Casting : Leo Sivakumar, Sanchita Shetty, Director Prabhu Solomon, Singam Puli, Raj Kapoor, Amudhavanan, Androos, Vijay Sethupathi
Directed By : R.Vijaya Kumar
Music By : NR Raghunanthan
Produced By : Esthell Entertainer - Dr.S.Zavier Brito
உதவி இயக்குநராக பணியாற்றும் நாயகன் லியோ சிவக்குமாரும், அவர் வீட்டின் எதிரே குடியிருக்கும் சஞ்சிதா ஷெட்டியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு லியோவின் வீட்டில் பச்சை கொடி காட்டினாலும், சஞ்சனா ஷெட்டியின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்புகிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.
சென்னையில் வாழும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கிறது. பிறகு இவர்கள் சென்னையில் சொந்த வீடு ஒன்றை வாங்குகிறார்கள். லியோ சிவக்குமாருக்கு திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பும் கைகூடி வருகிறது. இப்படி இவர்களது வாழ்வில் தொடர்ந்து நல்ல விஷயங்கள் நடந்து வர, திடீரென்று லியோ சிவக்குமாருக்கு வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பால், அனைத்தும் தலைகீழாக மாறிவிடுகிறது. அது என்ன? என்பது தான் ‘அழகிய கண்ணே’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார் அறிமுக நடிகர் என்றாலும், அதை திரையில் காட்டாமல் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். ஆட்டம், சண்டைக்காட்சி, காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திலும் சரவெடியாக வெடிப்பவர் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஆல் ரவுண்டர் ஹீரோ கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி, குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
சிங்கம் புலி வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. அமுதவாணன் மற்றும் ஆண்ட்ரூஸ் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
நாயகனின் அம்மா, தங்கை வேடத்தில் நடித்த நடிகைகள் மற்றும் சஞ்சிதா ஷெட்டியின் அப்பா, சித்தி, மாமா வேடத்தில் நடித்திருக்கும் நடிகை, நடிகர்கள் என அனைவரும் திரையில் அதிகம் பார்த்த முகங்கள் இல்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றமும், இயக்குநர் பிரபு சாலமனின் கதாபாத்திரமும், ராஜ் கபூரிஜ் அனுபவம் வாய்ந்த நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஏ.ஆர்.அசோக் குமாரின் ஒளிப்பதி காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது. காதலர்கள் சந்திக்கும் கோவிலை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் அசோக் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
உதவி இயக்குநரின் வாழ்க்கையை அழகான காதல் கதை மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.விஜய குமார், திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக எளிமையாகவும், இயல்பாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார்.
கதை, திரைக்கதை மற்றும் காட்சிகள் பழைய பாணியில் இருந்தாலும், முழு படத்தையும் மிக நாகரீகமாக கையாண்டு அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.விஜய குமார்.
சமூக நீதி பேசும் காதல் கதையாக இருந்தாலும் எந்த தரப்பினரையும் பாதிக்காத வகையில் காட்சிகள் மற்றும் வசனங்களில் கவனம் செலுத்திய இயக்குநர் க்ளைமாக்ஸ் காட்சியிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில், ‘அழகிய கண்ணே’ கொஞ்சம் அழகு, கொஞ்சம் அழுகை.
ரேட்டிங் 3/5