Casting : Linga, Champika, Elango Kumaravel, Kaniha, Vinod Sagar, SriKrishna Dhayal, Gopal
Directed By : Balaji Venugopal
Music By : Navneeth Sundar
Produced By : Full House Entertainment
ஷார்ட்பிளிக்ஸ் (ShortFlix) ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘பானி பூரி’. (Paani Poori) 8 பாகங்களை கொண்ட இந்த தொடர் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.
நாயகன் லிங்காவும், நாயகி ஜம்பிகாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று லிங்கா ஆசைப்படுகிறார். தோழியின் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஆண்களின் அன்பு போலியானது, திருமணம் ஆன பிறகு மாறிவிடும், என்று நினைத்து குழப்பமடையும் ஜம்பிகா, லிங்காவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.
ஜம்பிகாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் கேட்டு அவரது வீட்டுக்கு லிங்கா செல்ல, விஷயம் ஜம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேலுக்கு தெரிந்து விடுகிறது. உடனே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இளங்கோ குமரவேல், காதலர்களுக்கு யோசனை சொல்கிறார். அதாவது, திருமணம் செய்துகொள்ளாமல், கணவன் - மனைவி போல் வாழும், லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் 7 நாட்கள் வாழ வேண்டும், இந்த 7 நாட்களில் லிங்காவின் காதல் உண்மையாக இருந்தால் அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம், இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.
அதன்படி, லிங்காவுடன் சேர்ந்து 7 நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் சம்மதிக்கும் ஜம்பிகா, 7 நாட்களுக்குப் பிறகு லிங்காவை விட்டு பிரிந்தாரா? அல்லது அவரை மணந்தாரா? என்பது தான் ‘பானி பூரி’ தொடரின் கதை.
லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறை சமூகத்திற்கு எதிரானது என்பதையும், அத்தகைய வாழ்க்கை முறையை மையப்படுத்திய இணையத் தொடர்கள் அடல்டு ஒன்லியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் மாற்றியமைத்து, குடும்ப அனுமதியோடு ஒரு லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை மையப்படுத்திய இணையத் தொடரை கண்ணியமாகவும், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு தொடராகவும் கொடுக்க முடியும் என்பதை இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இத்தொடரின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
காதல் காட்சிகள் மற்றும் காதல் வசனங்கள் என அனைத்தையும் மிக நாகரீகமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால், அழகு என்பது உருவம் சார்ந்தது அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும், மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஏற்கனவே பல திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த லிங்கா, காதலை மையப்படுத்திய ஒரு தொடரில் மிக இயல்பாகவும், வெள்ளந்தியாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். காதலிக்கும் போது எதற்கும் கவலைப்படாத ஜாலியான இளைஞராக நடித்திருப்பவர், தனது காதலி எதிர்ப்பார்க்கும் சிறிய விஷயத்தில் வழக்கமான ஆண்களின் மனநிலையோடு யோசிக்கும் காட்சியில் அட்டகாசமாக நடித்து அப்ளாஷ் பெறுகிறார்.
ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி ஜம்பிகாவின் நடிப்பு ரோபோ போலவே இருக்கிறது. அதிலும், அனைத்துக் காட்சிகளிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக நடிப்பது, ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் கொடுப்பது போன்றவை அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை குறைத்து விடுகிறது. தொடர் முழுவதும், மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தும் நடிகை ஜம்பிகா, நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜம்பிகாவும் தந்தையாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல், ஜாலியான தந்தையாக மட்டும் இன்றி மகளை சரியாக புரிந்துக்கொண்ட தந்தை வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பு அவருடைய கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வினோத் சாகர், வரும் ஆரம்ப காட்சிகள் நம்மை சிரிக்க வைத்தாலும், அதன் பிறகு வரும் காட்சிகளில் தனது அழுத்தமான நடிப்பால் நம் மனதில் சிறந்த குணச்சித்திர நடிகராக பதிந்து விடுகிறார்.
நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக நடித்திருக்கும் கனிகா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்புவாசிகளாக நடித்திருக்கும் கோபால் மற்றும் அவருடைய சகாக்கள் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதை முழுவதையும் கட்டிடங்களுக்குள் வைத்தே காட்சிப்படுத்தியிருக்கிறார். பல கோணங்களில் காட்சிகளை படமாக்கவில்லை என்றாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வித்தியாசமான முயற்சியாக இசையமைத்திருக்கும் இவருடைய வித்தியாசமான பணி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பி.கே-வுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. படம் முழுவதும் வசனக் காட்சிகள் நிறைந்திருப்பதால் காட்சிகளை விட பேச்சுகளை தான் அதிகம் வெட்டியிருப்பார். அப்படி இருந்தும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறை என்பது இளைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை அல்ல, பெற்றோர்களுக்கும் சம்மந்தம் இருக்கும் வாழ்க்கை என்பதை நகைச்சுவையாகவும், நாடகத்தன்மையாகவும் சொல்லியிருக்கிறார்.
கதாபாத்திரங்களை பேச வைத்தே 8 பாகங்களை படமாக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால் இயக்குநராக சிந்தித்ததை விட, எழுத்தாளராக அதிகம் சிந்தித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பார்ப்பது இணையத் தொடரா? அல்ல ரேடியோவில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் தொடரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் பழைய பாணியிலும், சீரியல் போலவும் இருப்பது தொடருக்கு சற்று பலவீனமாக இருந்தாலும், இயக்குநர் பாலாஜி வேணுகோபால் சொல்லியிருக்கும் மையக்கரு மற்றும் அதை சொல்லிய விதம் பலவீனத்தை மறைத்து, காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் மட்டும் இன்றி ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்ல அறிவுரையாக இருக்கிறது.
மொத்தத்தில், இந்த ’பானி பூரி’-யை அனைத்து தரப்பினரும் சுவைக்கலாம்.
ரேட்டிங் 3.5/5