Casting : Aaditya Bhaskar, Ammu Abhirami, Vinoth kishan, Abhirami Venkatachalam, Delhi Ganesh, Leela Samson
Directed By : AMR Murugesh
Music By : R2 BRO'S
Produced By : Cinemakaaran - Vinoth Kumar Senniappan
அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாச்சலம், டில்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோரது நடிப்பில், வினோத் குமார் சென்னியப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வான் மூன்று’. வரும் ஜூலை 11 ஆம் தேதி ஆஹ தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணுக்கும், இளைஞனுக்கும் இடையே மலர்கின்ற மறுகாதல், திருமணமாகி 10 மாதங்கள் ஆன தம்பதி மற்றும் வயதான தம்பதி ஆகியோரது வாழ்க்கை மற்றும் அவர்களுடைய காதலை சொல்வது தான் ‘வான் மூன்று’.
தற்போதைய வேகமான உலகத்தில், தங்களுக்கு அருகே இருப்பவர்களை வேகமாகவே கடந்துவிடுகிறோம். ஆனால், திடீரென்று ஒரு நாள் அவர்கள் நம்மை விட்டு பிரிய வேண்டிய நேரம் வரும் போது தான் அவர்கள் மீதான காதல் வெளிப்படும். அப்படிப்பட்ட மூன்று காதல் கதைகளை கவிதைப்போல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்.
காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆதித்யா பாஸ்கர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அம்மு அபிராமியின் மூலம் மனம் மாறுவதும், அம்மு அபிராமி தனது கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்குவதும், அறியாத வயதில் காதலித்து கஷ்ட்டப்படும் இளைஞர்களுக்கு நல்ல பாடம். இருவரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
திருமணமாகி 10 மாதங்கள் ஆன நிலையில் தனது காதல் மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் வினோத் கிஷன் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம் தம்பதி முதிர்ச்சியான காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். உயிருக்கு போராடும் மனைவியின் நிலையை எண்ணி எப்போதும் இருக்கமாக இருக்கும் வினோத் கிஷன், உயிரோடு இருப்பேனா?, இல்லையா? என்று தெரியாமல் கலங்கும் அபிராமி வெங்கடாச்சலம் இருவரது நடிப்பும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
டில்லி கணேஷ் - லீலா சாம்சன் தம்பதியின் வயது மற்றும் அனுபவமான நடிப்பு, விட்டுக்கொடுத்து போகும் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறது. தான் இறக்கப் போவதை விட, தனக்குப் பிறகு தனது கணவரை யார் பார்த்துக்கொள்வார் என்ற கவலை இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அவரை தேற்றும் காட்சிகளில் லீலா சாம்சன் அசத்துகிறார். மறுபக்கம், மனைவியை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவருடன் இயல்பாக பேசும் காட்சிகளில் தனது இயல்பான நடிப்பு மூலம் டில்லி கணேஷ் மிரட்டுகிறார்.
முழுப்படமும் மருத்துவமனையில் நடக்கிறது. ஒரே இடத்தில் கதை நகர்ந்தாலும் வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளில் வேறுபாட்டை காண்பித்து ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ்.
ஆர் 2 பிரதர்ஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதை மற்றும் காட்சிகளில் இருக்கும் காதல் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ், திரைக்கதையில் இருக்கும் உணர்வை எந்தவிதத்திலும் திசை திருப்பாமல் காட்சிகளை தொகுத்திருக்கிறார். ஒரே அளவிலான வேகத்தில் முழு திரைக்கதை பயணித்திருப்பது படத்தின் மையக்கருவுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டுமானது அல்ல, அது அனைத்து வயதினருக்கும் பொதுவானது என்பதை சொல்லும் வகையில், அனைத்து வயதினரும் ரசிக்க கூடிய ஒரு அழகான காதல் கதையை எளிமையாகவும், எதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.எம்.முருகேஷ்.
ஒரே இடத்தில் நடக்கும் கதை, கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மூலமாக மட்டுமே அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய சூழல் என்றாலும், அளவான வசனங்களை வைத்து, அதை மிக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ், காட்சிகளை அழகியலோடு படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் எந்த ஒரு இடத்திலும் அதிகமாக நடிக்காமல், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது, திரைக்கதையின் வேகம் குறைவாக இருந்தாலும், எந்த ஒரு காட்சியையும் தேவையில்லாமல் நீட்டிக்காமல் சுருக்கமாக காண்பித்து அடுத்தடுத்த காட்சிகளுக்கு பயணிப்பது, மூன்று கதைகளின் மையக்கரு காதல் என்றாலும், வாழ்க்கையில் காதலையும் தாண்டிய பல விஷயங்கள் இருக்கிறது, என்ற கருத்தை சொல்லிய விதம் என அனைத்தையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.எம்.முருகேஷை தமிழ் சினிமா கைதட்டி வரவேற்கும்.
மொத்தத்தில், ‘வான் மூன்று’ நலம்.
ரேட்டிங் 3/5