Latest News :

‘களவாடிய பொழுதுகள்’ விமர்சனம்

e19536634caf04fa3be244d93d77fbce.jpg

Casting : Prabhu Deva, Prakash Raj, Bhumika

Directed By : Thangar Bachan

Music By : Bharadwaj

Produced By : Karunamoorthi

 

பிரபு தேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோரது நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கத்தில், கே.கருணாமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகமல் இருந்த நிலையில், இன்று வெளியாகியிருக்கிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்?

 

ஏழை வீட்டு பையன் பிரபு தேவாவும், பணக்கார வீட்டு பெண்ணான பூமிகாவும் உயிருக்கு உயிராக காதலித்து வர, சூழ்நிலை காரணமாக இவர்கள் காதல் தோல்விடைந்து பூமிகா பிரகாஷ் ராஜையும், பிரபு தேவா வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு யார் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார், என்று எதுவும் தெரியாத நிலையில், விதி பிரகாஷ் ராஜ் மூலமாக பூமிகாவையும், பிரபு தேவாவையும் சந்திக்க வைப்பதோடு, இருவரையும் ஒரே இடத்தில் வசிக்கவும் வைக்கிறது. பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திப்பதால், அவர்களுக்கு இடையே ஏற்படும் மாற்றங்களை உணர்வூப்பூர்வமாக சொல்லியிருப்பது தான் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் கதை.

 

அழகி படத்தின் மூலம் முதல் காதலை நினைவுப்படுத்திய இயக்குநர் தங்கர் பச்சான் இப்படத்தை அழகியின் இரண்டாம் பாகமாக இயக்கியிருப்பதோடு, அழகி படத்தில் பார்த்த அதே காதல் தோல்வியின் காயங்களையும், கஷ்ட்டங்களையும் காட்சிகளாக நகர்த்தியிருக்கிறார்.

 

பிரபு தேவா என்ற ஒரு நடன நடிகரை வெறும் நடிகராகவே இயக்குநர் தங்கர் பச்சான் காட்டியிருக்கிறார். ஏழ்மையான கால் டாக்‌ஷி டிரைவராக நடிப்பில் ஸ்கோர் செய்யும் பிரபு தேவா, கல்லூரி மாணவராக காதலிலும், அரசியல் பேசும் அதிரடி இளைஞராகவும் நடிப்பில் அசத்துகிறார். படம் முழுவதுமே பிரபு தேவாவின் நடிப்பு மட்டுமே பேசப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இயக்குநர், அவரை ஒரு இடத்தில் கூட நடனம் ஆட வைக்கவில்லை. அதே சமயம், ‘சேரன் எங்கே...” என்ற பாடலிலும் ஒரு பிட்டுக்கு மட்டும் பிரபு தேவாவின் நடன ஜாலத்தை காட்டிவிட்டு பிறகு அந்த பாடல் முழுவதுமே வார்த்தைகளை மட்டுமே ரசிகர்கள் கவனிக்க வேண்டும் என்பதிலும் இயக்குநர் தெளிவாக இருந்திருக்கிறார். மொத்தத்தில், பிரபு தேவாவுக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக உள்ளது.

 

பிரகாஷ் ராஜ், எப்போதும் போல நடிப்பால் தனது வேடத்திற்கு பலம் சேர்க்கிறார். தனது மனைவியின் காதல் விஷயத்தை தெரிந்துக் கொள்பவர், அவரது உணர்வுகளையும் புரிந்துக் கொண்டு பேசும் காட்சியில் நல்ல கணவராக பளிச்சிடுகிறார்.

 

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படம் அறிதான ஒன்று தான். அப்படி ஒரு அறிதான வாய்ப்பை பூமிகா நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கணவனுக்கு துரோகம் நினைக்காத மனைவியாக அதே சமயம், தனது காதலனுடன் சேர்ந்து வாழ முடியவில்லையே, என்ற ஏக்கத்தையும் நடிப்பால் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

பரத்வாஜ் இசையும், தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதை நமக்கு ஞாபகம் படுத்தாமல் கதையை நகர்த்தியிருக்கிறது. “சேரன் எங்கே...” பாடல் உணர்ச்சி பூர்வமாக உள்ளது.

 

காதல் தோல்வி தான் படத்தின் கதை என்றாலும், திரைக்கதையில் அரசியல்வாதிகளையும், பொழுது போக்கு என்ற பெயரில் கூத்தடிக்கும் டிவி சேனல்களையும் இயக்குநர் தங்கர் பச்சான் விளாசியிருப்பது கதைக்கு தேவையில்லாதது என்றாலும், சமூகத்திற்கு தேவையானதாக இருக்கிறது.

 

அழகியில் காதலன் பணக்காரராக இருக்க, அவரது முன்னாள் காதலி ஏழையாக இருப்பார். தனது காதலி கஷ்ட்டப்டக்கூடாது என்று காதலன் நினைத்து கஷ்ட்டப்படுவது போல, இந்த படத்திலும் ஏழையான பிரபு தேவாவின் நிலையை நினைத்து, அவரது முன்னாள் காதலியான பணக்கார பூமிகா கஷ்ட்டப்படுகிறார். 

 

இயக்குநர் தங்கர் பச்சானின் கதை ரொம்ப எளிமையானதாகவும், எதார்த்தம் என்ற பெயரில் திரைக்கதை வேகம் குறைவாகவும் நகர்ந்தாலும், நடிகர்களின் பர்பாமன்ஸ் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறது. இருந்தாலும், ஏற்கனவே தங்கர் பச்சானே இப்படி ஒரு படத்தை கொடுத்துவிட்டதால், மீண்டும் அதே ஸ்டைலில் ஒரு படம், அதே உணர்வு என்பதால், இந்த ‘களவாடிய பொழுதுகள்’ நமக்கு காதல் நினைவை மட்டுமே ஏற்படுத்தியதே தவிர, எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery