திருக்கும் போர்க்கள காட்சிகள் போல் அல்லாமல், நம் மனதுக்கு நெருக்கமாக, நாமே அந்த போர்க்களத்தில் பயணிப்பது போன்ற உணர்வை தரும் விதத்தில் மிக தத்ரூபமாக  படமாக்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

 

சில இடங்களில் போர்க்கள காட்சிகளும், அதில் இடம்பெறும் நடிகர்களின் நடிப்பும் கொஞ்சம் ஓவர் டோசாகவும், அதே சமயம் சிறுபிள்ளை தனமாக இருப்பது போல் தோன்றினாலும், போர் வீரர்களின் மனதில் இருக்கும் வலியையும், தனது இனத்திற்கான விடுதலைக்காகவும் அப்படி வெறித்தனமாக போராடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பார்த்தால் அந்த குறையும் மறைந்துவிடுகிறது.

 

இயக்குநர் தரணி ராசேந்திரன், இப்படத்தின் காட்சிகளை வடிவமைத்த விதம் எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் இருப்பது இப்படத்தின் புதிய முயற்சி மட்டும் இன்றி, இப்படம் மக்களுக்கு நெருக்கமாக இருப்பதற்கும் அதுவே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

 

பெண் போராளி, தன்னை எதிர்த்து நின்ற எயினர் குடியில் ஒருவர் கூட உயிரோடு இருக்க கூடாது என்று உத்தரவிடும் பாண்டிய மன்னன், ஆயிரம் பேர் கொண்ட எயினர் படையை அழிக்க லட்சக்கணக்கான படையோடு வரும் பாண்டியனை வீரன் என்று சொல்கிறார்கள் போன்ற வசனங்கள், வீரர்கள் போர் செய்யும் முறை, லட்சக்கணக்கான வீரர்களுடன் படையெடுக்கும் பாண்டிய மன்னனை எயினர் எப்படி சமாளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு, படம் முழுவதையும் நாம் வியப்போடு பார்க்கும் வகையில் இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், சரித்திர போர் திரைப்படங்களின் வழக்கமான பாணியை உடைத்தெறிந்து உண்மைக்கு நெருக்கமாக சொல்லப்பட்டிருக்கும்  ‘யாத்திசை’ ரசிகர்கள் எதிர்பார்க்காத ஆச்சரியங்கள் நிறைந்தவை.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery