Latest News :

‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்பட விமர்சனம்

8194707ca097aed4674c8ff1b8b8dbd8.jpg

Casting : Dulquer Salmaan, Shabeer Kallarakkal, Prasanna, Gokul Suresh, Aishwarya Lekshmi, Saran Shakthi,Chemban Vinod Jose, Shammi Thilakan, Anikha Surendran, Nyla Usha, Shanthi Krishna, Sudhi Koppa

Directed By : Abhilash Joshiy

Music By : Jakes Bejoy, Shaan Rahman

Produced By : Dulquer Salmaan, Zee Studios

 

கொத்தா என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி ஷபீர், அங்கு கச்சா உள்ளிட்ட போதை வியாபாரத்தை செய்து வருகிறார். அந்த ஊருக்கு வரும் புதிய போலீஸ் அதிகாரி பிரசன்னா, ஷபீரின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து, அவரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது, ஷபீருக்கு முன்பு கொத்தாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் துல்கர் சல்மான் என்றும், அவரது நெருங்கிய நண்பர் தான் ஷபீர் என்றும் தெரிய வருகிறது. அதே சமயம், தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் கொத்தாவை விட்டு  துல்கர் சல்மான் வெளியேற, அதன் பிறகு ஷபீர் கொத்தாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கு அட்டூழியம் செய்வதையும் தெரிந்துக்கொள்ளும் பிரசன்னா, ஷபீரை அழிக்க துல்கர் சல்மானை மீண்டும் கொத்தாவுக்கு வரவைக்க முடிவு செய்கிறார். அதன்படி, துல்கர் சல்மான் மீண்டும் கொத்தாவுக்கு வர, பிறகு கொத்தா யாருக்கு சொந்தமானது? என்பதை அதீத மசாலாத்தனத்தோடு சொல்வது தான் ‘கிங் ஆஃப் கொத்தா’.

 

கேங்ஸ்டராக நடித்திருக்கும் துல்கர் சல்மான் கிங்காக மிரட்டவில்லை என்றாலும் ஒரு இளவரசராக ரசிக்க வைக்கிறார். முதல் பாதியில் கொத்தா ராஜுவாக சில சண்டைக்காட்சிகளில் அசத்தியிருப்பவர், இரண்டாம் பாதியில் ராஜு மதராஸியாக மிரட்ட முயற்சித்திருப்பதோடு, முதிர்ச்சியான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். 

 

கண்ணன் பாய் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஷபீர், கொடுத்த வேலையை 200 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் செய்திருக்கிறார். பெரிய டானாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் சில விசயங்களில் தடுமாறுவது, தன்னை விடவும் பெரியவனை அழிக்க முடியாமல் திணறுவது என்று பல இடங்களில் நடிப்பில் வேறுபாடு காட்டி அசத்தியிருக்கிறார்.

 

செம்பன் வினோத் ஜோஸ், பில்டப்புடன் அறிமுகமானாலும் ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறார். அவருடைய வேடமும் மிரட்டலாக அல்லாமல் காமெடிக்கானதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரசன்னாவின் அறிமுகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அந்த அறிமுக காட்சிக்குப் பிறகு அவருடைய வேடமும் டம்மியாக்கப்பட்டு விடுகிறது.

 

துல்கர் சல்மானின் தந்தையாக நடித்திருக்கும் ஷம்மி திலகன், சில காட்சிகளில் வந்தாலும் மாஸ் காட்டியிருக்கிறார். முன்னாள் ரவுடியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அவருடைய வேடத்திற்கு ஏற்றபடி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு மாஸ் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கோகுல் சுரேஷ், துல்கர் சல்மான் - ஷபீர் இடையிலான நட்பு மற்றும் அவர்களுடைய கதையை சொல்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். 

 

ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்தர் ஆகியோரின் வேடங்கள் கதையின் ஓட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆனால், கொத்தா என்ற ஊர் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் விளங்குகள் செயற்கைத்தனமாக இருக்கிறது.

 

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் ஆகியோரது இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்தாலும், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ படத்தின் சாயல் அதிகமாக தெரிகிறது.

 

படத்தொகுப்பாளர் உமா சங்கர் சபாபதி, பல காட்சிகளுக்கு இரக்கம் காட்டியிருப்பது ரசிகர்களின் பொருமையை சோதித்திருக்கிறது. அதிலும் பில்டப் காட்சிகளுக்கே பில்டப் கொடுக்கும் வகையிலான காட்சிகளுக்கு கருணை காட்டியிருப்பது பெரும் சோகம்.

 

அபிலாஷ் என்.சந்திரனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அபிலாஷ் ஜோஷி, ஒரு கேங்க்ஸ்டர் கதையை கேரள கலாச்சாரத்தை தாண்டி, மிகப்பெரிய கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், சில மலையாளப் படங்களின் சாயல்களும், கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு அதிகமான பில்டப்புகளும் அவரது முயற்சியை தோல்வியடைய செய்துவிட்டது.

 

கொத்தா என்ற ஊர் முழுக்க முழுக்க செயற்கைத்தனமாக இருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். அந்த ஊரும், அந்த மக்களும் பார்வையாளர்களிடம் எந்தவிதத்திலும் தொடர்பில்லாமல் பயணிப்பது திரைக்கதைக்கு பலவீனமாக அமைந்துவிட்டது.

 

துல்கர் சல்மானுக்கு கொடுக்கப்படும் பில்டப்பை சரிக்கட்டும் வகையில், அவருடைய ரவுடி சாம்ராஜ்யம் தொடர்பான காட்சிகள் முழுமையாக வடிவமைக்கப்படாதது படத்திற்கு தொய்வை கொடுப்பதோடு, ”படம் எப்போ முடியும்” என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

 

படத்தில் இடம்பெறும் சிறு சிறு வேடங்களுக்கு கூட பெரிய பில்டப் தேவையில்லாதது என்றாலும், படம் முழுவதும் அதை தான் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி செய்திருக்கிறார். துல்கர் சல்மானை பெரிய கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும், என்ற கடிவாளங்களுடன் பயணித்திருக்கும் இயக்குநர், ஷபீரின் வேடத்தை எளிமையாக அமைத்திருந்தாலும், ரசிக்கும்படி அமைத்திருப்பது பெரும் ஆறுதல்.

 

எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், மலையாளப் படங்களுக்கு இருக்கும் தனித்துவம் அதன் இயல்பான காட்சி அமைப்புகளும், கதாபாத்திரங்களின் இயல்பான வடிவமைப்பும் தான். ஆனால், அவை இரண்டும் இந்த படத்தில் இல்லாதது மலையாள ரசிகர்களுக்கு மட்டும் அல்ல தமிழ் ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமே.

 

மொத்தத்தில், ‘கிங் ஆஃப் கொத்தா’ ராஜா அல்ல.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery