Latest News :

’ஹர்காரா’ திரைப்பட விமர்சனம்

74a495b0de1678aea1fca56608610866.jpg

Casting : Ram Arun Castro, Kaali Venkat, Gautami Chowdry, 'Pichaikkaran' Murthy, Jayaprakash Radhakrishnan, Nicola Fuster, Balu Bose, Ambed, Kulothungan, Senthil, 'Kayal' Vijayalakshmi

Directed By : Ram Arun Castro

Music By : Ramshanker

Produced By : Kalorful Beta Movement, Paradigm Pictures, Dheena Productions - N.A.Ramu, Saravanan Ponraj

 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலை கிராமம் ஒன்றில் இயங்கி வரும் அஞ்சல் அலுவலகத்தில் காளி வெங்கட் பணியாற்றுகிறார். கடித போக்குவரத்தைக் காட்டிலும், முதியோர் உதவித்தொகை, சிறு சேமிப்பு போன்ற பண பரிமாற்றங்களுக்காக அந்த கிராம மக்கள் அஞ்சல் அலுவலகத்தை சார்ந்திருக்கிறார்கள். அதே சமயம், அந்த ஊர் மக்களின் வெகுளித்தனமான செயல்களை தொல்லையாக நினைக்கும் தபால்காரர் காளி வெங்கட், அந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைக்கிறார். அதற்காக, அங்கிருக்கும் அஞ்சல் அலுவலகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டம் போடுவதோடு, அதை கிராம மக்களுக்கு தெரியாமல், அவர்கள் மூலமாகவே செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

 

இதற்கிடையே, கடிதம் ஒன்றை உரியவரிடம் சேர்ப்பதற்காக மலை மீது நெடுந்தூரம் பயணிக்கும் காளி வெங்கட், கிராம மக்கள் தெய்வமாக வணங்கும் மாதேஸ்வரனின் வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொள்வதோடு, தனது தவறையும் உணர்கிறார். காளி வெங்கட்டின் மனதை மாற்றிய அந்த மாதேஸ்வரன் யார்?, அவர் அந்த மக்களுக்காக செய்த தியாகம் என்ன? என்பதை சொல்வது தான் ‘ஹர்காரா’.

 

உலகத்திலேயே மிகப்பெரிய அஞ்சல் துறையாக செயல்படும் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களின் பணி சாதாரணமானது அல்ல என்பதை, குலதெய்வமாக வணங்குபவர்களின் பின்னணியில் இருக்கும் தியாக கதையோடு சேர்த்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ.

 

தபால்காரராக நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போல தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத தனது குமுறலை வெளிப்படுத்துவதிலும் சரி, கிராம மக்களின் அன்புத்தொல்லையில் சிக்கி அவதிப்படுவதிலும் சரி, தனது நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

மாதேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். 150 வருடங்களுக்கு முன்பு தபால்காரர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய பணி எத்தகைய சிரமம் வாய்ந்தவையாக இருக்கும், என்பதை தனது ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படுத்தியிருப்பவர், சிலம்பம் சுற்றுவதிலும் அசத்தியிருக்கிறார்.

 

Harkara

 

நாயகியாக நடித்திருக்கும் கவுதமி செளத்ரியின் வேடம் சிறியது என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார். பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்திருக்கும் நிக்கோலா ஃபுஸ்ட்டேர், பாலு போஸ், அம்பேத், கயல் விஜயலட்சுமி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் பிலிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் இருவரது பணியும் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. மலை கிராமங்களில் பயணிக்கும் தபால்காரர்களின் வலி மிகுந்த பயணத்தை பார்வையாளர்களும் உணரும்படி காட்சிகளை படமாக்கியிருப்பவர்கள், 150 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

 

ராம் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. ஆரவாரம் இல்லாமல் அளவாக பயணித்திருக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

இரண்டு கதைகளையும் மிக நேர்த்தியாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் டேனியல் சார்லஸ், அடுத்தது என்ன நடக்கும்? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில், இரு கதைகளின் காட்சிகளையும் சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பதோடு, ரசிகர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

வி.ஆர்.கே.ரமேஷின் கலை இயக்கம் மற்றும் ரன் ரவியின் சண்டைக்காட்சிகளும் கவனம் ஈர்க்கிறது.

 

ஹர்காரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ தான் கதை எழுதி இயக்கியிருக்கிறார். தபால்காரர்களின் பணி மற்றும் அஞ்சல் துறையின் சிறப்பை சொல்லும் ஒரு கதையில், ஹர்காரா என்று அழைக்கப்பட்ட தபால்காரர்களை பற்றிய விசயங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

 

“4ஜி, 5ஜி என்று எது வந்தாலும், நம்ம தபால்காரங்க போற பகுதிக்கு எந்த தொழில்நுட்பமும் போகாது” போன்ற வசனங்கள் இந்திய அஞ்சல் துறையை கெளரவிக்கும் வகையில் இருப்பதோடு, அரசுத்துறை மீதும், அரசு ஊழியர்கள் மீதும் மக்கள் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், என்பதை வெளிக்காட்டும் விதத்தில் இருக்கும் காட்சிகள் கைதட்டல் பெறுகிறது.

 

தபால்காரர்களின் பணி ஒரு கடிதத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது மட்டும் அல்ல, ஒரு காலத்தில் உயிரையும் பணிய வைத்து அந்த பணியை செய்தார்கள், என்பதை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹர்காரா கதாபாத்திரமும், அவர் மக்களுக்காக அனுபவித்த தண்டனையும் மனதை கனக்க செய்கிறது.

 

ஆங்கிலேயர்களின் வருகையால் நாடு முன்னேற்றம் அடைந்தது என்ற நினைப்பில் இருப்பவர்களுக்கு, அதன் உண்மையான நிலவரத்தை சொல்லியிருக்கும் இயக்குநர், நிலத்தை கொள்ளையடித்தவர்கள் மலைகளையும் கொள்ளையடிக்க போடும் திட்டத்தை மட்டும் சற்று நம்பும்படி சொல்லியிருக்கலாம். அல்லது, நிஜத்தில் அவர்கள் மலைகள் மீது தங்களது சுய  லாபத்திற்காக செய்தையாவது சொல்லியிருந்தால், படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

 

திரைக்கதையும், காட்சிகளும் எதிர்பார்ப்புடனும் வேகமாகவும் பயணித்தாலும், சில காட்சிகள் திரும்ப திரும்ப வருவது போன்றும், ஒரே விசயத்தை பலர் பல்வேறு பாணியில் சொல்வது போன்ற காட்சிகள் படத்திற்கு சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. இவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் ‘ஹர்காரா’ நிச்சயம் ஆஹா...என்று பாராட்டும் நல்ல படமே.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery