Latest News :

’ஜவான்’ திரைப்பட விமர்சனம்

935889dfd61ad02888500547be44989c.jpg

Casting : Shah Rukh Khan, Nayanthara, Vijay Sethupathi, Deepika Padukone, Priya Mani

Directed By : Atlee

Music By : Anirudh

Produced By : Red Chillies Entertainment - Gauri Khan and Gaurav Verm

 

ராணுவ வீரரான ஷாருக்கான், மோசடி ஒன்றை தட்டிக்கேட்கும் போது தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவரது மனைவி தீபிகா படுகோனே, தனது கணவரை கொலை செய்ய வந்தவர்களை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையிடம் தனது அப்பாவை பற்றி சொல்பவர், வளர்ந்து பெரியவன் ஆனவுடன் அப்பாவின் மீது சுமந்தப்பட்ட குற்றத்தை பொய் என்று நிரூபித்து, அவர் யார்? என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறார். வளர்ந்து பெரியவன் ஆகும் மகன் ஷாருக்கன், அம்மாவுக்கு செய்துக்கொடுத்த சத்தியத்தை எப்படி நிறைவேற்றுகிறார், என்பதை சமூக பிரச்சனைகளை சேர்த்து பரபரப்பாகவும், அதிரடி ஆக்‌ஷனோடும் சொல்வது தான் ‘ஜவான்’.

 

விக்ரம் ரத்தோர் என்ற வேடத்தில் தந்தையாகவும், அசாத் என்ற வேடத்தில் மகனாகவும் மிரட்டியிருக்கிறார் ஷாருக்கான். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி, காதல், எமோஷனல் என அனைத்து ஏரியாவிலும் ஏறி அடித்திருப்பவர், ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலை அழைத்து செல்கிறார். 

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா அதிரடி காட்சிகளில் மட்டும் இன்றி காதல் காட்சிகளிலும் அட்டகாசமாக நடித்து அப்ளாஷ் பெறுகிறார். இரண்டாம் பாதியில் சற்று மறைந்து போனாலும், க்ளைமாக்ஸ் நெருங்கும் போது மீண்டும் எண்ட்ரியாகி அசத்துகிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஸ்டைலிஷாக இல்லை என்றாலும் தனது பாவங்கள் மூலம் மிரட்டுகிறார். இருந்தாலும், அவருடைஇய வேடத்தை இன்னும் கூட விரிவாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

தீபிகா படுகோனே வரும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது. ஒரு சில காட்சிகளில் வந்து போனாலும் அவருடைய வேடமும், அதில் அவர் நடித்த விதமும் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது.

 

பிரியா மணி உள்ளிட்ட சிறை கைதிகளாக நடித்திருக்கும் பெண்கள் அனைவரும் வெடிகுண்டாக வெடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தாலும், காட்சிகளில் இருக்கும் உயிரோட்டத்தை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். ஷாருக்கனை மிக இளமையாக காட்டியிருப்பவர், இரட்டை வேட காட்சிகளை சிறு குறை கூட தெரியாதவாறு கையாண்டிருக்கிறார்.

 

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரன்டும் காட்சிகளின் வேகத்தை அதிகரிக்க செய்வதோடு, படத்தை விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறது.

 

அனல் அரசு, யானிக் பென் உள்ளிட்ட ஸ்டண்ட் இயக்குநர்களின் பணியும், படதொகுப்பாளர் ரூபனின் பணியும் கவனம் பெறுகிறது.

 

நாட்டில் நடக்கும் மோசடிகளின் பின்னணியை தோலுறிக்கும் வகையில் இயக்குநர் அட்லீ மற்றும் எஸ்.ரமணகிரிவாசன் திரைக்கதை அமைந்திருக்கிறது.

 

40 ஆயிரம் ரூபாய் கடனுக்காக விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள், 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாத தொழிலதிபர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்வது ஏன்? என்ற கேள்வியோடு தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாக பயணிக்கிறது. 

 

சமூக பிரச்சனைகளை பேசும் படம் என்றாலும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை மாஸாக காட்டியிருப்பதோடு, அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கும் இயக்குநட் அட்லீ, முழுக்க முழுக்க படத்தை கமர்ஷியலாக கையாண்டிருந்தாலும், சமூக பிரச்சனைகளை உயிரோட்டத்துடன் பேசி கைதட்டல் பெறுகிறார்.

 

கோலிவுட் குழுவினருடன் பாலிவுட்டில் எண்ட்ரியாகி அதிரடி காட்டியிருக்கும் இயக்குநர் அட்லீ, நிச்சயம் இனி பாலிவுட் சினிமாவிலும் முன்னணி இயக்குநராக வலம் வருவார் என்பதை இந்த ‘ஜவான்’ நிரூபித்துள்ளது.

 

மொத்தத்தில், ‘ஜவான்’ ஜாக்பாட் வெற்றி பெறுவது உறுதி.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery