Latest News :

’இராவண கோட்டம்’ திரைப்பட விமர்சனம்

429c718d3427328f24d514f65dbdee77.jpg

Casting : Shanthanu Bhagyaraj, Anandhi, Prabhu, Deepa Shankar, Ilavarasu, Sanjay Saravanan

Directed By : Vikram Sugumaran

Music By : Justin Prabhakaran

Produced By : Kannan Ravi

 

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மேலத்தெரு, கீழத்தெரு என்று தெருக்களில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், மனதில் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக ஒற்றுமையாக இருக்கும் கிராம மக்களை பிரிக்க அரசியல்வாதிகள் சதி திட்டம் போடுகிறார்கள்.  நட்புக்காக உயிரையும் கொடுக்கும் நண்பர்களான மேலத்தெரு ஷாந்தனுவும், கீழத்தெரு சஞ்சய் சரவணனும், அரசியல்வாதிகளின் சதி திட்டத்தால் உயிரை பறிக்கும் பகை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

 

இவர்களுடைய பகை மொத்த கிராமத்தையே பற்ற வைக்கும் தீயாக மாற, இறுதியில் அரசியல்வாதிகளின் சதி திட்டம் வெற்றி பெற்றதா? அல்லது சதியை அறிந்து ஷாந்தனுவும், சஞ்சய் சரவணனும் மனம் மாறினார்களா? என்பதை சொல்வவது தான் ‘இராவண கோட்டம்’.

 

தோல்வியோடு தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் ஷாந்தனு, சுமார் 15 வருடங்களுக்கு பிறகு நாயகனாக நடித்திருக்கிறார். இராமநாதபுர மாவட்ட வட்டார தமிழ் பேசி நடித்திருக்கும் ஷாந்தனு தன்னால் முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ’கயல்’ ஆனந்தி, தனது குழந்தைத்தனமான சிரிப்பு, பேச்சு என வழக்கமான பாணியில் வந்து போகிறார்.

 

படத்தின் இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சஞ்சய் சரவணன், முக்கிய வேடத்தில் நடித்திருப்பது முதல் முறை என்றாலும் அதை முகத்தில் காட்டாமல் நடித்திருக்கிறார்.

 

மேலத்தெரு மக்களின் தலைவராக நடித்திருக்கும் பிரபு, கீழத்தெரு மக்களின் தலைவராக நடித்திருக்கும் இளவரசு இருவரும் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களை கவனிக்க வைக்கிறார்கள். 

 

எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், அமைச்சராக நடித்திருக்கும் பி.எல்.தேனப்பன் இருவரும் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார்கள். ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே வித்தியாசமான தோற்றத்தில் கவனிக்க வைத்தாலும், குறைவான வசனம் மற்றும் சரியான வாய்ப்பு இல்லாததால் மனதில் நிற்கவில்லை.

 

மாரியாக நடித்திருக்கும் நடிகர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஆனால், படத்தின் திருப்புமுனை கதாபாத்திரமான அதில் முக்கியமான நடிகரை நடிக்க வைக்காமல் புதியவரை நடிக்க வைத்ததால் அந்த கதாபாத்திரம் கவனம் பெறவில்லை.

 

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் கதையோடு பயணித்தாலும் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கவில்லை. குறிப்பாக இரு சமூகத்தை சேர்ந்த தலைவர்களின் இறப்பையும், அவர்களது இறுதி ஊர்வலத்தையும் காட்டிய விதம் மிகப்பெரிய ஏமாற்றம்.

 

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகமாகவும், பின்னணி இசை படு மோசமாகவும் இருக்கிறது.

 

சாதி கலவரத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் மற்றும் கார்பரேட் வியாபாரத்தை தோலுரித்து காட்டும் விதத்தில் எழுதி இயக்கியிருக்கும் விக்ரம் சுகுமாரன், பெரும்பாலும் மேலத்தெரு மக்களுக்கு ஆதரவாகவே பேசுவதோடு, அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பேசியிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக்காட்சிகள், கபடி விளையாட்டு போன்றவற்றிற்காக நடிகர்கள் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. இராமநாதபுர தண்ணீர் பிரட்சனைக்கு காரணமாக இருக்கும் சீமைக்கருவேள மரங்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் வியாபாரத்தை பற்றிய வசனங்கள் மற்றும் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது.

 

அதே சமயம், சாதி பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக வாழும் கிரமமாக இருந்தாலும், மேலத்தெரு மக்களின் தலைவரின் புகழ்பாடும் விதமாக காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருப்பது ஒருதலைபட்சமாக இருக்கிறது. அதிலும், “நாங்க கொடுத்த உயிரை நாங்களே எப்படி எடுப்பது என்று தான் யோசிக்கிறோம்”, “உங்களுக்கு சோறு போட்டு, இருக்க இடம் கொடுத்து மனுஷனாக்கியது நாங்க தான்” உள்ளிட்ட பல வசனங்கள் கீழத்தெரு மக்களை மட்டம் தட்டும் விதமாக இருப்பதோடு சாதி வன்மத்தின் உச்சமாகவும் இருக்கிறது.

 

மக்களுக்கும் சமூகத்திற்கும் நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறேன், என்ற பெயரில் மக்களிடையே சாதி வன்மத்தை வளர்க்கும் விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாரன், இப்படத்தின் மூலம் இயக்குநராக தோற்றுவிட்டாலும் மேலத்தெரு மக்கள் மனங்களை வென்றுவிட்டார்.

 

மொத்தத்தில், ‘இராவண கோட்டம்’ வெறிபிடித்த வட்டம்.

 

ரேட்டிங் 3/5v

Recent Gallery