Casting : Sivakarthikeyan, Aditi Shankar, Saritha, Mysskin, Sunil, Monisha Blessy, Yogi Babu, Vijay Sethupathi (Voice)
Directed By : Madonne Ashwin
Music By : Bharath Sankar
Produced By : Shanthi Talkies - Arun Viswa
பயந்த சுபாவம் கொண்ட நாயகன் சிவகார்த்திகேயன் பிரச்சனை என்று தெரிந்தால் ஒதுங்கிப் போவதே சரி, என்ற மனநிலையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். கார்ட்டூனிஸ்ட் வேலையில் சேருவதற்கான முயற்சியில் இருக்கும் அவருக்கு, நாயகி அதிதி ஷங்கர் மூலம் அந்த வேலை கிடைக்கிறது. இதற்கிடையே, சிவகார்த்திகேயனின் குடும்பமும், அவர் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களும் அரசு கட்டிக்கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார்கள். ஆனால், அங்கு சென்ற பிறகு அந்த மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல், அதை தனது கார்ட்டூன் கதையின் காட்சிகளாக சித்தரித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு திடீரென்று ஒரு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி மூலம் தான் எழுதும் கதையில் வரும் மாவீரனாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன், அதன் பிறகு என்ன செய்தார்? என்பதை சாமானியர்களுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாகவும், வித்தியாசமான ஃபேண்டஸி திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின்.
தனது முதல் படமான ‘மண்டேலா’-வில் சமூக பிரச்சினையை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லிய இயக்குநர் மடோன் அஷ்வின், இதிலும் சமூக பிரச்சனையை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பதோடு, ஃபேண்டஸி ஜானரை, கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தோடு கச்சிதமாக பொருத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
சென்னை குடிசைப்பகுதி வாழ் இளைஞராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், இதுவரை நடித்து வந்த பாணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தோற்றம், உடல் மொழி, நடிப்பு என அனைத்திலும் சத்யா என்ற கதாபாத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், பயந்துக்கொண்டே எதிரிகளை பந்தாடும் காட்சிகள் அனைத்தும் கைதட்டல் பெறுகிறது. அதிலும், வில்லன் மிஷ்கினின் வாள் வீச்சில் இருந்து எஸ்கேப்பாகி அதிர வைப்பவர், அடுத்த நொடியில் அவரிடம் மண்டியிட்டு, “இதையெல்லாம் நான் செய்யல” என்று அப்பாவியாக சொல்லும் இடத்தில், ”அடங்கெப்பா...நீ உலகமகா நடிகண்டா” என்று சொல்ல வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர், தினசரி பத்திரிகை துணை ஆசிரியர் வேடத்தில் அளவாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு வேலை வாங்கி கொடுப்பதோடு அவரது வேலை முடிந்து விட்டாலும், அவ்வபோது சில இடங்களில் தலைக்காட்டி விட்டு போகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார். அமைச்சராக நடித்திருக்கும் அவர் படம் முழுவதும் குறைவான வசனங்கள் மட்டுமே பேசி நடித்தாலும் கண்களின் மூலமாகவே உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியிருப்பவர், இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமான நடிப்பு மூலம் அப்ளாஷ் பெறுகிறார்.
யோகி பாபுவும், அவரது காமெடி காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. வழக்கம் போல் உருவம் கேலி செய்து ரசிகர்களை எரிச்சலடைய செய்யாமல் தனது அளவான வசனம் மற்றும் ரியாக்ஷன் மூலம் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார். வெறும் காமெடிக்காக மட்டும் இன்றி யோகி பாபுவின் கதாபத்திரம் பல சமூக பிரச்சனைகளையும் மேலோட்டமாக பேசுவது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா, மிஷ்கினின் உதவியாளராக நடித்திருக்கும் சுனில், சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருக்கும் மோனிஷா பிளஸி ஆகியோரும் தங்களது வேலையை சரியாக செய்து ரசிகர்கள் மனதில் நிற்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் பின்னணி குரல் வீரன் கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி படத்திற்கே பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விது அய்யனா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை காட்டிய விதமும், படத்தின் முக்கிய கதைக்களங்களான சென்னை குடிசைப்பகுதி மற்றும் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு இரண்டையுமே மிக இயல்பாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் முணு முணுக்க வைப்பதோடு, ஆட்டம் போடவும் வைக்கிறது. அதே சமயம், யுகபாரதியின் வரிகள் சில இடங்களில் புரியாதபடி இசை பயணித்திருப்பது சற்று குறையாக இருக்கிறது. ஆனால், அந்த குறையை பின்னணி இசை மூலம் சரிக்கட்டி விடுகிறார். பின்னணி இசையில் ஒலிக்கும் பீஜியங்கள் அனைத்தும் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பு கதையை சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் நகர்த்தி செல்கிறது.
சென்னை குடிசைப்பகுதி மக்களுக்கான மாற்று ஏற்பாடு என்ற பெயரில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆபத்துகளை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியிருந்தாலும், நமக்கான பிரச்சனைகளுக்கு நாம் கேள்வி கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின்.
படத்தில் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகள் நம்மை சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. குறிப்பாக, இறுதிக் காட்சியில் அமைச்சரிடம் சிவகார்த்திகேயன் திரும்ப திரும்ப கேட்கும் அந்த ஒரு கேள்வி.
கார்ட்டூன் கதையோடு தொடங்கும் படம், அதே ஆரம்ப காட்சியோடு முடிவடைவது, ஃபேண்டஸி கதையை இயல்பான கதைக்களத்தோடு பொருத்தி எழுதப்பட்ட திரைக்கதை ஆகியவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.
சமூக பிரச்சனையை பேசும் படம் என்றாலும் எந்த இடத்திலும் அறிவுரை சொல்லாமல், அதே சமயம் மக்களிடம் சேர்க்க வேண்டிய கருத்தை தெளிவாக சொல்லி, அரசியல் காட்சிகளை சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் மடோன் அஷ்வின், ’மாவீரன்’ மூலம் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5