Latest News :

’பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்பட விமர்சனம்

8e8ba839ed241d4e5360404fa80509a9.jpg

Casting : Vikram Prabhu, Vani Bhojan, Dalli Dhananjaya, Anandh, Vivek Prasanna, Vela Ramamorthy

Directed By : Karrthik Adwait

Music By : Sagar

Produced By : Karthik Movie House - Karrthik Adwait

 

சராசரியான வெளிச்சத்தில் கண் பார்வை தெளிவாக இருக்காது, அதிகமான வெளிச்சத்தில் மட்டுமே கண் பார்வை சரியாக தெரியும், என்ற குறைபாடுள்ள நாயகன் விக்ரம் பிரபுக்கு, அவரது சித்தப்பா ஆனந்த் தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் இருக்கிறார். அதனால் கண் பார்வை குறைபாடு பற்றி கவலைப்படாமல், சொந்தமான தொழில், சந்தோஷமான குடும்பம் என்று விக்ரம் பிரபு மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்க, திடீரென்று அவரது சித்தப்பா ஆனந்த் கொலை செய்யப்படுகிறார்.

 

சித்தப்பாவின் கொலைக்கான காரணத்தை தேடும் விக்ரம் பிரபு, அரசியல் ரவுடி தனஞ்ஜெயா தான் சித்தப்பாவை கொலை செய்தார் என்பதை கண்டுபிடிக்கிறார். பிறகு அவர் என்ன செய்தார், அரசியல் ரவுடி தனஞ்செயா விக்ரம் பிரபுவின் சித்தப்பாவை எதற்காக கொலை செய்தார், என்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் மீதிக்கதை.

 

பல படங்களில் பார்த்த அதே வழக்கமான விக்ரம் பிரபு தான் என்றாலும் சண்டைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்க்கிறார். தாடியுடன் இருக்கும் இந்த தோற்றம் அவரது முகத்தில் சற்று மாற்றத்தை கொடுத்திருப்பதோடு, முரட்டுத்தனமான வேடத்திற்கு பொருத்தமானவராகவும் தெரிகிறார். 

 

அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்கும் வாணி போஜன், இந்த படத்திலும் அப்படிப்பட்ட ஒரு வேடத்தில் தான் நடித்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் டாலி தனஞ்ஜெயா, மசாலத்தனம் மிக்க வழக்கமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய கொடூர மனம் படைத்தவர் வேடத்திற்கு சரியாக பொருந்துவதோடு, நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.

 

ரெகுலர் நண்பன் வேடத்தில் விவேக் பிரசன்னா, பாசமிக்க சித்தப்பாவாக ஆனந்த், மக்களுக்கு உதவி செய்யும் அரசியல் தாதாவாக வேல ராமமூர்த்தி என பல படங்களில் பார்த்து பழகிய வேடங்கள் படம் முழுவதும் நிரம்பியிருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. நாயகனின் குறைபாட்டை காட்சிகள் மூலம் வெளிப்படுத்துவதோடு, அவருடைய பார்வை குறைபாடு எப்படி இருக்கும் என்பதை படம் பார்ப்பவர்களும் உணரச்செய்யும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பெரும்பாலான சண்டைக்காட்சிகள் குறைவான வெளிச்சத்தில் படமாக்கப்பட்டாலும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

 

சண்டைப்பயிற்சி இயக்குநர் தினேஷ் காசியின் உழைப்பு பாராட்டும்படி இருக்கிறது. படம் முழுவதும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிப்பதோடு, ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வேகமாகவும், வித்தியாசமாகவும் காட்சிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.

 

சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரைக்கதையின் பலவீனத்தை மறைக்க முயற்சித்திருக்கிறது.

 

அழுத்தம் இல்லாத திரைக்கதையை வேகமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரேம் குமார்.

 

விக்ரம் பிரபுக்கு இருக்கும் குறைபாடு மட்டுமே புதிய யோசனையாக இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் அத்வைத், அதை அழுத்தமில்லாமல் அமைத்திருப்பது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

யூகிக்கும்படியான காட்சிகள் மற்றும் அழுத்தமில்லாத கதபாத்திர வடிவமைப்புகளோடு, ஹீரோவுக்கு ஏற்படும் பிரச்சனைக்கான காரணமும் வலிமையில்லாமல் இருப்பது படத்தை தொய்வடைய செய்துவிடுகிறது.

 

நாயகனின் குறைபாடு, ஒளிப்பதிவு மற்றும் சண்டைக்காட்சிகள் மீது கவனம் செலுத்தியது போல், இயக்குநர் கார்த்திக் அத்வைத், திரைக்கதை மீதும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ஒளி வீசியிருக்கும். 

 

ரேட்டிங் 2.8/5

Recent Gallery