Latest News :

’உருச்சிதை’ திரைப்பட விமர்சனம்

1bcfb1b67817adecfa4634009ed946b4.jpg

Casting : Karthikeyan, Suguna, Nellai Siva, Theepetti Ganeshan, MCV Devaraj

Directed By : MCV Devaraj

Music By : J.Anand

Produced By : VTS Cinemas - Venugopal Devaraj

 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வாய் பேச முடியாத நாயகன் கார்த்திகேயன், குடும்ப கஷ்ட்டத்திற்காக விளையாட்டு வீரராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை கைவிட்டுவிட்டு, தனது இரண்டு தங்கைகளுடன் சென்னைக்கு வருகிறார். சென்னையில் கட்டுமான பணியாளராக கூலி வேலை செய்யும் நாயகனுக்கும், அவரது தங்கைக்கும் நாயகி சுகுணா மூலம் நல்ல வேலை கிடைக்க, அவர்களது வாழ்வு உயரத்தொடங்குகிறது.

 

இதற்கிடையே, தனது அண்ணன் சுகுணாவை விரும்புவதை தெரிந்துக்கொண்ட தங்கைகள் தங்களது அண்ணனுக்காக சுகுணாவிடம் பேசுவதற்கு அவரை சந்திக்க செல்ல, நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாத தங்கைகளை தேடி நாயகன் கார்த்திகேயன் செல்கிறார். அப்போது கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரண்டு தங்கைகளும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள். அவர்களது கொலைக்கான காரணமும், கொலையாளி யார்? என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் கார்த்திகேயன், தன்னால் முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் சுகுணா, பக்கத்து வீட்டு பெண் போல் மிக சாதாரணமாக இருப்பதோடு, இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்.

 

நாயகனின் தங்கைகளாக நடித்திருக்கும் நடிகைகள், நாயகனின் அம்மா, அப்பா வேடத்தில் நடித்திருப்பவர்கள் என படத்தில் ஏராளமான புதுமுகங்கள் நடித்திருந்தாலும் அனைவரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

நெல்லை சிவா, தீப்பெட்டி கணேஷன் மற்றும் மேஸ்திரி வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் எம்.சி.வி.தேவராஜ் ஆகியோரது கூட்டணி காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

 

சேகர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் பாடலாசிரியர் ஜெயம்கொண்டான், முரட்டுத்தனமான உருவம் மற்றும் நடிப்பில் மிரட்டுகிறார்.

 

படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை கலைக்குமார் எழுதியுள்ளார். ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனித்துள்ளார். விறுவிறுப்பான நான்கு சண்டைகாட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.

 

எழுதி இயக்கியிருக்கும் எம்.சி.வி.தேவராஜ், எளிய மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எளிமையான முறையில் ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார்.

 

படத்தில் சில குறைகள் இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்துக்கொண்டு தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், சுருக்கமாகவும் சொல்லிய இயக்குநர் தேவராஜை தாராளமாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், ‘உருச்சிதை’ எளிமையானவர்களை பற்றிய எளிமையான படம்.

 

ரேட்டிங் 2.5/5