Casting : Hamresh, Aadukalam Murugadass, Sai Sri Prabhakaran, Akshaya, Prarthana Sandeep, Amit Pargav
Directed By : Vaali Mohan Dass
Music By : Sundramoorthy
Produced By : Gopuram Studios
மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து சலவை தொழில் செய்து வரும் ஆடுகளம் முருகதாஸ், தன் மகனை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். அவர் தான் நாயகன் ஹமரேஷ். மாநகராட்சி பள்ளியில் படிக்கும் ஹமரேஷை, பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று தந்தை நினைக்கிறார். ஆனால், ஹமரேஷுக்கு அதில் விருப்பம் இல்லை, இருந்தாலும் தந்தைக்காக அவர் சேர்க்கும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிப்பவர், அங்குள்ள சக மாணவர்களால் லோக்கல் என்று சொல்லி சீண்டப்படுகிறார். இருந்தாலும் தனக்கு பிடித்த பெண் பிரார்த்தனா அந்த பள்ளியில் படிப்பதால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அங்கேயே படிப்பை தொடர்கிறார்.
இதற்கிடையே, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் சரியாக படிக்க முடியாமல் திணறும் ஹமரேஷை, அப்பள்ளியில் இருந்து நீக்கும் முயற்சியில் தலைமை ஆசிரியர் ஈடுபடுகிறார். ஆனால், தமிழ் ஆசிரியரின் ஆதரவால் அது நடக்காமல் இருக்க, ஹமரேஷும் படிப்பில் முன்னேற்றம் அடைகிறார். இந்த சமயத்தில், சக மாணவர்கள் செய்த செயலால் ஹமரேஷுக்கு பெரிய பிரச்சனை ஏற்பட, அதன் பிறகு அவர் பள்ளி வாழ்வு என்னவானது? என்பது தான் மீதிக்கதை.
துடிப்பான பள்ளி மாணவராக நடித்திருக்கும் புதுமுகம் ஹமரேஷ், முதல் படம் என்ற எந்தவித தயக்கத்தையும் எந்த இடத்திலும் துளி கூட காட்டாமல் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.
பள்ளி மாணவியாக நடித்திருக்கும் பிரார்த்தனாவை கதாநாயகி என்று சொல்ல முடியாத அளவுக்கு குழந்தை முகம் மாறாமல் இருக்கிறார். சிறுமி வேடத்தில் அவரை நடிக்க வைத்திருக்கலாமே தவிர, இப்படி காதல் வயப்படும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருக்கிறது.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், சபாஷ் சொல்லும்படி சிறப்பாக நடித்திருக்கிறார். தனது மகன் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறும் போது வெளிப்படுத்தும் மகிழ்ச்சியும், அதே சமயம், அந்த நிலை அப்படியே மாறும் போது கலங்கும் காட்சியின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
முருகதாஸின் மனைவியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ, வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். வட சென்னை பெண் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பவருக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் பெரிய எதிர்காலம் உண்டு.
ஹமரேஷின் சகோதரியாக நடித்திருக்கும் அக்ஷயாவும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும்படி நடித்து கவனம் ஈர்க்கிறார்.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்து காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது.
இசையமைப்பாளர் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணித்திருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
பள்ளி மாணவர்களை மையப்படுத்திய கதை என்றால் என்னலாம் இருக்குமோ அவை அனைத்தும் இந்த படத்திலும் இருக்கிறது. அதே சமயம், கல்வி அரசியல் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் இவற்றில் மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுப்பது எது? என்ற விவாதத்தையும் நடத்தியிருக்கிறார். ஆனால், அவருடைய விவாதத்தில் சரியான தீர்ப்பு கிடைக்காமல் போனது தான் பெரும் சோகம்.
எந்த நேரமும் மாணவர்களுக்கு இடையே சண்டை நடப்பது போன்ற காட்சிகள் சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், கல்வி குறித்து இயக்குநர் சொல்லும் விசயங்கள் அந்த அலுப்பை போக்கி சற்று சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல், பள்ளி மாணவர்கள் இடையே காதல் என்று சொல்லாமல் கதையை வேறு திசையில் நகர்த்தியிருப்பதும் ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில், ‘ரங்கோலி’ வண்ணங்களின் வர்ணஜாலமாக இல்லை என்றாலும், ஒரு முறை பார்க்க வேண்டிய படமாக உள்ளது.
ரேட்டிங் 2.5/5