Latest News :

‘பம்பர்’ திரைப்பட விமர்சனம்

dd4796ef8e876c56695864bcf0090d9f.jpg

Casting : Vetri, Hareesh Peradi, Shivani Narayanan, Kavitha Bharathi, GP Muthu, Thangaduai, Kalki, Dhilipan, Aruvi Madhan, Aadhira, Soundarya

Directed By : M.Selvakumar

Music By : Govind Vasantha

Produced By : Vetha Pirctures - S.Thyagaraja B.E and T.Anandhajothi MA,B.ED

 

நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடும் நாயகன் வெற்றி, போலீஸுக்கு பயந்து ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு மலைக்கு செல்கிறார். அப்போது கேரளப் பகுதியில் லாட்டரி விற்கும் ஹரிஷ் பெராடி மீது இரக்கப்பட்டு அவரிடம் இருந்து ரூ.10 கோடி பரிசுக்கொண்ட பம்பர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். பிறகு அந்த லாட்டரி சீட்டை அங்கேயே தொலைத்து விட்டு தமிழகம் திரும்புகிறார்.

 

இதற்கிடையே, வெற்றி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசு அடிக்கிறது. ஆனால், அவருக்கு அந்த விஷயம் தெரியாத நிலையில், அவரிடம் ரூ.10 கோடி பரிசு கிடைத்த லாட்டரி சீட்டை சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக லாட்டரி சீட்டு விற்பனையாளர் ஹரிஷ் பெராடி வெற்றியை தேடி தமிழகம் வருகிறார். அவர் வெற்றியை கண்டுபிடித்தாரா? இல்லையா?, வெற்றிக்கு பம்பர் பரிசுத் தொகை ரூ.10 கோடி கிடைத்ததா? இல்லையா? என்பதை கமர்ஷியலாக மட்டும் இன்றி பணம் பத்துக்கு மேலும் செய்யும் என்பதையும் சொல்வதே ‘பம்பர்’.

 

வித்தியாசமான கதைக்களங்களில் நடித்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்ற விமர்சனத்தை நாயகன் வெற்றி இந்த படத்தில் தூள் தூளாக உடைத்தது மட்டும் இன்றி, ஆட்டம், பாட்டம், ஆக்‌ஷன், காதல் காட்சிகள் என அனைத்திலும் தூள் கிளப்பியிருக்கிறார். பணம் இல்லாத போது சுற்றியிருப்பவர்கள் அவரை அவமானப்படுத்தும் போதும், அதேபோல் தன்னிடம் கோடி கோடியாய் பணம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் அவரை சுற்றி நடக்கு மாறுதல்களையும் எதிர்கொள்ளும் காட்சிகளில் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஷிவானி நாராயணன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒட்டாத பெண்ணாக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை கதாபாத்திரத்தில் பொறுந்துவதற்கு முயற்சி செய்திருக்கிறார். 

 

வயதான லாட்டரி சீட்டு விற்பனையாளராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். தமிழ்ப் படங்களில் அதிகமாக வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததோடு, அந்த கதாபாத்திரத்தை கையாண்ட விதம் கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. 

 

போலீஸாக நடித்திருக்கும் கவிதா பாரதி, ஜி.பி.முத்து, அருவி மதன், ஆதிரா, தங்கதுரை, கல்கி, திலீப், செளந்தர்யா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

லாட்டரி சீட்டு ஒன்றை வைத்துக்கொண்டு குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்தது மட்டும் இன்றி சமய ஒற்றுமை, தனிமனித ஒழுக்கம், பணத்தால் மாறும் குணம் என்று பல நல்ல விஷயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.செல்வகுமார்.

 

திரைக்கதை மற்றும் காட்சிகள் முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வோடு பயணித்தாலும், பணம் ஒருவனை எப்படி மாற்றுகிறது என்பதையும், பணம் மட்டுமே எளியவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் தீர்வு என்பதைம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.செல்வகுமார், படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, தூத்துக்குடி மற்றும் கேரளப் பகுதிகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

 

லாட்டரி சீட்டை மையப்படுத்திய திரைக்கதையும், காட்சிகளும் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியும் இருந்தாலும், ரூ.10 கோடி பரிசை மிக எளிமையாக பெறுவது போல் காட்சி அமைத்திருப்பது ஒட்டவில்லை. 

 

வெற்றி தொலைத்த லாட்டரியை அவரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபடும் ஹரிஷ் பெராடியின் கதாபாத்திரம் மிக அழுத்தமானதாக இருப்பதோடு, எந்த நிலையிலும் நேர்மையோடு வாழ்பவர்களுக்கு கடவுள் மனித ரூபத்தில் வந்து உதவி செய்வார், என்ற மெசஜையும் மிக எளிமையாக சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.செல்வகுமார், படம் முழுவதையும் இப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலமாக ரசிக்க வைக்கிறார்.

 

தொய்வில்லாத திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள், அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றோடு கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் என்று ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும் இந்த ‘பம்பர்’ அனைவரும் பார்க்க கூடிய நல்ல படம்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery