Casting : Sai Dharam Tej, Samyuktha Menon, Sunil, Brahmaji, Rajeev Kanakala, Ajay, Ravi Krishna
Directed By : Karthik Varma Dandu
Music By : B.Ajaneesh Loknath
Produced By : Sri Venkateswara Cine Chitra and Sukumar Writings - B. V. S. N. Prasad and Sukumar
நாயகன் சாய் தரம் தேஜ், தனது அம்மாவின் சொந்த ஊருக்கு செல்கிறார். அந்த ஊர் தலைவரின் பெண்ணான நாயகி சம்யுக்தா மேனனிடம் காதல் கொள்கிறார். இதற்கிடையே, அந்த ஊரில் இருப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். தீய சக்தியால் தான் இதுபோன்ற இறப்புகள் ஏற்படுகிறது என்று கூறும் கோவில் பூசாரி, ஊரையும், கோவிலையும் மந்திரக்கட்டினால் மூடிவிடுகிறார். ஆனால், அதையும் மீறி அந்த கிராமத்தில் மம்ம மரணங்கள் தொடர, அந்த மர்மத்தின் பின்னணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஹீரோ இறங்குகிறார். அதை எப்படி ஹீரோ கண்டுபிடிக்கிறார் என்பதையும், அதன் பின்னணியையும் திகிலாகவும், சஸ்பென்ஸாகவும் சொல்வது தான் ‘விரூபாக்ஷா’.
வீரூபாக்ஷா என்றால் சிவன் என்று அர்த்தமாம். தீய சக்திக்கும், நல்ல சக்தியும் இடையே நடக்கும் போட்டியை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராகவும், சீட் நுணியில் உட்கார வைக்கும் திகில் ஜானர் படமாகவும் கொடுக்க இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டு முயற்சித்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்ப வாரிசு என்று முகத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனக்கு கொடுத்த வேலை குறைவு என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பவர், தனது குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா மேனன், கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் கதையில் முக்கியத்துவம் உள்ள வேடத்தில் அழுத்தமாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் அழகியாக வலம் வருபவர் இரண்டாம் பாதியில் அதிரடியில் மிரட்டியிருக்கிறார்.
சுனில், பிரம்மாஜி, ராஜீவ் கனகலா, அஜய், ரவி கிருஷ்ணா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சம்தத் சைனுதீனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. கதாபாத்திரங்களை அழகாக காட்டி ரசிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் திகில் காட்சிகள் மூலம் மிரட்டவும் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் ஒரே ஒரு பாடல் இடம்பெற்றாலும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. காதல் காட்சிகளில் இடம்பெறும் பீஜியம் மனதை வருட செய்வது போல், திகில் காட்சிகளில் இடம்பெறும் பின்னணி இசை பட படக்க வைக்கிறது.
வேகமாக நகரும் திரைக்கதையில் வரும் காதல் காட்சிகளை அளவாக தொகுத்து திரைக்கதையின் வேகம் குறையாமல் பார்த்துக்கொண்ட படத்தொகுப்பாளர் நவின் நூலியின் பணியும், கலை இயக்குநரின் பணியும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
வி.பிரபாகரின் வசனம் தெலுங்கு டப்பிங் படம் பார்ப்போது இல்லாமல் நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.
இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை, யூகிக்க முடியாத பல திருப்புமுனையோடு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை உடைக்காமல் திரைக்கதையை நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் வர்மா டண்டு, எளிமையான கதையாக இருந்தாலும் திகில் காட்சிகள் மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.
படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் அழைத்து சென்றுவிடும் இயக்குநர் அதன் பிறகு ஒவ்வொரு சம்பவம் மூலமாகவும் எதிர்பார்ப்போடு படம் பார்க்க வைப்பதோடு, அடுத்தது என்ன நடக்கும்? மர்ம மரணங்களின் பின்னணியில் இருப்பவர் யார்? என்ற சஸ்பென்ஸை இறுதிவரை யூகிக்க முடியாதபடி நகர்த்தி செல்கிறார்.
மொத்தத்தில், சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் பட ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து இந்து ’விரூபாக்ஷா’.
ரேட்டிங் 3.5/5