Latest News :

’லாக்டவுண் டைரி’ திரைப்பட விமர்சனம்

4c96f7edc53c5916cc083e2ca9465540.jpg

Casting : Vihan Jolly, Sahana, Neha Saxena, Mukesh Rishi, MS Baskar, Praveena, Jolly Bastian, Mottai Rajendran, Muthukalai, Kalluri Vinoth

Directed By : Jolly Bastian

Music By : Jassie Gift

Produced By : Ankitha Productions - S.Murali

 

நாயகன் விஹான் ஜாலியும், நாயகி ஷகானாவும் காதலிக்கிறார்கள். பணக்கார பெண்ணான ஷகானாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளும் ஷகானா, கணவன், குழந்தை என்று பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். திடீரென்று உடல் நிலை பாதிக்கப்படும் அவர்களது  குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு, அதற்கு பல லட்சங்கள் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதே சமயம், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால், விஹான் வருமானம் இல்லாமல் கஷ்ட்டப்படுவதோடு, பலரிடம் கடன் வாங்கிவிட்டு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

 

இதற்கிடையே, வயதான தொழிலதிபர் முகேஷ் ரிஷியின் இளம வயது இரண்டாவது மனைவி நேஹா சக்சேனாவின் அறிமுகம் விஹானுக்கு கிடைப்பதோடு, அவர் விஹானை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்ற பண உதவி செய்கிறார். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு விஷயத்தை செய்ய சொல்ல, விஹான் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணத்திற்காக விஹான் பல இடங்களில் முயற்சித்தும் பணம் கிடைக்காமல் போக, அவர் மீண்டும் நேஹா சக்சேனாவிடம் உதவி கேட்கிறார். அவரோ, தான் சொல்வதை செய்தால், பணம் கொடுப்பதாக சொல்ல, விஹான் அதை செய்தாரா? இல்லையா?, நேஹா சக்சேனா கேட்பது என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் விஹான் ஜாலி தோற்றத்தில் வில்லன் போல் இருந்தாலும் நடிப்பில் தான் ஒரு நாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார். கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் போதும், உயிருக்கு போராடும் தன் குழந்தையின் நிலையை நினைத்து கலங்குவது மற்றும் நேகா சக்சேனாவின் வினோதமான விருப்பத்திற்கு இனங்க மறுப்பது என்று அனைத்து ஏரியாவிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். நடனம், சண்டைக்காட்சி என்று அனைத்திலும் அமர்க்களப்படுத்தியிருப்பவர், நடிகர்களுக்கு மிகவும் சிரமமான அழுகின்ற காட்சிகளில் கூட சிறப்பாக நடித்து, பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஷகானா, தமிழுக்கு புதுவரவாக இருந்தாலும் நல்வரவாகவே இருக்கிறார். அழகு மற்றும் நடிப்பு என இரண்டிலும் அசத்துபவர் கதை தேர்வில் கவனம் செலுத்தினால் நிச்சயம் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார்.

 

கன்னட சினிமாவின் முன்னணி நடிகையான நேஹா சக்சேனா, படத்தின் திருப்புமுனை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அவருடைய விருப்பம் எக்குத்தப்பாக இருந்தாலும், அதை அவர் வெளிப்படுத்திய விதம், அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை நினைத்துப் பார்க்க வைப்பதோடு, அவர் மீது ரசிகர்களுக்கு கோபம் வராமல், அனுதாபமும், அக்கறையும் வர வைக்கிறது. 

 

நேஹா சக்சேனாவின் கணவராக நடித்திருக்கும் முகேஷ் ரிஷி, நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் ஜாலி பாஸ்டியன் - பிரவீனா, முன்னா சைமன், முத்துகாளை, விஷ்ணுகுமார், கல்லூரி வினோத், திரிஷ்யா என அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பி.கே.எச்.தாஸ், கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, பாடல் காட்சிகளை அழகாகவும், சண்டைக்காட்சிகளை அமர்க்களமாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

ஜேசி கிஃப்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு கதையை சுவாரஸ்யமாக நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. 

 

லாக்டவுண் என்று தலைப்பு வைத்தாலும், ஊரடங்கு பிரச்சனை பற்றி அதிகம் பேசாமல், ஒரு பெண்ணின் பிரச்சனையை பேசும் விதமான கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜாலி பாஸ்டியனின் யோசனை விபரீதமானதாக இருந்தாலும், அதை வித்தியாசமாக கையாண்டு ரசிக்க வைத்திருக்கிறார்.

 

கால் டாக்ஸி ஓட்டும் நாயகனின் கடன் பிரச்சனை, நேஹா சக்சேனாவுடனான் சந்திப்புக்கு பிறகு கதையில் வரும் திருப்புமுனை ஆகியவை முதல் பாதி படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் வரும் விஹான் - ஷகானா காதல் காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டாலும், அவற்றால் திரைக்கதை தொய்வடைகிறது. அந்த காட்சிகளை அளவாக பயன்படுத்திவிட்டு, மீண்டும் விஹான் - நேஹா சக்சேனா காட்சிகளை தொடர்ந்திருந்தால் முதல் பாதி போல் இரண்டாம் பாதியும் ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கும்.

 

சர்ச்சையான ஒரு விஷயத்தை நாகரீகமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஜாலி பாஸ்டியன், அதற்கு காரணமான பெண் மீது ரசிகர்களுக்கு வெறுப்பு வராமல், இரக்கம் வரும் வகையில் காட்சிகளை கையாண்டிருப்பதற்காகவே அவரை பலமாக பாராட்டலாம்.

 

குடும்ப சூழ்நிலையால் அதிகம் வயது வித்தியாசமுள்ள ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் இளம் வயது பெண்களின் மனநிலையை தவறாக சித்தரித்து வந்த சினிமாவில், அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை மிக அழுத்தமாகவும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படியும் சொல்லியிருக்கும் இயக்குநர் ஜாலி பாஸ்டியனை கோலிவுட் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்.

 

மொத்தத்தில், இந்த ‘லாக்டவுண் டைரி’ கருத்தை கலர்புல்லாக சொல்லி ரசிக்க வைக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery