Casting : Arya, Siddhi Idnani, Viji Chandrasekar, Madhusudhan Rao, Thamizh, Naren, Singampuli
Directed By : Muthaiah
Music By : GV Prakash Kumar
Produced By : Vedikkaranpatti S. Sakthivel
நாயகி சித்தி இதானியின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது உறவினர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்காக அவரை யார் பெண் கேட்டு வந்தாலும் அவர்களை வெட்டி விரட்டியடிக்கிறார்கள். சித்தி இதானிக்கு துணையாக நிற்கும் ஆர்யா, அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இதனால் சித்தி இதானியின் உறவினர்கள் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்க, வேறு ஒரு கும்பலும் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. அந்த கும்பல் யார்? அவர்களுக்கும் ஆர்யாவுக்கும் இடையே என்ன பகை? இரண்டு தரப்பு எதிரிகளையும் ஆர்யா என்ன செய்தார்? என்பது தான் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் கதை.
கிராமத்து பின்னணியில், மதுரை கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பிய நடிகர் ஆர்யா, எந்த இடத்திலும் அந்த மண்ணின் மனிதராக தெரியவில்லை. படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் நிறைந்திருப்பதால் அவருக்கு நடிக்க பெரிய வாய்ப்பு அமையவில்லை. இருந்தாலும், கிடைத்த வாய்ப்புகளில் முடிந்தவரை நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இதானி ஆரம்பத்தில் வலுவான கதாபாத்திரமாக அறிமுகம் ஆனாலும், ஆர்யாவின் எண்ட்ரிக்குப் பிறகு டம்மியாக்கி ஓரம் கட்டப்படுகிறார்.
பிரபு, கே.பாக்யராஜ், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேணுகா, சிங்கம்புலி, தமிழ் என்று படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் அனைவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
கதையிலும், காட்சிகளிலும் எந்தவித வித்தியாசமும் இன்றி தனது பழைய பாணியில் இயக்கியிருக்கும் இயக்குநர் முத்தையா, தனது ஒரே கதையை வேறு பாணியில் சொல்ல முயற்சித்து சொதப்பியிருக்கிறார்.
படத்தில் வரும் கதாபாத்திரங்களையும், அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு முறைகளையும் புரிந்துக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் குழப்பமடையும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் முத்தையா, திரைக்கதை என்ற பெயரில் படம் முழுவதும் சண்டைக்காட்சிகளாக வைத்து கடுப்பேற்றுகிறார்.
இயக்குநர் முத்தையாவின் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தியேட்டருக்கு போகும் ரசிகர்கள் கூட இந்த படத்தை பார்த்து பதறியடித்து ஓடுவார்கள்.
ரேட்டிங் 2.5/5