Casting : Sathyaraj, Ajmal, Dhusshyanth, Jaiwanth, Sreeman, Y. Gee. Mahendra, Poornima Bhakyaraj, Devadarshini
Directed By : P.G. Mohan – L.R. Sundarapandi
Music By : G.Balasubramanian
Produced By : B.SATHISH KUMAR
காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், சிலருக்கு ஏற்பட இருக்கும் விபத்தை முன் கூட்டியே தெரிவித்து அவர்களை காப்பாற்றும்படி சொல்கிறார். ஆனால், அந்த சம்பவங்கள் பற்றிய சரியான தகவலை சொல்லாததால், அவர்களை காப்பாற்ற முடியாமல் போலீஸ் திணறுகிறது. அதே சமயம், காவல்துறைக்கு தகவல் அளிக்கும் அந்த நபர் ஊடகங்களுக்கும் அந்த தகவலை சொல்கிறார். இதனால், முகம் தெரியாத அவர் நடப்பதை முன் கூட்டியே அறியும் தீர்க்கதரிசியாக மக்களிடம் பிரபலமாகி விடுகிறார். அந்த நபர் யார்? அவர் சொல்லும் சம்பவங்கள் விபத்தா? அல்ல கொலையா? அவரை போலீஸ் பிடித்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கும் அஜ்மல், கதையின் நாயகனாக நடித்தாலும் இறுதிக் காட்சியில் அவரது வேடம் கொடுக்கும் திருப்புமுனை எதிர்பார்க்காதது.
படத்தின் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது வேலையை சரியாக செய்து கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தின் மையக்கதாப்பாத்திரமாக இருந்தாலும் குரல் மூலமாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சத்யராஜ், படத்தின் இறுதியில் தோன்றி கைதட்டல் பெறுகிறார். அவருடைய அனுபவமான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கும், படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
ஸ்ரீமன், தேவதர்ஷினி, ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணனின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தில் வரும் இரவுக் காட்சிகள் மற்றும் லைவ் லொக்கேஷன்களை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.
ஜி.பாலசுப்பிரமணியத்தின் இசையில் காவலர்களுக்கு ஆதரவான பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
ரஞ்சித் சி.கே-வின் படத்தொகுப்பு காட்சிகளை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தொகுத்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் பி.சதிஷ்குமார் திரைக்கதை அமைக்க, பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டியன் இருவரும் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள். சஸ்பென்ஷ் ஆக்ஷன் கதையை மிக நேர்த்தியாக இயக்கியிருப்பதோடு, அதில் சமூகத்திற்கான நல்ல மெசஜையும் சொல்லியிருப்பது பாராட்டும்படி இருக்கிறது.
தீர்க்கதரிசி சொல்லும் சம்பவங்கள் மற்றும் அதனை நோக்கி பயணிக்கும் காவல்துறையின் ஏமாற்றம் போன்றவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றாலும், தொடர் விபத்துகளின் பின்னணியை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுவதும், இறுதியில் ஸ்ரீமன் அதை கண்டுபிடிப்பது போல் காட்டுவது மிகப்பெரிய லாஜிக் மீறலாக இருக்கிறது.
குறிப்பாக, குற்றங்களின் பின்னணியை கண்டுபிடிக்க உதவும் ஸ்ரீமனின் யோசனை, தொடர் சம்பவங்களின் போதே போலீஸ் விசாரணையில் கையாளப்படும் மிக சாதாரணமான ஒன்றாக இருக்கும் நிலையில், இயக்குநர்கள் அதையே பெரிய சஸ்பென்ஸாக வைத்து காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், பலவீனத்தை பார்க்காமல் படத்தை பார்த்தால், தீர்க்கதரிசி சுமாரான படமாக இருந்தாலும் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக நிச்சயம் இருக்கும்.
ரேட்டிங் 3/5