Latest News :

’தெய்வ மச்சான்’ திரைப்பட விமர்சனம்

92ea026b0783e446b02dbf7840024084.jpg

Casting : Vimal, Anitha Sampath, Pandiyarajan, Balasaravanan, Aadukalam Naren, Vela Ramamoorthy, Vathsan Veeramani, Deepa Sankar, Kiccha Ravi

Directed By : Martyn Nirmal Kuma

Music By : Background Score - Ajeesh

Produced By : Udayakumar - Geeta Udayakumar & M P Veeramani

 

நாயகன் விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, அவருக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை முன் கூட்டியே சொல்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அப்படியே நடக்கிறது. இதற்கிடையே விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கும், வத்சன் வீரமணிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, ”உன் தங்கை கணவன் மச்சான் திருமணமாகி இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவான்”, என்று சொல்கிறார். இதனால் தங்கையின் திருமணத்தை நிறுத்தி வத்சனின் மரணத்தை தடுக்க நினைக்கும் விமலின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வதே ‘தெய்வ மச்சான்’.

 

’களவாணி’ போன்ற படங்களில் மிக இயல்பாக நடித்து கவர்ந்த விமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக இருந்தாலும் தன்னை சுற்றியிருக்கும் நடிகர்களுக்கும் சம வாய்ப்பளித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கும் விமல், தனது மச்சானை பாதுகாப்பதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. 

 

விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நேஹா ஜா, காதல் காட்சிகள் மற்றும் காதல் பாடல்கள் இல்லாத கதாநாயகியாக சில காட்சிகளில் தலை காட்டுகிறார்.

 

விமலின் தங்கையாக நடித்திருக்கும் அனிதா சம்பத், தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், படம் முழுவதும் பாதி தூக்கத்தில் இருப்பவரை போன்றே இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. திருமண தடையால் சோகமாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாலும், திருமணம் நடக்கும் போது கூட அவருடைய முகம் படு சோகமாகவும், பொலிவு இல்லாமலும் இருப்பது, ரசிகர்களையும் சோகமடைய செய்துவிடுகிறது.

 

படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் வத்சன் வீரமணி, படத்தின் உயிர் நகைச்சுவை தான் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு நடித்திருக்கிறார். விமல் காட்டும் அன்பால் மலைத்து போகும் காட்சிகளில் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.

 

காமெடி ஏரியாவை தன்வசம் வைத்துக்கொண்ட பால சரவணன் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.

 

பாண்டியராஜன், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், கிச்சா ரவி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிரிப்புக்கு உதரவாதம் கொடுக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே.அலெக்ஸ், நட்சத்திரங்களை அழகாக காட்ட தவறியிருக்கிறார். 

 

படத்தில் ஒரே ஒரு பாட்டு, அதுவும் மாண்டேஜ் பாடலாக இருக்கிறது. பின்னணி இசையமைத்திருக்கும் அஜீஸ், கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ், கதை திசை மாறாத விதத்தில் காட்சிகளை தொகுத்திருப்பதோடு, சிறு வசனங்களுக்கு கூட ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கும் அளவுக்கு காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

 

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் மற்றும் நடிகர் வத்சன் வீரமணி இருவரும் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளனர். 

 

சாதாரண மையக்கருவை வைத்துக்கொண்டு மிக சாதாரணமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அதை சொன்ன விதம் சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

கமர்ஷியல் படம் என்றாலும் அதில் தேவையில்லான விஷயங்களை திணிக்காமல், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் மார்டின், திரைக்கதையோடு பயணிக்கும்படியான காமெடி காட்சிகளை வைத்து குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதோடு, குடும்பத்தோடு பார்க்கும்படியாகவும் படத்தை இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், சிரிக்க தெரியாதவகளையும் சிரிக்க வச்ச இந்த ‘தெய்வ மச்சான்’ விமலின் வெற்றி கணக்கை மீண்டும் தொடங்கி வச்சான்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery