Latest News :

‘சென்னை 2 சிங்கப்பூர்’ விமர்சனம்

69c64bc9efb91899795f92d434e4d94e.jpg

Casting : Gokul Anand, Sathya, Anju Kuriyan

Directed By : Appas Akbar

Music By : Gibran

Produced By : Gibran

 

படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் ஹீரோ, தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சிங்கப்பூர் செல்ல, அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லியிருப்பது தான் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ஒன்லைன் கதை.

 

இயக்குநராக வேண்டும் என்று சென்னையில் முயற்சித்து வரும் ஹீரோ கோகுல் ஆனந்த், நண்பரின் உதவியால் தயாரிப்பாளருக்கு கதை சொல்ல சிங்கப்பூருக்கு கிளம்ப, அங்கு போனால் அவரை வர சொன்ன தயாரிப்பாளர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

இதற்கிடையே, பாஸ்போர்ட், பணம் வைத்திருந்த தனது பேக்கை தொலைத்துவிடும் கோகுல், சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், சிங்கப்பூரில் தொடர்ந்து இருக்க முடியாத நிலைக்கு ஆளாக, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதனால் கோகுலின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் தான் ‘சென்னை 2 சிங்கப்பூரின்’ கதை.

 

தயாரிப்பாளரை சந்திப்பதற்காக சிங்கப்பூர் செல்லும் ஹீரோவுக்கு, தயாரிப்பாளருடன் காதலி, வில்லன், நண்பர் என அனைவரும் கிடைக்க, அவர்களுக்கு உதவி செய்யும் முயற்சியில் இறங்கும் ஹீரோ, பிரச்சினையில் சிக்கிக்கொள்ள, இறுதியில் தனது இயக்குநர் லட்சியத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பதை முழுக்க முழுக்க காமெடியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர்.

 

அறிமுக ஹீரோ கோகுல் ஆனந்த், அனுபவம் வாய்ந்த நடிகராக திரையில் ஜொலிக்கிறார். காமெடியாகட்டும், செண்டிமெண்ட் காட்சிகளாகட்டும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஹீரோவின் நண்பராக வரும் சத்யாவின் கதாபாத்திரமும், நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. காமெடியில் புதுமையை புகுத்தியிருக்கும் சத்யா, பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் மொக்கை போடவும் செய்கிறார்.

 

ஹீரோயின் அஞ்சு குரியன், நடிப்பால் குறைவாக கவர்ந்தாலும் அழகில் நிறைவாகவே இருக்கிறார். காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அவரது பிரஸன்ஸ் செம. எம்சி ஜேஸ், ராஜேஷ் பாலசந்திரன், ஷிவ் கேசவ் என பிற நடிகர்கள் புதிதாக இருந்தாலும், அவர்களது நடிப்பும் கதாபாத்திர அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

 

தனது பின்னணி இசை மூலம் பல படங்களுக்கு பலம் சேர்த்து வரும் ஜிப்ரான், இந்த படத்தின் காமெடிக் காட்சிகளில் கூட ஸ்கோர் செய்திருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்ப்பதோடு, பலே என்றும் சொல்ல வைக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, தமிழ்ப் படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியை அவ்வபோது நம் மனதில் எழ வைக்கிறார். பாடல் காட்சிகளை அழகியலோடு படமாக்கியிருப்பவர், முழு படத்தையும் ஆல்பம் பார்ப்பது போல பிரஸன்ஸ் செய்திருக்கிறார்.

 

ஊரை விட்டு ஊர் சென்று, அங்கு பிரச்சினையில் சிக்கி கொள்ளும் ஹீரோ, என்ற சப்ஜட்டை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு படம் தான் இந்த படமும். என்ன, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருவது போல காட்டப்பட்டு வந்த தமிழ் சினிமாவில், இயக்குநர் அப்பாஸ் அக்பர், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வது போல காட்டியிருக்கிறார். காமெடியை புதுமையாக கொடுக்க முயற்சித்து அதில் வெற்றி பெற்றிருப்பவர், ஒரு சில இடங்களில் தடுமாறவும் செய்திருக்கிறார்.

 

சாதாரண விஷயத்தை வைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க பொதுழுபோக்குக்கான படமாக இப்படத்தை இயக்கியிருக்கும் அப்பாஸ் அக்பர், கதாபாத்திரம் அமைத்த விதமும், அதற்கான நடிகர்கள் தேர்வு மற்றும் மேக்கிங் ஆகியவற்றால் படத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், கதையிலும் திரைக்கதையிலும் வித்தியாசத்தைக் காட்டாமல், காமெடியில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் இந்த ‘சென்னை 2 சிங்கப்பூர்’ காமெடி பயணம் ரசிகர்களுக்கு சிரிப்பு பாதி வெறுப்பு பாதி அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் உள்ளது.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery