Latest News :

’அவள் அப்படித்தான் 2’ திரைப்பட விமர்சனம்

b1952e711909370a3811edbb10beda7c.jpg

Casting : Abuthahir, Sneha Parthibaraja, Rajeshwari, Anitha Sri, Sumithra, Karthika, Venkat Ramanan

Directed By : Ra.Mu.Chidambaram

Music By : Aravind Sidharth

Produced By : Syed Abuthahir

 

கதையின் நாயகன் அபுதாஹிர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவரிடம் பலர் வேலை செய்கிறார்கள். நாயகனின் மனைவியான கதையின் நாயகி சினேகா பார்த்திபராஜா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு பள்ளி செல்லும் ஒரு மகள் இருக்கிறார்.

 

கணவன் - மனைவி இருவரும் வெவ்வேறு சிந்தனை உடையவர்களாக இருப்பது போல், பல விஷயங்களில் முரண்பாடான கருத்துடையவர்களாகவும் இருக்கிறார்கள். பெண் எப்போதும் ஆணுக்கு கீழே தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நாயகன். அவரது மனைவியான நாயகி, ஆணும் பெண்ணும் சமம் என்பதோடு, பெண் சுதந்திரமாகவும், தைரியமாகவும் வாழ வேண்டும் என்ற சிந்தனையோடு மட்டும் அல்லாமல் அப்படியே வாழ்ந்தும் வருகிறார்.

 

இந்த நிலையில், ஒரு நாள் சனிக்கிழமை காலை பள்ளி வேலைக்குச் சென்ற சினேகா பார்த்திபராஜா, இரவு 10 மணி வரை வீடு திரும்பவில்லை. இதனால், அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் பதற்றம் அடைந்து அவரை தேடி, இரவு முழுவதும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், மறுநாள் காலை சினேகா வீடு வந்து சேருகிறார். அவரை பார்த்தவுடன், அவருக்கு என்ன நடந்தது? என்று கேட்காமல், “ராத்திரி எங்கே போயிருந்தாய்?” என்று அவரது கணவர் கோபமாக கேட்கிறார். கணவரின் கேள்வியில் இருக்கும் அர்த்தத்தை புரிந்துக்கொண்ட மனைவி,  ”ராத்திரி நான் எங்கே போயிருந்தேன்னு தெரியணுமா? இல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியணுமா?” என்று மறுகேள்வி கேட்க, கணவரின் கோபம் அதிகரிக்கிறது. வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக வெடிக்க, பிறகு என்ன நடந்தது? என்பதை சொல்வது தான் ‘அவள் அப்படித்தான் 2’ படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அபுதாஹிர் ஆணதிக்க சிந்தனை கொண்டவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, மிக நேர்த்தியான நடிப்பு மூலம் ஒட்டு மொத்த பெண்களின் கோபத்திற்கு ஆளாகுகிறார். அதே சமயம், நடுத்தர குடும்பத்து கணவன் மார்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நடித்து பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் சினேகா பார்த்திபராஜா, மஞ்சு என்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். நடிப்பு மட்டும் இன்றி உடல் மொழி, வசன உச்சரிப்பு, ரியாக்‌ஷன் என அனைத்திலும் அசத்தியிருப்பவர், கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது பெண்களின் மன குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக நடித்திருப்பவர், பெண்களை அடக்கி ஆள நினைக்கும் ஆண்களுக்கு தனது பதில் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

 

அபுதாஹிரின் அம்மாவாக வரும் ராஜேஸ்வரி, சினேகாவின் அம்மாவாக வரும் அனிதா ஸ்ரீ, ஆச்சியாக வரும் சுமித்ரா, சிறுமி கார்த்திகா, சினேகாவின் அப்பா இயக்குநர் வெங்கட்ரமணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் வேதா செல்வத்தின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கச்சிதமாக கடத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கும் இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்தின் அளவான இசை காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது.

 

ஒரு ஆண் இரவு வீடு திரும்பவில்லை என்றால் அதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அதே சமயம், ஒரு பெண் இரவு வீடு வரவில்லை என்றால் அதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, என்ற கருத்தை மையமாக வைத்து பெண்ணியம் சார்ந்த ஒரு கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் இரா.மு.சிதம்பரம்.

 

ஒரு சில காட்சிகளை தவிர்த்து, படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டுக்குள் தான் நடக்கிறது. ஆனால், அந்த உணர்வே நமக்கு ஏற்படாத வகையில் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் கணவன் - மனைவி இடையே நடக்கும் உரையாடல் மோதலை, சமூகத்தில் ஆண் - பெண் இடையே நடக்கும் மோதலாக சித்தரித்த விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் என்பதால், படத்தில் காட்சிகளை விட கதபாத்திரங்களின் பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கிறது. இது சற்று குறையாக இருந்தாலும், வசனங்களின் கூர்மையால் இந்த குறை கூட காணாமல் போய்விடுகிறது.

 

சிறிய பட்ஜெட் படம் என்றாலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து மிகப்பெரியது. ஆனால், அந்த கருத்தை வசனங்கள் மூலமாக ரசிகர்களிடம் கொண்டு செல்ல நினைத்த இயக்குநர், காட்சிகளின் மூலமாகவும் கொண்டு செல்ல சற்று மெனக்கெட்டிருந்தால் ‘அவள் அப்படித்தான் 2’ சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery