Latest News :

’காடப்புறா கலைக்குழு’ திரைப்பட விமர்சனம்

4f24248f2067a805b3668d6192e5e725.jpg

Casting : Munishkanth, Kaali Venkat, Mime Gopi, Hari krishnan, Srilekha Rajendran, Swathi Muthu, Super good Subramani, Anthakudi ilayaraja

Directed By : Raja Gurusamy

Music By : Henry

Produced By : Dr.Muruganandam Veeraragavan M. Pharm., Ph. D.

 

’காடப்புறா கலைக்குழு’ என்ற பெயரில் கலைக்குழு நடத்தி வரும் கிராமிய நடனக் கலைஞரான முனீஷ்காந்த், இளைஞர்களுக்கு கிராமிய கலைகளையும், அதன் பெருமைகளையும் சொல்லிக்கொடுத்து, அவர்கள் மூலம் கிராமிய கலையை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக சொந்தமாக இடம் ஒன்றை வாங்கி, அதில் மிகப்பெரிய கிராமிய கலை பயிற்சி மையத்தை நிருவ வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டு பயணிக்கிறார். 

 

இதற்கிடையே ஊர் தலைவர் தேர்தலில் மைம் கோபியை எதிர்த்து நிற்பவருக்கு ஆதரவாக முனீஷ்காந்த் மற்றும் அவரது கலைக்குழுவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தேர்தலில் தோல்வியடையும் மைம் கோபி, தனது தோல்விக்கு முனீஷ்காந்த் தான் காரணம் என்று நினைத்து, அவரை பழிவாங்க துடிக்கிறார்.  இறுதியில், முனீஷ்காந்த் பழிவாங்கப்பட்டாரா, அவரது லட்சியம் நிறைவேறியதா, என்பதை சொல்வது தான் ‘காடப்புற கலைக்குழு’ படத்தின் மீதிக்கதை.

 

காமெடி நடிகராக நடித்து வந்த முனீஷ்காந்த், முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிராமிய கலைகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு கிராமிய நடனக் கலைஞர் வேடத்தில் நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பவர், நகைச்சுவை காட்சிகளிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார். நடனத்தில் பட்டய கிளப்பியிருக்கும் முனீஷ்காந்த், இனி வெறும் காமெடி நடிகராக மட்டும் இன்றி கதையின் நாயகனாக முழு படத்தையும் தன்னால் சுமக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

முனீஷ்காந்த் கலைக்குழு கலைஞராகவும், அவரது நண்பராகவும் நடித்திருக்கும் காளி வெங்கட், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

முனீஷ்காந்தின் தம்பியாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன் கல்லூரி மாணவர் வேடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, புரட்சிக்கரமாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சுவாதி முத்து புதுவரவாக இருந்தாலும் காட்சிகளை புரிந்து நடித்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் மைம் கோபி, ஸ்ரீலேகா ராஜேந்திரன், சூப்பர் குட் சுப்பிரமணியன், ஆதங்குடி இளையராஜா என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

அழிந்துக்கொண்டிருக்கும் கிராமிய கலைகள் பற்றியும் அதன் பெருமைகள் பற்றியும் பேசும் விதமாக கதை மற்றும் திரைக்கதை அமைந்திருந்தாலும், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜா குருசாமி.

 

படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும்படி இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளின் நீளம் பெரிதாக இருப்பது படத்தை தொய்வடைய செய்கிறது.

 

படத்தொகுப்பாளர் ராம் கோபி, கருணை இல்லாமல் பல காட்சிகளில் கத்திரி போட்டிருந்தால், படம் தப்பித்திருக்க வாய்ப்புண்டு.

 

வினோத் காந்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. 

 

ஹென்ரியின் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக இருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. கிராமிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காமெடி காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக சூப்பர் குட் சுப்பிரமணியத்தை காட்டும் போதெல்லம் இடம்பெறும் பீஜியமே நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

கிராமிய கலைகளின் பெருமைகளை மட்டும் பேசாமல் கிராமிய கலைஞர்களின் அவல நிலையையும் பேசியிருக்கும் இயக்குநர் அதை சோகமாக சொல்லாமல் ஜாலியாக சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது. அதே சமயம், திரைக்கதை மற்றும் காட்சிகளின் நீளத்தை குறைத்து படத்தை கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருந்தால் இந்த ‘காடப்புற கலைக்குழு’ வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery