Casting : Vemal, Tanya hope, Vinothini, Keerthana, Boss venkat, Muthupandi, Suriya, Janani balu, Lavanya Manickam
Directed By : 'Kutty Puli' Sharavana Shakthi
Music By : VM Mahalingam
Produced By : P.Ilayaraja, V.Karthikeyan, V.Muthukumar
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தாலும், அந்த குற்றவாளிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைக்கு ஆட்டோ ஓட்டுநரான நாயகன் விமல் தான் காரணம் என்று போலீஸ் அவரை கைது செய்கிறது. ஆனால், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விமலை விடுதலை செய்கிறது. அதன் பிறகும் இதுபோன்ற கொலைகள் தொடர்ந்து அரங்கேற, குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கும் அந்த நபர் யார்? அந்த கொலைகளுக்கும் விமலுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தான் ‘குலசாமி’ படத்தின் மீதிக்கதை.
இயல்பான வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்த விமல், முதல் முறையாக ஆக்ஷன் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், 1980-களில் நடிக்க வேண்டிய ஆக்ஷன் படத்தில் இப்போது நடித்திருப்பது தான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. நடிப்பை பொருத்தவரை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை விமல் குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம் என்றாலும் அவரை அறைகுறையாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனா, கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் வினோதினி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், வில்லனாக நடித்திருக்கும் சூர்யா என படத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தின் காட்சிகளை சீரியல் போல் படமாக்கியதை தவிர்த்திருக்கலாம்.
வி.எம்.மஹாலிங்கத்தின் இசையமைப்பில் ஒரு பாடல் மட்டும் கேட்கும் ரகமாக இருந்தாலும் பழைய ரகமாகவே இருக்கிறது. பின்னணி இசை என்ற பெயரில் அதிகபடியான சத்தம் கேட்கிறதே தவிர அவை காட்சிகளுக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.
நாயகனை மையப்படுத்திய ஒரு ஆக்ஷன் படத்தை, நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, கதையின் முக்கிய சஸ்பென்ஸை படத்தின் துவக்கத்திலேயே ரசிகர்கள் யூகிக்கும்படி பணியாற்றியிருக்கிறார்.
நடிக விஜய் சேதுபதி தான் வசனம் எழுதியிருக்கிறார். ஆனால், அவருடைய வசனங்கள் எதுவும் மனதில் நிற்கும்படி இல்லை.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்குவதை விட, கொடூரமான மரண தண்டனை தான் சரியானது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ’குட்டி புலி’ சரவணசக்தி, அதை மக்கள் ரசிக்கும் ஆக்ஷன் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சரவணசக்தி, அதை சரியான முறையில் படமாக்க தவறியிருக்கிறார். குறிப்பாக ஒரு ஆக்ஷன் படத்தை அதுவும் சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் படத்தை தொலைக்காட்சி தொடர் போல படமாக்கியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.
உண்மை சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைப்பதில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் சரவணசக்தி படத்தின் மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘குலசாமி’-யை ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள்.
மொத்தத்தில், ‘குலசாமி’ குற்றவாளிகளை மட்டும் கொல்ல வில்லை.
ரேட்டிங் 2.5/5