Casting : Vikram Ramesh, Swayamsiddha, Shivakumar Raju, Karthik Venkatraman
Directed By : Vikram Ramesh
Music By : Kalacharan
Produced By : Hungry Wolf - Karthik Venkatraman
கால் டாக்ஸி டிரைவரான நாயகன் விக்ரம் ரமேஷ், நாயகி சுவயம்சித்தாவை பிக்கப் செய்து அவருடைய வீட்டில் ட்ராம் செய்யும் போது, அவரின் அழைப்பின் பேரில் அவருடன் உட்கார்ந்து மது அருந்தி போதையாகிறார். போதை தெளிந்து அங்கிருந்து கிளம்பும் போது ஒரு அறையில், ஒரு ஆண் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைய, மறுப்பக்கம் சுவயம்சித்த திடீரென்று மயக்கமடைந்து விழுகிறார். அதே சமயம், அந்த வீடு டிஜிட்டல் லாக் சிஸ்டம் என்பதால், அவரால் கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்.
இதற்கிடையே, அந்த வீட்டுக்குள் திருடுவதற்காக கார்த்திக் வெங்கட்ராமன் நுழைய அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ-வான சிவகுமார் ராஜுவும் நுழைகிறார். இப்போது மூன்று பேரும் அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொள்ள அவர்கள் தப்பித்தார்களா?, இல்லையா?, சுவயம்சித்தாவுக்கு என்ன நடந்தது?, ஆண் சடலம் யார்? போன்ற கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாக சொல்வது தான் ‘எனக்கு எண்டே கிடையாது’.
அறிமுக நடிகர் விக்ரம் ரமேஷ், முதல் படம் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். சுவயம்சித்தாவை அவர் பார்க்கும் விதம், அவருடன் சேர்ந்து மது அருந்துவது பிறகு அப்படி இப்படி என்று இளைஞர்கள் வயிறு எரியும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சுவயம்சித்தா ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் கிரங்கடித்து விடுகிறார்.
எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் சிவகுமார் ராஜு, திருடனாக நடித்திருக்கும் கார்த்திக் வெங்கட்ராமன் இருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கலாச்சரனின் இசையில் “ஃபன் டமக்கா...” பாடல் ஆட்டம் போட வைப்பதோடு, கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறது. பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும், அந்த உணர்வே தெரியாதபடி, பல்வேறு கோணங்களில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், வண்ணங்கள் மற்றும் விளக்குகள் மூலம் அந்த வீட்டையே ஒரு கதாபாத்திரமாக நம் கண்முன் நிறுத்திவிடுகிறார்.
படத்தொகுப்பாளர் முகன்வேல் நேர்த்தியான படத்தொகுப்பு படத்தை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் ரமேஷ் தான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை மிக சுவாரஸ்யமாக அதே சமயம் பரபரப்பாக சொல்லிய விதம் வியக்க வைக்கிறது.
முழு படமும் ஒரு வீட்டுக்குள், மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையே நடந்தாலும், எந்த இடத்திலும் போராடிக்காதவாறு சில பல விசயங்களை வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்திருப்பவர், முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை ஜாலியான படமாகவும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘எனக்கு எண்டே கிடையாது’ ரசிகர்களை நிச்சயம் கொண்டாட வைக்கும்.
ரேட்டிங் 3.5/5