Casting : அதர்வா, சூரி, ரெஜினா கசண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதீ, பிரணிதா, நான் கடவுள் ராஜேந்திரன்
Directed By : ஓடம் இளவரசு
Music By : டி.இமான்
Produced By : அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா
ஒரு பெண்ணிடம் காதலை சொல்லவே கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை காக்க வைத்த நடிகர் முரளியின் மகனான அதர்வா, பல பெண்களை காதலிக்கும் காதல் மன்னனாக நடித்துள்ள படமே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’.
அதர்வாவின் அப்பா தீவிர நடிகர் ஜெமினிகணேசனின் ரசிகர் என்பதால், தனது மகனுக்கு அந்த பெயரை வைத்து விடுகிறார். பெயருக்கு ஏற்றவாறு பல பெண்களை அதர்வா காதலித்தாலும், திருமணம் என்னவோ வீட்டில் பார்த்த பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷுடன் தான் நிச்சயமாகிறது. தனது திருமண பத்திரிகையை தனது முன்னாள் காதலி ரெஜினா கசண்ட்ராவுக்கு கொடுக்க அவரை தேடி செல்லும் அதர்வாவுக்கு, சுருளிராஜன் என்ற சூரி நண்பராக, அவரிடத்தில் தனது பழைய காதலிகள் குறித்தும் காதல் குறித்தும் சொல்ல, அதை கேட்ட சூரிக்கு, சூடாகி கடுப்பாகி, அதன் விளைவாக என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை.
இளம் நாயகனாக இருந்தாலும், குரலில் சீனியர் நடிகராக தெரியும் அதர்வாவின் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இந்த ஜெமினிகணேஷன் கதாபாத்திரம் அமைந்தாலும், அவருக்கு சரியாக பொருந்தவில்லை. ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதீ என்று நான்கு கதாநாயகிகள் இருந்தாலும், படத்தில் ரொமான்ஸ் என்பது ரொம்ப குறைவாகவே இருக்கிறது என்றால் அதற்கு அதர்வா தான் காரணம். இருந்தாலும், முதல் முறையாக காமெடி களத்தில் பயணித்துள்ள அதர்வா பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.
ஒவ்வொரு ஹீரோயினும் ஒரு விதம், என்று நான்கு கதாநாயகிகளும் நான்கு விதமாக இருப்பது, திருநெல்வேலி அல்வா அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பது போல இருக்கிறது. அதிலும் ரெஜினா ரொம்பவே ஸ்பெஷல். பிரணிதாவுக்கு சிறிய வேடம் என்றாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார். கதாபாத்திரத்திற்கான நடிகை என்று பெயர் எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், கமர்ஷியல் கதாநாயகியாக முயற்சித்திருக்கிறார், வாழ்த்துவோம்.
டைடில் வேடங்களில் ஒன்றான சுருளிராஜன் என்ற வேடத்தில் நடித்துள்ள சூரிக்கு ஹீரோயின் இல்லை என்றாலும், ஹீரோவுக்கு நிகராக படத்தில் இடம் பிடித்திருப்பதோடு, ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்கிறார். காமெடிக் காட்சிகளில் அதர்வா தடுமாறும் இடங்களில் சமாளிப்பதோடு, ரசிகர்களை தனது காமெடிக் காட்சிகள் மூலமாக சரளமாக சிரிக்க வைக்கிறார். மொத்தத்தில் மூன்று படங்களுக்கு தேவையான சரக்கை, இந்த ஒரு படத்திற்கே கொடுத்து சுருளிராஜனை ரசிகர்களிடம் பாராட்டு வாங்க வைத்துவிட்டார் சூரி.
டி.இமானின் இசையில் வழக்கமான மெட்டுக்கள் தான் என்றாலும் ரசிக்க முடிகிறது. ஸ்ரீ சரவணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கரிஸ்மா ஆல்பம் போல உள்ளது.
காதல், காமெடி என்று இரண்டுமே படத்தில் தூக்கலாக இருந்தாலும், வசனத்திலும், காட்சிகளிலும் எல்லை மீறாமல் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கிறார் இயக்குநர் ஓடம் இளவசரசு. படத்தின் முதல் பாகம் சற்று மெதுவாக நகர்ந்தாலும், சூரி எண்ட்ரிக்குப் பிறகு சூடு வைத்த ராக்கெட் போல படம் பறக்க தொடங்குகிறது.
காமெடியில் காதல், காதலில் காமெடி, என்று ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் செய்யும் இந்த ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ தலைப்புக்கு ஏற்ற படமாக மட்டும் இருப்பதோடு, படம் பார்க்கும் ரசிகர்களை திருப்தி படுத்தும் படமாகவும் உள்ளது.