Latest News :

’ஐமா’ திரைப்பட விமர்சனம்

cef16c8b3e1ee65ec640907d0f917949.jpg

Casting : Yunuz, Elwin Juliet, Shanmugam Ramasamy, Akil Prabhakaran, Shaji, Sheera, Meha Maalu, Manoharan

Directed By : Raghul R.Krishna

Music By : KR Raghul

Produced By : Tamil Exotic Films - Shanmugam Ramasamy

 

தனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரே உறவான தனது அண்ணன் இறப்பால் மனம் உடைந்து போகும் நாயகி எல்வின் ஜூலியட் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். மறுபக்கம், உடல் நிலை பாதிப்பால் உயிருக்கு போராடும் தனது தாயை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் நாயகன் யூனஸ். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத இவர்கள் திடீரென்று கடத்தப்பட்டு ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அந்த இடத்தில் ஒலிக்கும் ஒரு குரல், “உங்கள் உடலில் விஷம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தப்பிக்கவில்லை என்றால், இறந்துவிடுவீர்கள்” என்று சொல்கிறது. அதன்படி, அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளில் இருவரும் வெற்றி பெறும் நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்றில், இருவரது உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் மருந்து இருப்பதாகவும், மற்றொரு வழியில் மருந்து மற்றும் மர்மம் இருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மருந்துடன் இந்த மர்மத்தின் பின்னணியையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் இருவரும், அதற்கான வழியில் பணிக்கிறார்கள். அந்த மர்மம் என்ன?, என்பதை இருவரும் தெரிந்துக் கொண்டார்களா?, இதை யார் எதற்காக செய்கிறார்கள்? என்பதை சொல்வது தான் ‘ஐமா’.

 

’ஐமா’ என்றால் கிரேக்க மொழியில் இரத்தம் என்று அர்த்தம். இரத்தத்தை கதைக்கருவாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருபப்தால் இந்த தலைப்பை வைத்திருக்கிறார்கள். 

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் யூனஸ், பார்ப்பதற்கு தளபதி விஜய் போலவே இருப்பது மட்டும் அல்ல அவருடைய ஒவ்வொரு அசைவும், வசன உச்சரிப்பும் அப்படியே விஜயின் ஜெராக்ஸ் போலவே இருக்கிறது. கொடுத்த வேடத்தை குறையில்லாமல் செய்திருக்கும் யூனஸ், தனது உருவத்தில் இருக்கும் விஜயை, தனது நடிப்பில் இருந்து அகற்றிவிட்டு, தனக்கான பாணியில் நடிக்க முயற்சித்தால் அவரது எதிர்கால சினிமா பயணத்திற்கு நலம் சேர்க்கும்.

 

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை எல்வின் ஜூலியட், வழக்கமான நாயகியாக அல்லாமல் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரத்தில் அளவாக நடித்து அசத்தியிருக்கிறார். 

 

வில்லனாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி புதுவரவு போல் அல்லாமல் மிக தெளிவாக நடித்திருக்கிறார். பயங்கரமான வில்லனாக மிரட்ட உருவம் தேவையில்லை, கண்களே போதும் என்பதை நிரூபித்திருக்கும் சண்முகம் ராமசாமி, தனது அமர்க்களமான நடிப்பு மற்றும் ஆக்ரோசமான கண்கள் மூலமாக பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். படம் முழுவதும் பஹத் பாசிலை நினைவுப்படுத்தும் வகையில் நடிப்பில் அசத்தியிருக்கும் சண்முகம் ராமசாமி, நல்ல வேடங்கள் கிடைத்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவார் என்பது உறுதி.

 

நாயகியின் அண்ணாக நடித்திருக்கும் நடிகர், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அவர்கள் வரும் காட்சிகள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது.

 

ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் காட்சிகளை தரமாக படமாக்குவதில் எந்தவித சமரசமும் செய்யவில்லை என்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

கே.ஆர்.ராகுலின் இசையில் படம் முழுவதும் இடம்பெறும் சிறு சிறு பாடல்கள் எங்கேயோ கேட்டதுபோல் இருந்தாலும், பின்னணி இசை புதிதாக இருப்பதோடு, படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே இருந்தாலும் படம் தொய்வில்லாமல் நகரும் படி காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அருண் ராகவ். 

 

இரத்தத்தை கதைக்கருவாக வைத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா, முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான படத்தை கொடுத்திருக்கிறார்.

 

நாயகன் கடத்தப்பட்டு, கை, கால்கள் கட்டிய நிலையில் ஒரு அறையில் இருக்கும் காட்சியிலேயே நம்மை கதையோடு பயணிக்க வைத்துவிடும் இயக்குநர், அங்கிருந்து அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பயணிக்க வைக்கிறார். நாயகன், நாயகி தப்பிப்பார்களா?  என்ற கேள்வியுடன் ரசிகர்களை சீட் நுணிக்கு கொண்டு செல்பவர், ஆபத்தான நிலையில் அவர்களுக்கு இடையே துளிரும் காதல் மற்றும் அதற்கான காரணத்தை மிக அழகாக சொல்லி ரசிக்க வைக்கிறார். 

 

சிறிய பட்ஜெட் மற்றும் குறைந்த கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, யூகிக்க முடியாத திருப்புமுனைகளோடு, ரசிகர்களை இரண்டு மணி நேரம் கட்டிப்போடும் வித்ததையை மிக சிறப்பாக செய்திருக்கும் இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

 

மொத்தத்தில், இந்த ’ஐமா’ சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற நல்ல படம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery