Latest News :

’ரத்தம்’ திரைப்பட விமர்சனம்

7cdfffb1767b22b94077b1d1e13f0307.jpg

Casting : Vijay Antony, Ramya Nambeesan, Mahima Nambiar, Nandhitha Swetha, Nizhalgal Ravi, Kalaiyarani, OAK Sundar, John Mahendran

Directed By : CS Amudhan

Music By : Kannan Narayanan

Produced By : Infiniti Film Ventures - Kamal Bohra, Pankaj Bohra, Lalitha Dhananjayan, B. Pradeep

 

உலக அளவில் புகழ் பெற்ற புலனாய்வு நிருபரான விஜய் ஆண்டனி, சொந்த காரணத்தால் அந்த வேலையில் இருந்து ஒதுங்கி, தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே, அவரது நண்பரான வானம் பத்திரிகையின் ஆசிரியர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். விசயம் அறிந்த விஜய் ஆண்டனி மீண்டும் பத்திரிகையாளராக பணியாற்ற தொடங்குகிறார். பத்திரிகை ஆசிரியரின் கொலை நடிகரின் வெறித்தனமான ரசிகரால் செய்யப்பட்டது என்று அனைவரும் நம்ப விஜய் ஆண்டனிக்கு மட்டும் சந்தேகம் ஏற்படுகிறது. 

 

இதையடுத்து, அந்த கொலையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, தனது நண்பர் மட்டும் அல்ல மேலும் சிலர் இதே முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, இந்த கொலைகளின் பின்னணியில் மிகப்பெரிய நெட் ஒர்க் ஒன்று இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அந்த நெட் ஒர்க் யார்?, கொலை செய்யப்பட்ட நபர்களுக்கும், அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதை கணிக்க முடியாத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக மட்டும் இன்றி இதுவரை கையாளப்படாத கிரைம் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருப்பது தான் ‘ரத்தம்’.

 

படத்தின் தலைப்பு ‘ரத்தம்’-ஆக இருந்தாலும், முதல் காட்சியை தவிர எந்த ஒரு இடத்திலும் ரத்தத்தை காட்டாமல், அதே சமயம் படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் என்ன? என்று  இறுதி வரை யூகிக்க முடியாதபடி படம் படு சுவாரஸ்யமாக நகர்கிறது.

 

அழுத்தமான முகம், தெளிவான பார்வை, கூர்மையான சிந்தனை, வேகமான செயல் என அனைத்து உணர்வுகளை மிக நேர்த்தியாக தனது நடிப்பில் வெளிக்காட்டியிருக்கும் நடிகர் விஜய் ஆண்டனியை தவிர்த்து வேறு எந்த ஒரு நடிகரும் இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு கச்சிதமாக பொருந்திருக்க மாட்டார்கள். ஒரு புலனாய்வு நிருபர் எப்படி இருப்பார், என்ற கற்பனைக்கு உயிர் அளித்திருக்கும் வகையில் மிக சிறப்பாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு அசைவுகளும் அவரது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி காட்சிகளுக்கும் மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது.

 

ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று நடிகைகளும் நாயகிகளாக அல்லாமல் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரமாக பயணித்திருக்கிறார்கள். மூன்று பேரும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், மஹிமா நம்பியாரின் அழகும், அதனுள் ஒளிந்திருக்கும் ஆபத்தும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.

 

நிழல்கள் ரவி, ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல், கலைராணி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்ப சரியான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோரது பணிகள் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. குறிப்பாக இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. “ரத்தம்...ரத்தம்...” தீம் பாடல் மற்றும் புரோமோ பாடல் இரண்டுமே கதைக்களத்திற்கு ஏற்ற பாடல்களாக இருப்பதோடு, முனுமுனுக்க  வைக்கிறது.

 

ஒரு கொலை, குற்றவாளி யார்?, எதற்காக அந்த கொலையை செய்தார்? என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட பிறகும், அந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்து, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடனும், கணிக்க முடியாத திருப்பங்களுடனும் மிக வித்தியாசமான முறையில் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் சி.எஸ்.அமுதன், இதுவரை க்ரைம் திரில்லர் வகை கதைக்களத்தில் சொல்லப்படாத ஒரு முறையை கையாண்டிருக்கிறார்.

 

படத்தின் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை பதற வைத்துவிடும் இயக்குநர் சி.எஸ்.அமுதன், அதன் பிறகு விஜய் ஆண்டனியின் அறிமுகம், அவரது வாழ்க்கை என்று மெல்ல மெல்ல நம்மை கதைக்குள் அழைத்துச் செல்பவர் படம் தொடங்கி 20 வது நிமிடத்திற்குப் பிறகு புலனாய்வு பத்திரிகையாளரின் உலத்தில் நம்மை முழுமையாக மூழ்கடித்து விடுகிறார்.

 

படத்தில் இடம் பெறும் சம்பவங்கள் அனைத்தும் நாம் தினமும் செய்திகளாக கடந்து போககூடிய சம்பவங்கள் என்பதால், கூடுதல் கவனம் பெறுகிறது. அதிலும், அந்த சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமையை உருவாக்கி, அதன் பின்னணியில் மிகப்பெரிய சஸ்பென்ஸை வைத்து இயக்குநர் அமுதன் எழுதியிருக்கும் திரைக்கதை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

 

புலனாய்வு நிருபர் மற்றும் அவரது பணி ஆகியவற்றை மிக விவரமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ஒருவரின் விவரங்களை தெரிந்துக்கொள்வதோடு, அவர்களின் மனநிலையையும் எளிதியில் அறிந்துக்கொள்ளலாம் என்பதையும் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.

 

கிரைம் த்ரில்லர் கதைக்களங்கள் என்றாலே வழக்கமான ஒரு பாணி இருக்கும், குறிப்பாக குற்றவாளி யார்? என்று தெரிந்த பிறகு அவர் எதனால் இப்படி செய்கிறார், என்ற பின்னணியை நிச்சயம் சொல்வார்கள். ஆனால், அத்தகைய பாணியை ஓரம் கட்டி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க புதிய பாணியில், இதுவரை பார்த்திராத கிரைம் த்ரில்லர் படம் ஒன்றை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

 

மொத்தத்தில், கிரைம் த்ரில்லர் வகை கதைக்களங்களுக்கு புதிய பாதை அமைத்திருக்கும் இந்த ‘ரத்தம்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery